பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


(2). (1) ஆம் கூறின்படி நாடாளுமன்றத்தால் வகைசெய்யப்படும் வரையில், அந்தக் கூறின்படி நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குடியரசுத்தலைவரால் ஆணையின்வழி செலுத்தப்படுவது ஆகும்; இந்தக் கூறின்படி குடியரசுத்தலைவரால் பிறப்பிக்கப்படும் ஆணை எதுவும், நாடாளுமன்றத்தால் அவ்வாறு செய்யப்பட்ட வகையம் எதற்கும் உட்பட்டுச் செல்திறம் உடையது ஆகும்:

வரம்புரையாக: நிதி ஆணையம் ஒன்று அமைக்கப்பட்ட பின்பு, அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஓர்வு செய்ததன்மேல் அல்லாமல், குடியரசுத்தலைவர் இந்தக் கூறின்படி ஆணை எதனையும் பிறப்பித்தல் ஆகாது.

276. விழைதொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள், வேலையமர்த்தங்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் :

(1) 246 ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், விழைதொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள் அல்லது வேலையமர்த்தங்கள் பொறுத்து, ஒரு மாநிலத்தின் அல்லது அதிலுள்ள ஒரு நகராட்சி, மாவட்ட வாரியம், உள்ளாட்சி வாரியம் அல்லது பிற உள்ளாட்சி அதிகாரஅமைப்பின் நலனுக்கான வரிகள் தொடர்பாக அந்த மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் எதுவும் அது வருமானத்தின்மீதான ஒரு வரியைப் பற்றியது என்ற காரணத்தால் செல்லாநிலையது ஆவதில்லை.

(2) அந்த மாநிலத்திற்கோ அந்த மாநிலத்திலுள்ள நகராட்சி, மாவட்ட வாரியம், உள்ளாட்சி வாரியம் அல்லது பிற உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதற்குமோ, விழைதொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள், வேலையமர்த்தங்கள் ஆகியவற்றின்மீதான வரிகளாக ஒருவரைப் பொறுத்து செலுத்துவதாகும் மொத்தத் தொகை ஆண்டொன்றுக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு மேற்படுதல் ஆகாது.

(3) விழைதொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள், வேலையமர்த்தங்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் பொறுத்து, மேற்சொன்னவாறு சட்டங்களை இயற்றுவதற்கு ஒரு மாநிலச் சட்டமன்றத்திற்குள்ள அதிகாரமானது, விழைதொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள், வேலையமர்த்தங்கள் ஆகியற்றிலிருந்து வந்தடைகின்ற அல்லது கிடைக்கின்ற வருமானத்தின்மீதான வரிகள் பொறுத்துச் சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரத்தினை எவ்வகையிலும் வரம்பிடுவதாகப் பொருள்கொள்ளுதல் ஆகாது.

277. காப்புரைகள் :

இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, மாநிலம் ஒன்றன் அரசாங்கத்தினால் அல்லது நகராட்சி அல்லது பிற உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது குழுமம் எதனாலும் அந்த மாநிலம், நகராட்சி, மாவட்டம் அல்லது பிற வட்டாரப்பகுதி இவற்றின் பொருட்டு சட்டப்படி விதிக்கப்பட்டுவந்த வரிகள், தீர்வைகள், மேல்வரிகள், கட்டணங்கள் எவையும், ஒன்றியத்துப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருப்பினும், நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்யும் வரையில் தொடர்ந்து விதிக்கப்பட்டு, அதே நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.

[1][278. ★★]

279. "நிகரத் தொகை" முதலியவற்றைக் கணக்கிடுதல் :

(1) இந்த அத்தியாயத்தின் மேலே கண்ட வகையங்களில், வரி அல்லது தீர்வை ஒன்றன் தொடர்பாக "நிகரத்தொகை” என்பது, அவ்வரி அல்லது தீர்வையிலிருந்து கிடைக்கும் தொகையிலிருந்து ஈட்டுவதற்காகும் செலவடை கழிக்கப்பட்டதன் பின்பு வரும் தொகை என்று பொருள்படும்; அந்த வகையங்களைப் பொறுத்தவரை, வரையிடம் ஒன்றன் அல்லது அதைச் சேர்வதான வரி அல்லது தீர்வை ஒன்றிலிருந்து அல்லது வரி அல்லது தீர்வை ஒன்றின் பகுதியிலிருந்து கிடைக்கும் நிகரத்தொகை எவ்வளவு என்பதை இந்தியக் கணக்காய்வர்தலைமைத் தணிக்கையர் கண்டறிந்து உறுதிச்சான்றளிப்பார்: அவரது அந்த உறுதிச் சான்றே அறுதியானது ஆகும்.


  1. 1956ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 29 ஆம் பிரிவினாலும் இணைப்புப்பட்டியலினாலும் நீக்கறவு செய்யப்பட்டது.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/151&oldid=1468616" இலிருந்து மீள்விக்கப்பட்டது