பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


(2) நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் எதனையும், அது ஆட்சிநிலவரைக்குப் புறத்தேயும் செயற்பாடு உடையது என்னும் காரணத்தால், செல்லாநிலையது எனக் கொள்ளுதல் ஆகாது.

246. நாடாளுமன்றத்தாலும், மாநிலங்களின் சட்டமன்றங்களாலும் இயற்றப்படும் சட்டங்களின் உறுபொருள் :

(1). (2), (3) ஆகிய கூறுகளில் எது எவ்வாறிருப்பினும், ஏழாம் இணைப்புப்பட்டியலிலுள்ள (இந்த அரசமைப்பில் "ஒன்றியத்துப் பட்டியல்" எனக் குறிப்பிடப்படும்) 1 ஆம் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனைப் பொறுத்தும் சட்டங்கள் இயற்றுவதற்கு, நாடாளுமன்றமே தனிநிலை அதிகாரம் உடையது ஆகும்.

(2). (3) ஆம் கூறில் எது எவ்வாறிருப்பினும், ஏழாம் இணைப்புப்பட்டியலிலுள்ள (இந்த அரசமைப்பில் "ஒருங்கியல் பட்டியல்' எனக் குறிப்பிடப்படும்) IIIஆம் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனைப் பொறுத்தும் சட்டங்கள் இயற்றுவதற்கு நாடாளுமன்றமும், (1)ஆம் கூறுக்கு உட்பட்டு மாநிலம் ஒன்றன் சட்டமன்றமும், அதிகாரம் உடையன ஆகும்.

(3). (1), (2) ஆகிய கூறுகளுக்கு உட்பட்டு, ஏழாம் இணைப்புப்பட்டியலிலுள்ள (இந்த அரசமைப்பில் "மாநிலத்துப் பட்டியல்" எனக் குறிப்பிடப்படும்) IIஆம் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனைப் பொறுத்தும் மாநிலம் ஒன்றன் சட்டமன்றமே, அந்த மாநிலத்திற்கு அல்லது அதன் பகுதி எதற்கும் சட்டங்கள் இயற்றுவதற்குத் தனிநிலை அதிகாரம் உடையது ஆகும்.

(4) மாநிலம் எதிலும் உள்ளடங்கியிராத இந்திய ஆட்சிநிலவரையின் பகுதி எதற்கும், எந்தவொரு பொருட்பாட்டினைப் பொறுத்தும், அந்தப் பொருட்பாடு மாநிலத்துப் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ளதாக இருப்பதாயினும் கூட, சட்டங்கள் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் அதிகாரம் உடையது ஆகும். வகைசெய்வதற்கு

247. குறித்தசில கூடுதல் நீதிமன்றங்களை நிறுவ நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் :

இந்த அத்தியாயத்தில் எது எவ்வாறிருப்பினும், ஒன்றியத்துப் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள ஒரு பொருட்பாடு பொறுத்து நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களை அல்லது நிலவுறும் சட்டங்களை மேலும் திறம்படச் செயற்படுத்துவதற்காகக் கூடுதல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நாடாளுமன்றம், சட்டத்தினால் வகைசெய்யலாம்.

248. சட்டமியற்றுவதற்கான எஞ்சு அதிகாரங்கள் :

(1) ஒருங்கியல் பட்டியலிலும், மாநிலத்துப் பட்டியலிலும் எண்ணிடப்பட்டிராத பொருட்பாடு எதனைப் பொறுத்தும் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றமே தனிநிலை அதிகாரம் உடையது ஆகும்.

(2) அத்தகைய அதிகாரத்தில், அந்த இரண்டு பட்டியல்களிலும் குறிப்பிடப்பட்டிராத வரி எதனையும் விதிக்கும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமும் அடங்கும்.

249. நாட்டின் நலன் கருதி மாநிலத்துப் பட்டியலிலுள்ள பொருட்பாடு எதனைப் பொறுத்தும் சட்டமியற்ற நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் :

(1) இந்த அத்தியாயத்தின் மேலே கண்ட வகையங்களில் எது எவ்வாறிருப்பினும், மாநிலங்களவை, வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக் குறையாதவர்களால் ஆதரிக்கப்படும் ஒரு தீர்மானத்தின் வாயிலாக, மாநிலத்துப் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனையும் குறித்துரைத்து, அதனைப் பொறுத்து நாடாளுமன்றம் சட்டமியற்ற வேண்டியது நாட்டின் நலனுக்கு அவசியமானது அல்லது உகந்தது என்று விளம்புமாயின், அந்தத் தீர்மானம் செல்லாற்றலில் இருந்து வருங்காலத்தில், அந்தப் பொருட்பாடு பொறுத்து இந்திய ஆட்சிநிலவரை முழுமைக்கும் அல்லது அதன் பகுதி எதற்கும் நாடாளுமன்றம் சட்டங்கள் இயற்றுவது சட்டமுறையானது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/140&oldid=1469009" இலிருந்து மீள்விக்கப்பட்டது