பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


271. ஒன்றியத்தின் நோக்கங்களுக்காகக் குறித்தசில தீர்வைகள், வரிகள் ஆகியவற்றின் மீதான மேல்வரி :

269, 270 ஆகிய உறுப்புகளில் எது எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றம், எச்சமயத்திலும் அந்த உறுப்புகளில் சுட்டப்பட்டுள்ள தீர்வைகளில் அல்லது வரிகளில் எதனையும் ஒன்றியத்தின் நோக்கங்களுக்காக, மேல்வரி விதிப்பதன் வாயிலாக உயர்த்தலாம்; அத்தகைய மேல்வரியிலிருந்து கிடைக்கும் தொகை முழுவதும் இந்தியத் திரள்நிதியத்தின் பகுதியாக அமையும்.

[1][272. ★★]

273. சணல், சணற்பொருள்கள் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதித் தீர்வைக்குப் பதிலாக மானியங்கள் :

(1) அசாம், பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சணல், சணற்பொருள்கள் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதித் தீர்வை பொறுத்து ஒவ்வோர் ஆண்டிலும் கிடைக்கும் நிகரத்தொகையிலிருந்து பங்கு எதனையும் குறித்தொதுக்குவதற்குப் பதிலாக, ஒவ்வோர் ஆண்டிலும் அந்த மாநிலங்களின் வருவாய்களுக்கு உதவி மானியங்களாக வகுத்துரைக்கப்படும் தொகைகள் இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்படும்.

(2) சணல் அல்லது சணற்பொருள்களின் மீதான ஏற்றுமதித் தீர்வையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து விதித்து வருகின்ற காலம் அல்லது இந்த அரசமைப்பின் தொடக்க நிலையிலிருந்து பத்தாண்டுகள் கழிவுறுகிற காலம், இவற்றில் எது முந்தியதோ அது வரையில், அவ்வாறு வகுத்துரைக்கப்படும் தொகைகள் தொடர்ந்து இந்தியத் திரள்நிதியத்தின் மீது சார்த்தப்பட்டுவரும்.

(3) இந்த உறுப்பில், "வகுத்துரைக்கப்படும்” என்னும் சொல், 270ஆம் உறுப்பில் கூறப்பட்டுள்ள அதே பொருளை உடையது ஆகும்.

274. மாநிலங்கள் அக்கறை கொண்டுள்ள வரி விதிப்பைப் பாதிக்கும் சட்டமுன் வடிவுகளுக்குக் குடியரசுத்தலைவரின் முன்பரிந்துரை வேண்டுறுவதாகும் :

(1) மாநிலங்கள் அக்கறை கொண்டுள்ள வரி அல்லது தீர்வை எதனையும் விதிக்கிற அல்லது மாறுதல் செய்கிற அல்லது இந்திய வருமான வரி தொடர்பான சட்டங்களுக்காகப் பொருள்வரையறுக்கப்பட்ட "வேளாண் வருமானம்" என்னும் சொல்லின் பொருளை மாறுதல் செய்கிற, அல்லது இந்த அத்தியாயத்தின் மேலேகண்ட வகையங்களில் எதன்படியும் பணத்தொகைகள் எந்த நெறிகளின்படி மாநிலங்களுக்குப் பகிந்தளிக்கத்தக்கனவோ அந்த நெறிகளைப் பாதிக்கின்ற, அல்லது இந்த அத்தியாயத்தின் மேலேகண்ட வகையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றியத்தின் நோக்கங்களுக்காக மேல்வரி எதனையும் - விதிக்கின்ற சட்டமுன்வடிவு அல்லது திருத்தம் எதுவும், குடியரசுத்தலைவரின் பரிந்துரையின்மீது அல்லாமல், நாடாளுமன்ற அவைகளில் எதிலும் அறிமுகப்படுத்தப்படுதலோ கொண்டுவரப்படுதலோ ஆகாது.

(2) இந்த உறுப்பில், "மாநிலங்கள் அக்கறை கொண்டுள்ள வரி அல்லது தீர்வை” என்னும் சொற்றொடர்—

(அ) ஒரு வரி அல்லது தீர்வையிலிருந்து கிடைக்கும் நிகரத்தொகை முழுவதுமோ அதில் ஒரு பகுதியோ மாநிலம் ஒன்றுக்குக் குறித்தொதுக்கப்படுகின்றதெனில், அந்த வரி அல்லது தீர்வை, அல்லது
((ஆ) ஒரு வரி அல்லது தீர்வையிலிருந்து கிடைக்கும் நிகரத்தொகையைக் குறிக்கும் வகையில், மாநிலம் எதற்கும் இந்தியத் திரள் நிதியத்திலிருந்து நிகழுறும் காலத்தில் தொகைகள் வழங்கப்படுகின்றதெனில், அந்த வரி அல்லது தீர்வை,

என்று பொருள்படும்.


  1. 2000ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பதாம் திருத்தம்) சட்டத்தினால் நீக்குறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/149&oldid=1469028" இலிருந்து மீள்விக்கப்பட்டது