பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


290. குறித்தசில செலவுகள், ஓய்வூதியங்கள் ஆகியவை பொறுத்த நேரமைவு :

இந்த அரசமைப்பின் வகையங்களின்படி நீதிமன்றம் அல்லது ஆணையம் ஒன்றின் செலவுகள் அல்லது இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு, முடியரசின் கீழ் இந்தியாவின் அல்லது அத்தகைய தொடக்கநிலைக்குப் பின்பு ஒன்றியம் அல்லது மாநிலம் ஒன்றன் அலுவற்பாடுகள் தொடர்பாகப் பணிபுரிந்திருக்கின்ற ஒருவருக்கு அல்லது அவர் பொருட்டு வழங்கப்படுவதான ஓய்வூதியம் இந்தியத் திரள் நிதியத்தின்மீதோ, மாநிலம் ஒன்றன் திரள்நிதியத்தின் மீதோ சார்த்தப்பட்டதாக இருக்குமிடத்து—

(அ)இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட ஒரு செலவாக இருக்கும் நேர்வில், அந்நீதிமன்றமோ ஆணையமோ மாநிலம் ஒன்றன் தனிப்பட்ட தேவைகளில் எதனையும் நிறைவுறுத்துமாயின், அல்லது அந்த நபர் மாநிலம் ஒன்றன் அலுவற்பாடுகள் தொடர்பாக முழுமையாகவோ ஓரளவோ பணிபுரிந்திருப்பாராயின், அல்லது
(ஆ) மாநிலம் ஒன்றன் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட ஒரு செலவாக இருக்கும் நேர்வில், அந்நீதிமன்றமோ ஆணையமோ ஒன்றியத்தின் அல்லது பிறிதொரு மாநிலத்தின் தனிப்பட்ட தேவைகளில் எதனையும் நிறைவுறுத்துமாயின் அல்லது அந்த நபர் ஒன்றியத்தின் அல்லது பிறிதொரு மாநிலத்தின் அலுவற்பாடுகள் தொடர்பாக முழுமையாகவோ ஓரளவோ பணிபுரிந்திருப்பாராயின்

அச்செலவுகள் அல்லது ஓய்வூதியம் பொறுத்து ஒப்பியவாறான பங்களிப்புத் தொகை அல்லது ஒப்புதல் ஏற்படாதவிடத்து இந்தியாவின் தலைமை நீதிபதியால் அமர்த்தப்பெறும் பொதுவரால் தீர்மானிக்கப்படும் பங்களிப்புத் தொகை, அந்த மாநிலத்தின் திரள்நிதியத்தின்மீது அல்லது, நேர்வுக்கேற்ப, இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்டு, அதிலிருந்து வழங்கப்படுதல் வேண்டும்.

290அ. குறித்தசில தேவசுவம் நிதியங்களுக்கு ஆண்டு தோறும் பணம் செலுத்துதல் :

ஒவ்வோர் ஆண்டும் நாற்பத்தாறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கேரள மாநிலத்தின் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்டு அதிலிருந்து திருவாங்கூர் தேவசுவம் நிதியத்திற்கு வழங்கப்படும்; மேலும், திருவாங்கூர்-கொச்சி மாநிலத்திலிருந்து 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளன்று தமிழ்நாடு மாநிலத்திற்கு மாற்றப்பட்ட நிலவரைகளில் உள்ள இந்துக் கோயில்கள் வழிபடுதலங்கள் ஆகியவற்றைப் பேணிவருவதற்காகப் பதின்மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தமிழ்நாடு மாநிலத்தின் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்டு அதிலிருந்து அந்த மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள தேவசுவம் நிதியத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும்.

[1][291. ★★]

அத்தியாயம் II
கடன்பெறுதல்


292. இந்திய அரசாங்கம் கடன்பெறுதல் :

ஒன்றியத்து ஆட்சிஅதிகாரமானது, நாடாளுமன்றம் சட்டத்தினால், அவ்வப்போது நிருணயிக்கும் வரம்புகள், எவையேனுமிருப்பின், அவற்றிற்குள்ளடங்கி, இந்தியத் திரள் நிதியத்தின் பிணையத்தின்பேரில் கடன் பெறுவதையும் அவ்வாறு நிருணயிக்கப்பட்ட வரம்புகள், எவையேனுமிருப்பின், அவற்றிற்குள்ளடங்கி, பொறுப்புறுதிகள் அளிப்பதையும் அளாவி நிற்கும்.


  1. 1971ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபத்தாறாம் திருத்தம்) சட்டத்தின் 2ஆம் பிரிவினால் நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/156&oldid=1468715" இலிருந்து மீள்விக்கப்பட்டது