பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


304. மாநிலங்களிடையே வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகள் :

301ஆம் உறுப்பில் அல்லது 303ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும் மாநிலம் ஒன்றின் சட்டமன்றம், சட்டத்தினால்-

(அ)பிற மாநிலங்களிலிருந்து அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின்மீது, அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கும் அவ்வாறு தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் சரக்குகளுக்கும் இடையே எவ்வகையிலும் வேற்றுமை காட்டாதவாறு, அந்த மாநிலத்தில் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் அதுபோன்ற சரக்குகள் மீது விதிக்கப்படும் வரி எதனையும் விதிக்கலாம்; மற்றும்
(ஆ) அந்த மாநிலத்துடன் அல்லது அந்த மாநிலத்திற்குள் நிகழ்வுறும் வணிகம், வாணிபம் அல்லது தொடர்புறவு ஆகியவற்றிற்கான சுதந்திரத்தின்மீது, பொதுநலன்கருதி வேண்டுறும் தகுமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம்:

வரம்புரையாக: (ஆ) கூறின் நோக்கங்களுக்காக சட்டமுன்வடிவு அல்லது திருத்தம் எதுவும், குடியரசுத்தலைவரின் முன்ஒப்பளிப்பின்றி, மாநிலம் ஒன்றின் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுதலோ கொண்டுவரப்படுதலோ ஆகாது.

305. நிலவுறும் சட்டங்களுக்கும் மாநிலத்தின் ஒரு தனியுரிமைகளுக்கு வகை செய்யும் சட்டஙக்களுக்கமான காப்புரை :

301, 303 ஆகிய உறுப்புகளில் உள்ள எதுவும், குடியரசுத்தலைவர் ஆணையின்வழி பிறவாறு பணிக்கும் அளவுக்கன்றி, நிலவுறும் சட்டம் ஒன்றின் வகையங்களைப் பாதித்தல் ஆகாது; மேலும், 301 ஆம் உறுப்பிலுள்ள எதுவும், 19ஆம் உறுப்பின் (6) ஆம் கூறின் (ii) ஆம் உட்கூறில் சுட்டப்பட்ட பொருட்பாடு எதற்கும் தொடர்புடையதாய் இருக்கிற அளவிற்கு, 1955ஆம் ஆண்டு அரசமைப்பு (நான்காம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்பு இயற்றப்பட்ட சட்டம் எதனின் செயற்பாட்டையும் பாதித்தலுமில்லை; அத்தகைய பொருட்பாடு தொடர்பாக நாடாளுமன்றம் அல்லது மாநிலம் ஒன்றின் சட்டமன்றம் சட்டம் எதனையும் இயற்றுவதற்குத் தடையூறு ஆவதுமில்லை.

[1][306. ★★]

307. 301 முதல் 304 வரையிலுள்ள உறுப்புகளின் நோக்கங்களை நிறைவேற்று வதற்காக அதிகாரஅமைப்பை ஏற்படுத்துதல் :

301, 302, 303, 304 ஆகிய உறுப்புகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, நாடாளுமன்றம் சட்டத்தினால், தான் பொருத்தமெனக் கருதும் அதிகாரஅமைப்பை ஏற்படுத்தி, அவ்வாறு ஏற்படுத்திய அதிகாரஅமைப்பிற்குத் தான் தேவையெனக் கருதுகின்ற அதிகாரங்களையும் கடமைகளையும் வழங்கலாம்.


  1. 1956ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 29ஆம் பிரிவினாலும், இணைப்புப்பட்டியலினாலும் நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/162&oldid=1468530" இலிருந்து மீள்விக்கப்பட்டது