பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


299. ஒப்பந்தங்கள் :

(1) ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் ஆட்சி அதிகாரத்தைச் செலுத்திச் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தும், குடியரசுத் தலைவரால் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாநிலத்தின் ஆளுநரால் செய்துகொள்ளப்பட்டனவாக இயம்பப்பெறும்; மேலும், அந்த அதிகாரத்தைச் செலுத்திச் செய்து கொள்ளப்படும் அத்தகைய அனைத்து ஒப்பந்தங்களும் அனைத்துச் சொத்துக் காப்பீடுகளும் குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநர் சார்பாக, அவர் பணிக்கும் அல்லது அதிகாரமளிக்கும் முறையிலும் அவர் பணிக்கும் அல்லது அதிகாரமளிக்கும் நபர்களாலும் எழுதிக்கொடுக்கப்படுதல் வேண்டும்.

(2) இந்த அரசமைப்பைப் பொறுத்து அல்லது இந்திய அரசாங்கம் தொடர்பாக இதற்குமுன்பு செல்லாற்றலில் இருந்துவந்த சட்டம் ஒன்றைப் பொறுத்து செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் அல்லது எழுதிக்கொடுக்கப்பட்ட காப்பீடு எதற்காகவும், குடியரசுத்தலைவரோ ஆளுநரோ தம் சொந்த முறையில் பொறுப்படைவுற்றவர் ஆகார்; மேலும், அவர்களில் எவர் சார்பாகவும் எனக் குறித்து அத்தகைய ஒப்பந்தம் அல்லது காப்பீடு எதனையும் செய்துகொள்கின்ற அல்லது எழுதிக்கொடுக்கின்ற எவரும்கூட, அதற்காகத் தம் சொந்தமுறையில் பொறுப்படைவுற்றவர் ஆகார்.

300. உரிமைவழக்குகளும், நடவடிக்கைகளும் :

(1) இந்திய ஒன்றியத்தின் பெயரால் இந்திய அரசாங்கம் வழக்கிடலாம் அல்லது வழக்கிடப்படலாம்; ஒரு மாநிலத்தின் பெயரால் அந்த மாநில அரசாங்கம் வழக்கிடலாம் அல்லது வழக்கிடப்படலாம்; மேலும், இந்த அரசமைப்பு இயற்றப்படாதிருப்பின், எந்நேர்வுகளில் இந்தியத் தன்னாட்சியமும் நேரிணையான மாகாணங்களும் அல்லது நேரிணையான இந்தியக் குறுநிலங்களும் தத்தம் அலுவற்பாடுகள் தொடர்பாக வழக்கிட்டிருக்கலாமோ வழக்கிடப்பட்டிருக்கலாமோ அத்தகைய நேர்வுகளில், இந்த அரசமைப்பினால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் பயன்திறன் வழி இயற்றப்பட்ட நாடாளுமன்றச் சட்டத்தினால் அல்லது அத்தகைய மாநிலச் சட்டமன்றச் சட்டத்தினால் செய்யப்படும் வகையங்கள் எவற்றிற்கும் உட்பட்டு, இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் வழக்கிடலாம் அல்லது வழக்கிடப்படலாம்.

(2) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையின்போது—

(அ) இந்தியத் தன்னாட்சியத்தை ஒரு தரப்பினராகக் கொண்ட சட்ட நடவடிக்கைகள் எவையும் முடிவுறாநிலையில் இருக்குமாயின், அந்த நடவடிக்கைகளில் இந்தியத் தன்னாட்சியத்திற்குப் பதிலாக இந்திய ஒன்றியம் சேர்க்கப்பட்டதாகக் கொள்ளப்படும்; மேலும்,
(ஆ) ஒரு மாகாணத்தை அல்லது ஓர் இந்தியக் குறுநிலத்தை ஒரு தரப்பினராகக் கொண்ட சட்ட நடவடிக்கைகள் எவையும் முடிவுறாநிலையில் இருக்குமாயின், அந்த நடவடிக்கைகளில் அந்த மாகாணத்திற்கு அல்லது இந்தியக் குறுநிலத்திற்குப் பதிலாக நேரிணையான மாநிலம் சேர்க்கப்பட்டதாகக் கொள்ளப்படும்.

அத்தியாயம் IV
சொத்து பொறுத்த உரிமை

300அ. சட்டம் அளிக்கும் அதிகாரத்தின்படி அல்லாமல் எவரிடமிருந்தும் சொத்து பறிக்கப்படுதல் ஆகாது :

சட்டம் அளிக்கும் அதிகாரத்தின்படி அல்லாமல், எவரிடமிருந்தும் அவரது சொத்து பறிக்கப்படுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/160&oldid=1468528" இலிருந்து மீள்விக்கப்பட்டது