பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


(2) "மாநில எதிரதாக்காப்பு நிதியம்” என்னும் பெயரால், வசக்கட்டுப்பணம் போல்வதான ஓர் எதிரதாக்காப்பு நிதியத்தை மாநிலம் ஒன்றன் சட்டமன்றம் சட்டத்தினால் நிறுவலாம்; அச்சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் தொகைகள் அவ்வப்போது அந்நிதியத்தில் செலுத்தப்படுதல் வேண்டும்; மேலும், எதிர்பாராச் செலவுகளுக்கு 205ஆம் உறுப்பு அல்லது 206ஆம் உறுப்பின்படி அந்த மாநிலத்தின் சட்டமன்றம் அனுமதி அளிக்கும்வரை அச்செலவுகளைச் செய்யும் பொருட்டு மேற்சொன்ன நிதியத்திலிருந்து முன்பணத் தொகைகளை அந்த மாநில ஆளுநர் வழங்க இயலும் வகையில் அந்த நிதியம் அவருடைய பொறுப்பில் வைக்கப்படும்.

ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே வருவாய்களைப் பகிர்ந்தளித்தல்

268. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநிலங்கள் ஈட்டிப் பயன்படுத்திக் கொள்ளும் தீர்வைகள் :

(1) ஒன்றியத்துப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள முத்திரைத் தீர்வைகளும், மருந்து மற்றும் ஒப்பனைப் பொருள்களின் மீதான ஆயத் தீர்வைகளும் இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்படும்; ஆனால்—

(அ) அத்தகைய தீர்வைகள் ஒன்றியத்து ஆட்சிநிலவரை எதற்குள்ளும் விதிக்கத்தக்கனவாக இருக்கும் நேர்வில், இந்திய அரசாங்கத்தாலும்,
(ஆ) பிற நேர்வுகளில், எந்த மாநிலங்களுக்குள் முறையே அத்தீர்வைகள் விதிக்கத்தக்கனவாக உள்ளனவோ அந்த மாநிலங்களாலும் ஈட்டப்படும்.

(2) மாநிலம் எதற்குள்ளும் விதிக்கத்தக்க அத்தகைய தீர்வையின் மூலம் ஒரு நிதியாண்டில் கிடைக்கும் தொகை, இந்தியத் திரள்நிதியத்தின் பகுதியாக ஆவதில்லை; மாறாக, அது அந்த மாநிலத்திற்கே குறித்தொதுக்கப்படுதல் வேண்டும்.

[1][268அ. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு ஆனால் ஒன்றியமும் மாநிலங்களும் ஈட்டிப் பயன்படுத்திக்கொள்ளும் சேவை வரி :

(1) சேவை வரிகள், இந்திய அரசால் விதிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய வரி (2)ஆம் கூறில் வகை செய்யப்பட்டுள்ள முறையில் இந்திய அரசாலும் மாநிலங்களாலும் ஈட்டப்பட்டு, பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

(2) அத்தகைய வரியின் மூலம் ஒரு நிதியாண்டில் கிடைக்கும் தொகை, நாடாளுமன்றம், சட்டத்தின் வாயிலாக வகுத்தமைகலாகும் ஈட்டுதல் மற்றும் பயன்படுத்துதலுக்கான நெறிமுறைகளுக்கிணங்க,

(அ) இந்திய அரசாலும் மாநிலங்களாலும் ஈட்டப்படுதல் வேண்டும்;
(ஆ) இந்திய அரசாலும் மாநிலங்களாலும் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.]

269. ஒன்றியத்தால் விதித்து ஈட்டப்பட்டு, ஆனால் மாநிலங்களுக்குக் குறித்தொதுக்கப்படும் வரிகள் :

[2][(1) சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினையின் மீதான வரிகளும், சரக்குகளின் அனுப்புகை மீதான வரிகளும், இந்திய அரசால் விதித்து ஈட்டப்படுதல் வேண்டும் மற்றும் (2)ஆம் கூறில் வகை செய்யப்பட்டுள்ள முறையில், 1996 ஏப்ரல் 1ஆம் நாளன்று அல்லது அதற்குப் பின்பு, மாநிலங்களுக்குக் குறித்தொதுக்கப்படுதல் வேண்டும் மற்றும் குறித்தொதுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.


  1. 2003ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பு (எண்பத்து எட்டாம் திருத்தம்) சட்டத்தால் புகுத்தப்பட்டது.
  2. 2000ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பு (எண்பதாம் திருத்தம்) சட்டத்தால் மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/147&oldid=1469022" இலிருந்து மீள்விக்கப்பட்டது