பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


261. அரசின் செயற்பாடுகள், பதிவணங்கள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் :

(1) ஒன்றியத்து மற்றும் ஒவ்வொரு மாநிலத்து அரசின் செயற்பாடுகள், பதிவணங்கள், நீதித் துறை நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீது இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் முழுநிறை நம்பிக்கையும் நன்மதிப்பும் வைக்கப்படுதல் வேண்டும்.

(2). (1) ஆம் கூறில் சுட்டப்பட்ட செயற்பாடுகள், பதிவணங்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றை மெய்ப்பிக்க வேண்டியதும், அவற்றின் செல்திறனைத் தீர்மானிக்க வேண்டியதும் எந்த முறையில், எந்த நிலையில் இருத்தல் வேண்டும் என்பது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தில் வகைசெய்யப்பட்டவாறு இருத்தல் வேண்டும்.

(3). இந்திய ஆட்சிநிலவரையின் பகுதி எதிலுமுள்ள உரிமையியல் நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்புரைகள் அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணைகள், அந்த ஆட்சிநிலவரை எங்கனும் சட்டத்திற்கிணங்க நிறைவேற்றப்படத்தகுவன ஆகும்.

நீர் தொடர்பான பூசல்கள்

262. மாநிலங்களிடையேயான ஆறுகளின் அல்லது ஆற்றுப்பள்ளதாக்குகளின் நீர் தொடர்பான பூசல்களுக்கு நீதிமுறைத் தீர்வு :

(1) மாநிலங்களிடையேயான ஆறு அல்லது ஆற்றுப்பள்ளத்தாக்கு ஒன்றின் அல்லது அதிலுள்ள நீரின் பயன்பாடு, பகிர்ந்தளிப்பு அல்லது அதன்மீது கட்டாள்கை பொறுத்த பூசல் அல்லது முறையீடு எதனையும் நீதிமுறையில் தீர்வு செய்வதற்கு நாடாளுமன்றம் சட்டத்தினால் வகை செய்யலாம்.

(2) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், (1)ஆம் கூறில் சுட்டப்பட்ட பூசல் அல்லது முறையீடு எதனையும் பொறுத்து, உச்ச நீதிமன்றமோ வேறெந்த நீதிமன்றமோ அதிகாரம் செலுத்துதல் ஆகாது என்று நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்யலாம்.

மாநிலங்கள் இயைந்து இயங்குதல்

263. மாநிலங்களிடையமை மன்றம் தொடர்பான ஏற்பாடுகள் :

குடியரசுத்தலைவர், பின்வரும் கடமைகள் சார்த்தப்பட்ட மன்றம் ஒன்றை நிறுவுவது பொதுநலன்களுக்கு உதவும் என்று கருதுங்கால், அவர் அத்தகையதொரு மன்றத்தை ஓர் ஆணை வாயிலாக நிறுவுவதும், அம்மன்றம் புரிய வேண்டிய கடமைகளின் தன்மை, அதன் அமைப்பு, நெறிமுறை இவற்றை வரையறுப்பதும் சட்டமுறையானது ஆகும்

(அ) மாநிலங்களிடையே எழும் பூசல்களை விசாரணை செய்து, அவற்றின்மீது கருத்துரை வழங்குதல்;
(ஆ) மாநிலங்களில் சிலவோ அனைத்துமோ அல்லது ஒன்றியத்துடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களோ பொதுவான அக்கறை கொண்டுள்ள பொருள்களைக் குறித்து ஆய்வு செய்தல் மற்றும் ஆய்வுரையளித்தல்; அல்லது
(இ)அத்தகைய ஆய்வுப்பொருள் எதன்மீதும் பரிந்துரைகளை, குறிப்பாக அந்தப் பொருள் தொடர்பான கொள்கை, நடவடிக்கை ஆகியவற்றைச் சிறந்த முறையில் ஒருங்கிணைப்பதற்கான பரிந்துரைகளைச் செய்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/145&oldid=1469016" இலிருந்து மீள்விக்கப்பட்டது