பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


வரம்புரையாக: சொத்து எதுவும், மாட்சிமை தங்கிய மன்னரிடம் அல்லது இந்தியக் குறுநிலம் ஒன்றன் அரசரிடம் அவ்வாறு சேர்ந்தடைவதாகும் தேதியில் அது இந்திய அரசாங்கத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் அரசாங்கத்தின் உடைமையில் அல்லது கட்டாள்கையில் இருந்திருப்பின், அது, அப்போது பயன்படுத்தப்பட்டதற்கான அல்லது வைத்துவரப்பட்டதற்கான நோக்கங்கள் ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் நோக்கங்களாக இருப்பின், அதற்கிணங்க ஒன்றியத்திடமோ அந்த மாநிலத்திடமோ உற்றமையும்.

விளக்கம்.-இந்த உறுப்பில் "அரசர்கள்", "இந்தியக் குறுநிலம்" என்னும் சொற்றொடர்கள், 363ஆம் உறுப்பிலுள்ள அதே பொருள்களை உடையனவாம்.

297. ஆட்சிநிலவரை சார்ந்த கடலினுள் அல்லது கண்டத்திட்டினுள் இருக்கும் பெறுமதியான பொருள்களும், தனிப்பட்டதான பொருளியல் மண்டலங்களின் வள் ஆதாரங்களும் ஒன்றியத்திடம் உற்றமைதல் :

(1) இந்திய ஆட்சிநிலவரை சார்ந்த கடலினுள் அல்லது கண்டத்திட்டினுள் அல்லது தனிப்பட்டதான பொருளியல் மண்டலத்தினுள் அடங்கும் கடலடி நிலங்கள், கனிமங்கள், பெறுமதியான பிற பொருள்கள் ஆகிய அனைத்தும் ஒன்றியத்திடம் உற்றமைந்து, ஒன்றியத்தின் நோக்கங்களுக்காக வைத்தாளப்படும்.

(2) இந்தியாவின் தனிப்பட்டதான பொருளியல் மண்டலத்தின் பிற வளஆதாரங்கள் அனைத்தும், ஒன்றியத்திடம் உற்றமைந்து, ஒன்றியத்தின் நோக்கங்களுக்காக வைத்தாளப்படும்.

(3) இந்தியாவின் ஆட்சிநிலவரைச் சார்ந்த கடல், கண்டத்திட்டு, தனிப்பட்டதான பொருளியல் மண்டலம், பிற கடல்சார்ந்த மண்டலங்கள் ஆகியவற்றின் எல்லைகள், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தாலோ அதன் வழியாலோ அவ்வப்போது குறித்துரைக்கப்படுகிறவாறு இருந்துவரும்.

298. வணிகம் முதலியவற்றை நடத்திவருவதற்கான அதிகாரம் :

ஒன்றியத்தின் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் வணிகம் அல்லது வணிகத்தொழில் எதனையும் நடத்துவதும் சொத்தினை ஈட்டுதல், வைத்தாளுதல், அயலடைவு செய்தல், எந்நோக்கத்திற்காகவும் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளுதல் ஆகியவையும் அடங்கும்: வரம்புரையாக:

(அ)மேற்சொன்ன ஒன்றியத்து ஆட்சிஅதிகாரமானது, அத்தகைய வணிகம் அல்லது வணிகத்தொழில் அல்லது அத்தகைய நோக்கம் எதுவும், நாடாளுமன்றம் சட்டங்கள் இயற்றுவதற்குரியதாக இல்லாதிருக்கும் அளவிற்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் சட்டமியற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கும்; மற்றும்
(ஆ) மேற்சொன்ன ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சிஅதிகாரமும் அத்தகைய வணிகம் அல்லது வணிகத்தொழில் அல்லது அத்தகைய நோக்கம் எதுவும், மாநிலச் சட்டமன்றம் சட்டங்கள் இயற்றுவதற்குரியதாக இல்லாதிருக்கும் அளவிற்கு, நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/159&oldid=1468723" இலிருந்து மீள்விக்கப்பட்டது