பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


(2). (1) ஆம் கூறின்படி நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானம், ஓராண்டிற்கு மேற்படாதவாறு அத்தீர்மானம் குறித்துரைக்கும் காலஅளவிற்குச் செல்லாற்றலில் இருந்துவரும்:

வரம்புரையாக: அத்தகைய தீர்மானம் தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவருவதற்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று (1) ஆம் கூறில் வகை செய்யப்பட்ட முறையில் நிறைவேற்றப்படுமாயின், அவ்வாறு நிறைவேற்றப்படுந்தோறும், முந்தைய தீர்மானம் இந்தக் கூறின்படி எந்தத் தேதியில் செல்லாற்றல் அற்றுப்போகுமோ அந்தத் தேதியிலிருந்து மேலும் ஓராண்டுக் காலஅளவிற்கு, தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவரும்.

(3). (1) ஆம் கூறின்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாயிலாக மட்டுமே தகுதிறம் பெற்று, அதன்படி நாடாளுமன்றம் இயற்றும் எந்தச் சட்டமும், அத்தீர்மானம் செல்லாற்றல் அற்றுப்போய் ஆறுமாதக் காலஅளவு கழிவுற்றதன்மேல், நாடாளுமன்றம் தகுதிறம் பெற்றிராத அளவிற்குச் செல்திறம் அற்றதாகிவிடும்; ஆனால், அக்காலஅளவு கழிவுறுவதற்கு முன்பு செய்யப்பட்டவை அல்லது செய்யாதுவிடப்பட்டவை பாதிக்கப்படுவதில்லை.

250. நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டில் இருக்குங்கால், மாநிலத்துப் பட்டியலிலுள்ள எந்தப் பொருட்பாட்டினைப் பொறுத்தும் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் :

(1) இந்த அத்தியாயத்தில் எது எவ்வாறிருப்பினும், நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால், மாநிலத்துப் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனைப் பொறுத்தும் இந்திய ஆட்சிநிலவரை முழுவதற்கும் அல்லது அதன் பகுதி எதற்கும் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றம் அதிகாரம் உடையது ஆகும்.

(2) நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டதன் வாயிலாக மட்டுமே தகுதிறம் பெற்று அதன்படி நாடாளுமன்றம் இயற்றும் எந்தச் சட்டமும், அந்தச் சாற்றாணை செயற்பாடு அற்றுப்போய் ஆறு மாதக் காலஅளவு கழிவுறுவதன்மேல், நாடாளுமன்றம் தகுதிறம் பெற்றிராத அளவிற்குச் செல்திறம் அற்றதாகிவிடும்; ஆனால் அக்காலஅளவு கழிவுறுவதற்கு முன்பு செய்யப்பட்டவை அல்லது செய்யாதுவிடப்பட்டவை பாதிக்கப்படுவதில்லை.

251. நாடாளுமன்றத்தால் 249, 250 ஆகிய உறுப்புகளின்படி இயற்றப்பட்ட சட்டங்களுக்கும், மாநிலச் சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு :

249, 250 ஆகிய உறுப்புகளில் உள்ள எதுவும், சட்டம் எதனையும் இயற்றுவதற்கு இந்த அரசமைப்பின்படி ஒரு மாநிலச் சட்டமன்றத்திற்குள்ள அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதில்லை; ஆனால், ஒரு மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டம் ஒன்றின் வகையம் எதுவும், மேற்சொன்ன உறுப்புகளில் ஒன்றின்படியுள்ள அதிகாரத்தின்கீழ் நாடாளுமன்றம் இயற்றிய ஒரு சட்டத்தின் வகையம் எதற்கும் முரணாக இருக்குமாயின், நாடாளுமன்றம் இயற்றிய சட்டமே, அது மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டத்திற்கு முன்போ பின்போ நிறைவேற்றப்பட்டிருந்தாலும், மேலோங்கி நிற்கும்; மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டம், எந்த அளவிற்கு முரணாகவுள்ளதோ அந்த அளவிற்கு, நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் தொடர்ந்து செல்திறம் பெற்றிருக்கின்ற காலம் வரையில் செயற்பாடு அற்றதாகிவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/141&oldid=1469011" இலிருந்து மீள்விக்கப்பட்டது