பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


விளக்கம்.- இந்தக் கூறின் நோக்கங்களுக்காக,-

(அ)"சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினையின் மீதான வரிகள்" என்ற சொற்றொடர், செய்தித்தாள்கள் அல்லாத பிற சரக்குகளின் விற்பனையோ கொள்வினையோ மாநிலங்களிடையேயுள்ள வணிகத்தின் அல்லது வாணிபத்தின்போது நிகழுமிடத்து, அத்தகைய விற்பனை அல்லது கொள்வினை மீதான வரிகள் என்று பொருள்படும்;
(ஆ) "சரக்குகளின் அனுப்புகை மீதான வரிகள்" என்ற சொற்றொடர், சரக்குகளின் அனுப்புகை (அனுப்புகையானது அனுப்புபவருக்காயினும் பிறர் எவருக்காயினும்) மாநிலங்களிடையேயுள்ள வணிகத்தின் அல்லது வாணிபத்தின்போது நிகழுமிடத்து, அத்தகைய அனுப்புகையின் மீதான வரிகள் என்று பொருள்படும்.

(2) ஒரு நிதியாண்டில் அத்தகைய வரி எதிலிருந்தும் கிடைக்கும் நிகரத்தொகை, ஒன்றியத்து ஆட்சி நிலவரைகளிலிருந்து கிடைத்ததாகும் அளவு நீங்கலாக, எஞ்சிய அளவு, இந்தியத் திரள் நிதியத்தின் பகுதியாக அமைவதில்லை. மாறாக, அது அந்த ஆண்டில் அந்த வரி விதிக்கப்படுவதாகும் மாநிலங்களுக்கே குறித்தொதுக்கப்படுதல் வேண்டும், மேலும், அத்தொகை, நாடாளுமன்றம், சட்டத்தினால் வகுக்கும் பகிர்ந்தளிப்பு நெறிகளுக்கிணங்கிய வகையில் அந்த மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும்.]

(3) மாநிலங்களிடையேயான வணிகத்தின் அல்லது வாணிபத்தின்போது சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினை அல்லது அனுப்புகை நிகழ்வது எப்போது என்பதைத் தீர்மானிப்பதற்கான நெறிகளை நாடாளுமன்றம் சட்டத்தினால் வகுக்கலாம்.

[1][270. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படும் வரிகள் :

(1) முறையே [2][268, 268அ, 269 ஆகிய உறுப்புகளில்] சுட்டப்பட்ட தீர்வைகளும் வரிகளும் நீங்கலாக, ஒன்றியத்துப் பட்டியலில் சுட்டப்பட்ட அனைத்து வரிகளும் தீர்வைகளும், 271ஆம் உறுப்பில் சுட்டப்பட்ட வரிகள் மற்றும் தீர்வைகளின் பேரிலான மேல்வரியும், நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட சட்டத்தின்படி குறித்தவகை நோக்கங்களுக்காக விதிக்கப்பட்ட மேல்வரி எதுவும், இந்திய அரசால் விதிக்கப்பட்டு ஈட்டப்படுதல் வேண்டும். மேலும், (2)ஆம் கூறில் வகை செய்யப்பட்ட முறையில் ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஒரு நிதியாண்டில் அத்தகைய வரி அல்லது தீர்வையிலிருந்து கிடைக்கும் நிகரத்தொகையில் வகுத்துரைக்கப்படலாகும் விழுக்காடு, இந்தியத் திரள்நிதியத்தின் பகுதியாக அமைவதில்லை, மாறாக, அந்த ஆண்டில் அந்த வரி அல்லது தீர்வை விதிக்கப்படுவதாகும் மாநிலங்களுக்கே குறித்தொதுக்கப்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும் முறைப்படியும், வகுத்துரைக்கப்படலாகும் காலத்திலிருந்தும் (3)ஆம் கூறில் வகை செய்யப்பட்ட முறையில் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும்.]

(3) இந்த உறுப்பில் "வகுத்துரைக்கப்பட்ட" என்பது,—

(i) நிதி ஆணையம் ஒன்று அமைக்கப்படும் வரையில், குடியரசுத்தலைவரால் ஆணையின் வழி வகுத்துரைக்கப்பட்ட என்றும்,
(ii) நிதி ஆணையம் ஒன்று அமைக்கப்பட்ட பின்பு, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஓர்வு செய்த பின்பு குடியரசுத்தலைவரால் ஆணையின் வழி வகுத்துரைக்கப்பட்ட என்றும்

பொருள்படும்.]


  1. 2000ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பு (எண்பதாம் திருத்தம்) சட்டத்தால் மாற்றாக அமைக்கப்பட்டது (1-4-1996 முதல் செல்திறம் பெறுமாறு).
  2. 2003ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பு (எண்பத்து எட்டாம் திருத்தம்) சட்டத்தின் மூலம் மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/148&oldid=1469024" இலிருந்து மீள்விக்கப்பட்டது