பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


விற்பனையின்மீது வரி எதனையும் விதித்தலோ விதிப்பதற்கு அதிகாரம் அளித்தலோ ஆகாது; மேலும், மின்விசையின் விற்பனையின் மீது வரி எதனையும் விதிக்கின்ற அல்லது விதிப்பதற்கு அதிகாரம் அளிக்கின்ற அத்தகைய சட்டம் எதுவும், இந்திய அரசாங்கத்தினால் பயனுறுத்தப்படுவதற்காக அந்த அரசாங்கத்திற்கு அல்லது இருப்பூர்தியம் எதனையும் அமைப்பதில், பேணுவதில் அல்லது இயக்குவதில் பயனுறுத்தப்படுவதற்காக மேற்சொன்னவாறு அத்தகைய இருப்பூர்திய நிறுமத்திற்கு விற்பனை செய்யப்படும் மின்விசையின் விலை, மின்விசையைக் கணிசமான அளவிற்குப் பயனுறுத்தும் பிறருக்குத் குறிக்கப்படும் விலையைவிட அந்த வரித்தொகையின் அளவிற்குக் குறைந்ததாக இருக்கும்படி உறுதிசெய்தல்வேண்டும்.

288. குறித்தசில நேர்வுகளில் நீர் அல்லது மின்விசைக்கு மாநிலங்களின் வரிவிதிப்பிலிருந்து விலக்களிப்பு :

(1) குடியரசுத்தலைவர் ஆணையின்வழி பிறவாறு வகைசெய்யும் அளவிற்கு அல்லாமல், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு செல்லாற்றலில் இருந்த மாநிலச் சட்டம் எதுவும், மாநிலங்களிடையே அமைந்த ஆறு அல்லது ஆற்றுப்பள்ளத்தாக்கு ஒன்றை ஒழுங்குறுத்துவதற்காகவோ மேம்படுத்துவற்காகவோ நிலவுறும் சட்டம் ஒன்றினால் அல்லது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் ஒன்றினால் நிறுவப்படும் அதிகாரஅமைப்பு எதனாலும் சேமித்து வைக்கப்படுகிற, உற்பத்தி செய்யப்படுகிற. பயனுறுத்தப்படுகிற, வழங்கப்படுகிற அல்லது விற்கப்படுகிற நீர் அல்லது மின்விசை எதனையும் பொறுத்து வரி ஒன்றை விதித்தலோ விதிப்பதற்கு அதிகாரம் அளித்தலோ ஆகாது.

விளக்கம்.--இந்தக் கூறில், "செல்லாற்றலில் இருந்த மாநிலச் சட்டம்" என்னும் சொற்றொடர், இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்குமுன்பு நிறைவேற்றப்பட்டு அல்லது இயற்றப்பட்டு முன்னரே நீக்கறவு செய்யப்படாத ஒரு சட்டத்தை, அத்தகைய சட்டம் எதுவும் அல்லது அதன் பகுதிகள் எவையும் அப்போது முற்றிலுமோ குறிப்பிட்ட பரப்பிடங்களிலோ செயற்பாட்டில் இல்லாதிருப்பினும், உள்ளடக்கும்.

(2) மாநிலம் ஒன்றன் சட்டமன்றம் (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட வரி எதனையும் சட்டத்தினால் விதிக்கலாம் அல்லது விதிப்பதற்கு அதிகாரம் அளிக்கலாம்; ஆனால், அத்தகைய சட்டம் எதுவும் குடியரசுத்தலைவரின் ஓர்விற்காக ஒதுக்கிவைக்கப்பட்டு, அவருடைய ஏற்பிசைவை அது பெற்றிருந்தாலன்றி, செல்திறம் உடையது ஆகாது; மேலும், அத்தகைய சட்டம் எதுவும், அதிகாரஅமைப்பு ஒன்றினால் அச்சட்டத்தின்படி வகுக்கப்படும் விதிகளின் அல்லது பிறப்பிக்கப்படும் ஆணைகளின்வழி அத்தகைய வரியின் வீதங்களையும் பிற வரிச் சுமத்தங்களையும் நிருணயிப்பதற்கு வகைசெய்யுமாயின், அத்தகைய விதியை வகுப்பதற்கு அல்லது ஆணையைப் பிறப்பிப்பதற்குக் குடியரசுத்தலைவரின் முன்னிசைவினைப்பெறுதல் வேண்டும் என அச்சட்டம் வகை செய்தல் வேண்டும்.

289. மாநிலம் ஒன்றன் சொத்திற்கும் வருமானத்திற்கும் ஒன்றியத்து வரி விதிப்பிலிருந்து விலக்களிப்பு :

(1) மாநிலம் ஒன்றன் சொத்தும் வருமானமும் ஒன்றியத்து வரி விதிப்பிலிருந்து விலக்களிப்புப் பெறுவன ஆகும்.

(2) மாநிலம் ஒன்றன் அரசாங்கத்தாலோ அதன் சார்பாகவோ நடத்தப்படும் எவ்வகையானதுமான வணிகம், வணிகத்தொழில் அல்லது அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் பொறுத்து அல்லது அத்தகைய வணிகம், வணிகத்தொழில் பொருட்டுப் பயன்படுத்தப்படுகிற அல்லது கையுடைமையிலிருக்கிற சொத்து எதனையும் பொறுத்து, அதன் தொடர்பாக வந்தடைகின்ற அல்லது அதிலிருந்து கிடைக்கின்ற வருமானம் எதனையும் பொறுத்து, நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்யும் அளவு, ஏதேனும் இருப்பின், அந்த அளவிற்கு வரி எதனையும் ஒன்றியம் விதிப்பதற்கோ விதிப்பதற்கு அதிகாரம் அளிப்பதற்கோ (1)ஆம் கூறிலுள்ள எதுவும் தடையூறு ஆவதில்லை.

(3) (2) ஆம் கூறிலுள்ள எதுவும், அரசாங்கத்தின் வழக்கமான செயற்பணிகளைச் சார்ந்தவை என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்பும் வணிகம் அல்லது வணிகத்தொழில் எதற்குமோ எவ்வகையான வணிகம் அல்லது வணிகத்தொழில் எதற்குமோ பொருந்துறுவது இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/155&oldid=1468683" இலிருந்து மீள்விக்கப்பட்டது