பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


255. பரிந்துரைகள் முன்ஒப்பளிப்புகள் ஆகியவை பற்றிய வேண்டுறுத்தங்களை நெறிமுறை சார்ந்த பொருட்பாடுகளாக மட்டுமே கொள்ளுதல் வேண்டும் :

நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டம் மற்றும் அதன் வகையம் எதற்கும், இந்த அரசமைப்பில்-

(அ)ஆளுநரின் பரிந்துரை வேண்டுறுத்தப்பட்டவிடத்து, ஆளுநர் அல்லது குடியரசுத்தலைவர்,
(ஆ) இராஜப்பிரமுகரின் பரிந்துரை வேண்டுறுத்தப்பட்டவிடத்து, இராஜப் பிரமுகர் அல்லது குடியரசுத்தலைவர்,
(இ) குடியரசுத்தலைவரின் பரிந்துரை அல்லது முன்ஒப்பளிப்பு வேண்டுறுத்தப்பட்டவிடத்து, குடியரசுத்தலைவர்

ஏற்பிசைவு அளித்துவிட்டநிலையில், இந்த அரசமைப்பின்படி வேண்டுறுத்தப்படும் பரிந்துரை அல்லது முன்ஒப்பளிப்பு அளிக்கப்படவில்லை என்ற காரணத்தால் மட்டுமே அவை செல்லாநிலையென ஆவதில்லை.

அத்தியாயம் II
நிருவாகத் தொடர்புநிலைகள்
பொதுவியல்

256. மாநிலங்களின் மற்றும் ஒன்றியத்தின் கடமைப்பாடு :

மாநிலம் ஒவ்வொன்றின் ஆட்சி அதிகாரமும், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் அந்த மாநிலத்திற்குப் பொருந்துறுகிற நிலவுறு சட்டங்களுக்கும் இணங்கி இயங்குவதை உறுதிசெய்யும் வகையில் செலுத்தப்படுதல் வேண்டும்; மேலும், மேற்சொன்ன நோக்கம் நிறைவேறுவதற்குத் தேவையென இந்திய அரசாங்கம் கருதும் பணிப்புரைகளை மாநிலம் எதற்கும் இடுவதும் ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தில் அடங்கும்.

257. குறித்தசில நேர்வுகளில் மாநிலங்கள் மீது ஒன்றியத்திற்குள்ள கட்டாள்கை :

(1) மாநிலம் ஒவ்வொன்றின் ஆட்சி அதிகாரமும், ஒன்றியத்து ஆட்சி அதிகாரம் செலுத்தப்படுவதற்குத் தடங்கலோ குந்தகமோ இல்லாதவாறு செலுத்தப்படுதல் வேண்டும்; மேலும், மேற்சொன்ன நோக்கம் நிறைவேறுவதற்குத் தேவையென இந்திய அரசாங்கம் கருதும் பணிப்புரைகளை மாநிலம் எதற்கும் இடுவதும் ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தில் அடங்கும்.

(2) தேசிய அல்லது படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தவை எனப் பணிப்புரையில் விளம்பப்பபடும் செய்தித் தொடர்புச் சாதனங்களை அமைத்தல், அவற்றைப் பேணிவருதல் ஆகியவை குறித்த பணிப்புரைகளை மாநிலம் எதற்கும் இடுவது ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தில் அடங்கும்:

வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், நெடுஞ்சாலைகள் அல்லது நீர்வழிகள் எவற்றையும், தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது தேசிய நீர்வழிகள் என விளம்புவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரத்தையோ அவ்வாறு விளம்பப்பட்ட நெடுஞ்சாலைகள் அல்லது நீர்வழிகளைப் பொறுத்து ஒன்றியத்திற்குள்ள அதிகாரத்தையோ, கடற்படை, தரைப்படை, வான்படை ஆகியவற்றைப் பொறுத்த தனது செயற்பணிகளில் அடங்கும் செய்தித் தொடர்புச் சாதனங்களை அமைப்பதற்கும், அவற்றைப் பேணிவருவதற்கும் ஒன்றியத்திற்குள்ள அதிகாரத்தையோ கட்டுப்படுத்துவதாகக் கருதப்படுதல் ஆகாது.

(3) ஒரு மாநிலத்திலுள்ள இருப்புப்பாதைகளைப் பாதுகாப்பதற்கென எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த மாநிலத்திற்குப் பணிப்புரைகள் இடுவதும் ஒன்றியத்து ஆட்சி அதிகாரத்தில் அடங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/143&oldid=1469013" இலிருந்து மீள்விக்கப்பட்டது