பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


252. இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்காக அவற்றின் இசைவுடன் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும், அத்தகைய சட்டத்தைப் பிற மாநிலம் எதுவும் ஏற்றுமேற்கொள்ளுதலும் :

(1) 249, 250 ஆகிய உறுப்புகளில் வகைசெய்யப்பட்டுள்ள முறையில் தவிர, மாநிலங்களுக்காகச் சட்டமியற்றுவதற்கு, நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றிராத பொருட்பாடுகளில் எதனையும், தத்தம் மாநிலங்களில் நாடாளுமன்றம் சட்டத்தினால் ஒழுங்குறுத்துவது விரும்பத்தக்கதென இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்கள் கருதி, அதன்படி அந்த மாநிலங்களின் சட்டமன்ற அவைகள் அனைத்தும் தீர்மானங்களை நிறைவேற்றுமாயின் அதற்கிணங்க, அந்தப் பொருட்பாட்டை அவ்வாறு ஒழுங்குறுத்துவதற்கான சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றுவது சட்டமுறையானது ஆகும்; அவ்வாறு இயற்றப்படும் சட்டம் எதுவும், அத்தகைய மாநிலங்களுக்குப் பொருந்துறுவதாகும்; மேலும், பின்னர் பிற மாநிலம் எதுவும், அந்த மாநிலச் சட்டமன்ற அவையினால் அல்லது இரண்டு அவைகள் இருக்குமிடத்து, அவ்விரண்டு அவைகளினாலும் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின்வழி அச்சட்டத்தை ஏற்று மேற்கொள்ளுமாயின், அச்சட்டம் அந்தப் பிற மாநிலத்திற்கும் பொருந்துறுவதாகும்.

(2) நாடாளுமன்றத்தால் அவ்வாறு நிறைவேற்றப்படும் சட்டம் எதுவும், அதே போன்ற முறையில் நிறைவேற்றப்படும் அல்லது ஏற்றுமேற்கொள்ளப்படும் நாடாளுமன்றச் சட்டம் ஒன்றினால் திருத்தப்படலாம் அல்லது நீக்கறவு செய்யப்படலாம்; ஆனால், அச்சட்டம் பொருந்துறும் மாநிலம் எதனையும் பொருத்தவரை, அந்த மாநிலத்தின் சட்டமன்றச் சட்டம் ஒன்றினால் அது திருத்தப்படுதலோ நீக்கறவு செய்யப்படுதலோ ஆகாது.

253. பன்னாட்டு உடன்பாடுகளைச் செல்திறப்படுத்துவதற்காகச் சட்டமியற்றுதல் :

இந்த அத்தியாயத்தின் மேலே கண்ட வகையங்களில் எது எவ்வாறிருப்பினும், பிற நாட்டுடன் அல்லது நாடுகளுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை, உடன்பாடு அல்லது இணங்காறு எதனையும் அல்லது பன்னாட்டு மாநாடு, கழகம் அல்லது பிற குழுமத்தில் எடுக்கப்படும் முடிவு எதனையும் செயற்படுத்துவதற்காக, இந்திய ஆட்சிநிலவரை முழுவதற்கும் அல்லது அதன் பகுதி எதற்கும் சட்டம் எதனையும் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் அதிகாரம் உடையது ஆகும்.

254. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் மாநிலங்களின் சட்டமன்றங் களினால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு :

(1) மாநிலம் ஒன்றின் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் வகையம் எதுவும், நாடாளுமன்றம் தனக்குள்ள தகுதிறனைக் கொண்டு இயற்றும் சட்டம் ஒன்றின் வகையம் எதற்கும் அல்லது ஒருங்கியல் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் ஒன்றைப் பொறுத்து நிலவுறும் சட்டம் ஒன்றின் வகையம் எதற்கும் முரணாக இருக்குமாயின், நாடாளுமன்றம் இயற்றிய சட்டம், அந்த மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டத்திற்கு முன்போ பின்போ நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அச்சட்டமே அல்லது, நேர்வுக்கேற்ப, நிலவுறும் சட்டமே (2)ஆம் கூறின் வகையங்களுக்கு உட்பட்டு, மேலோங்கி நிற்கும்; அந்த மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் அவ்வாறு முரணாக உள்ள அளவிற்கு, இல்லாநிலையது ஆகும்.

(2) ஒருங்கியல் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனைப் பொறுத்தும், ஒரு மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டம், அதே பொருட்பாட்டினைப் பொறுத்து நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு முந்தைய சட்டத்தின் அல்லது ஒரு நிலவுறும் சட்டத்தின் வகையங்களுக்கு முரணான வகையம் எதனையும் கொண்டிருக்குமிடத்து, மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட அத்தகைய சட்டம், ஏற்கெனவே குடியரசுத் தலைவரின் ஓர்வுக்காக வைக்கப்பட்டிருந்து அவருடைய ஏற்பிசைவையும் பெற்றிருக்குமாயின், அதுவே அந்த மாநிலத்தில் மேலோங்கி நிற்கும்:

வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், மாநிலச் சட்டமன்றத்தால் அவ்வாறு இயற்றப்பட்ட சட்டத்துடன் சேர்க்கின்ற, அதனைத் திருத்துகின்ற, மாற்றுகின்ற அல்லது நீக்கறவு செய்கின்ற சட்டம் ஒன்று உள்ளடங்கலாக, அதே பொருட்பாடு பொறுத்த சட்டம் எதனையும், எச்சமயத்திலும் நாடாளுமன்றம் இயற்றுவதற்குத் தடையூறு ஆவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/142&oldid=1469012" இலிருந்து மீள்விக்கப்பட்டது