பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


பகுதி XII
நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் உரிமைவழக்குகள்
அத்தியாயம் I நிதி
பொதுவியல்

264. பொருள்கோள் :

இந்தப் பகுதியில், “நிதி ஆணையம்” என்பது, 280ஆம் உறுப்பின்படி அமைக்கப்படும் ஒரு நிதி ஆணையம் என்று பொருள்படும்.

265. சட்டத்தினால் பெறும் அதிகாரத்தின்படி அல்லாமல், வரிகளை விதித்தல் ஆகாது :

வரி எதனையும் சட்டத்தினால் பெறும் அதிகாரத்தின்படி அல்லாமல், விதித்தலோ ஈட்டுதலோ ஆகாது.

266. இந்தியாவின் மற்றும் மாநிலங்களின் திறள் நிதியங்களும் அரசுப் பொதுக் கணக்குகளும் :

(1) 267ஆம் உறுப்பின் வகையங்களுக்கும், குறித்தசில வரிகள், தீர்வைகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் நிகரத் தொகையை, முழுமையாகவோ அதில் ஒரு பகுதியினையோ மாநிலங்களுக்குக் குறித்தொதுக்குவது பொறுத்த இந்த அத்தியாயத்தின் வகையங்களுக்கும் உட்பட்டு, இந்திய அரசாங்கம் பெறும் வருவாய்கள் அனைத்தும், கருவூலச் சீட்டுகளின் வெளியீடு, பெறுகடன்கள் அல்லது வழிவகை முன்பணத்தொகைகள் வாயிலாக அரசாங்கம் எழுப்பும் பெறுகடன்கள் அனைத்தும், மற்றும் பெறுகடன்கள் திருப்பிச்செலுத்தப்படும் வகையில் அந்த அரசாங்கம் பெறும் பணத்தொகைகள் அனைத்தும், "இந்தியாவின் திரள்நிதியம்" என்னும் பெயரால் ஒரு திரள்நிதியமாக அமைவுறும்; மேலும், மாநில அரசாங்கம் பெறும் வருவாய்கள் அனைத்தும், கருவூலச் சீட்டுகள் வெளியீடு, பெறுகடன்கள், வழிவகை முன்பணத்தொகைகள் வாயிலாக அந்த அரசாங்கம் எழுப்பும் பெறுகடன்கள் அனைத்தும் மற்றும் பெறுகடன்கள் திருப்பிச் செலுத்தப்படும் வகையில் அந்த அரசாங்கம் பெறும் பணத்தொகைகள் அனைத்தும், "மாநிலத் திரள்நிதியம்” என்னும் பெயரால் ஒரு திரள்நிதியமாக அமைவுறும்.

(2) இந்திய அரசாங்கத்தால் அல்லது அதன் சார்பாக, மாநில அரசாங்கத்தால் அல்லது அதன் சார்பாகப் பெறப்படும் பிற பொதுப் பணத்தொகைகள் அனைத்தும், இந்திய அரசுப் பொதுக்கணக்கில் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாநில அரசுப் பொதுக்கணக்கில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

(3) சட்டத்திற்கிணங்கியவாறும், இந்த அரசமைப்பில் வகைசெய்யப்பட்டுள்ள நோக்கங்களுக்காகவும் வகைசெய்யப்பட்டுள்ள முறையிலும் அல்லாமல் இந்தியத் திரள்நிதியத்திலிருந்தோ ஒரு மாநிலத் திரள்நிதியத்திலிருந்தோ பணம் எதனையும் ஒதுக்களிப்புச் செய்தல் ஆகாது.

267. எதிரதாக்காப்பு நிதியம் :

(1) "இந்திய எதிரதாக்காப்புநிதியம்" என்னும் பெயரால், வசக்கட்டுப்பணம் போல்வதான ஓர் எதிரதாக்காப்பு நிதியத்தை நாடாளுமன்றம் சட்டத்தினால் நிறுவலாம்; அச்சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் தொகைகள் அவ்வப்போது அந்நிதியத்தில் செலுத்தப்படுதல் வேண்டும்; மேலும், எதிர்பாராச் செலவுகளுக்கு 115 ஆம் உறுப்பு அல்லது 116ஆம் உறுப்பின்படி நாடாளுமன்றம் சட்டத்தினால் அனுமதி அளிக்கும்வரை, அச்செலவுகளைச் செய்யும்பொருட்டு மேற்சொன்ன நிதியத்திலிருந்து முன்பணத்தொகைகளைக் குடியரசுத்தலைவர் வழங்க இயலும் வகையில் அந்த நிதியம் அவருடைய பொறுப்பில் வைக்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/146&oldid=1469017" இலிருந்து மீள்விக்கப்பட்டது