பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


275. குறித்தசில மாநிலங்களுக்கு ஒன்றியத்திலிருந்து மானியங்கள் :

(1) உதவி தேவையுள்ளவை என்று நாடாளுமன்றம் தீர்மானிக்கும் மாநிலங்களின் வருவாய்களுக்கு உதவி மானியங்களாக ஒவ்வோர் ஆண்டிலும் நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்யும் தொகைகள், இந்தியத் திரள் நிதியத்தின்மீது சார்த்தப்படும்; வெவ்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறான தொகைகள் நிருணயிக்கப்படலாம்:

வரம்புரையாக: ஒரு மாநிலத்திலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நலப்பாட்டினை வளர்ப்பதற்காக, அல்லது அதிலுள்ள பட்டியல் பகுதிகளின் நிருவாகத் தரநிலையை அந்த மாநிலத்தின் பிற பகுதிகளின் நிருவாகத் தரநிலைக்கு உயர்த்துவதற்காக, இந்திய அரசாங்கத்தின் ஒப்பேற்புடன் அந்த மாநிலத்தால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான வரவு-செலவுகளைச் செய்ய அந்த மாநிலத்தை இயல்விப்பதற்குத் தேவைப்படும் மூலதனத் தொகைகளும், தொடர் செலவடைத் தொகைகளும் அந்த மாநிலத்தின் வருவாய்களுக்கு உதவி மானியங்களாக இந்தியத் திரள் நிதியத்திலிருந்து வழங்கப்படும்:

மேலும் வரம்புரையாக: அசாம் மாநிலத்தின் வருவாய்களுக்கு உதவி மானியங்களாக—


(அ)ஆறாம் இணைப்புப்பட்டியலின் 20ஆம் பத்தியுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையின் 1 ஆம் பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிருவாகத்தைப் பொறுத்தவரை, இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு ஒட்டி முந்திய இரண்டு ஆண்டுகளின்போது வருவாய்களுக்கு மேல் ஏற்பட்ட சராசரி செலவுக்கும்,
(ஆ)மேற்சொன்ன பகுதிகளின் நிருவாகத் தரநிலையை, அந்த மாநிலத்தின் பிற பகுதிகளின் நிருவாகத் தரநிலைக்கு உயர்த்துவதற்காக, இந்திய அரசாங்கத்தின் ஒப்பேற்புடன் அந்த மாநிலத்தால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவடைகளுக்கும்

சமமாக மூலதனத்தொகையும் தொடர் செலவடைத் தொகையும் இந்தியத் திரள் நிதியத்திலிருந்து வழங்கப்படும்.

(1அ). 244அ உறுப்பின்படி தன்னாட்சி மாநிலம் உருவாக்கப்படுவதன் பேரிலும், அது முதற்கொண்டும் —

(i) (1) ஆம் கூறுக்கான இரண்டாம் வரம்புரையின் (அ) கூறில் சுட்டப்பட்டுள்ள பழங்குடியினர் பகுதிகள் அனைத்தும் அடங்கியதாக அத்தன்னாட்சி மாநிலம் இருக்குமாயின், அக்கூறின்படி வழங்கப்படுவதாகும் தொகைகள், அந்தத் தன்னாட்சி மாநிலத்திற்கு வழங்கப்படும்; அந்தத் தன்னாட்சி மாநிலம் அந்தப் பழங்குடியினர் பகுதிகளில் சிலவற்றை மட்டுமே கொண்டதாக இருக்குமாயின், குடியரசுத்தலைவர் ஆணையின் வழி குறித்துரைக்கிறவாறு, அசாம் மாநிலத்திற்கும் அத்தன்னாட்சி மாநிலத்திற்குமிடையே அத்தொகை பங்கீடு செய்யப்படுதல் வேண்டும்;
(ii) அந்தத் தன்னாட்சி மாநிலத்தின் நிருவாகத் தரநிலையை அசாம் மாநிலத்தின் பிற பகுதிகளின் நிருவாகத் தரநிலைக்கு உயர்த்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் ஒப்பேற்புடன் அந்தத் தன்னாட்சி மாநிலத்தால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவடைத் தொகைகளுக்குச் சமமான மூலதனத் தொகையும் தொடர் செலவடைத் தொகையும் அந்தத் தன்னாட்சி மாநிலத்தின் வருவாய்களுக்கு உதவிமானியங்களாக இந்தியத் திரள்நிதியத்திலிருந்து வழங்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/150&oldid=1466227" இலிருந்து மீள்விக்கப்பட்டது