பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


பகுதி XIV
ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கீழுள்ள பணியங்கள்
அத்தியாயம் I
பணியங்கள்

308. பொருள்கோள் :

இந்தப் பகுதியில் தறுவாயின் தேவை வேறானாலன்றி, “மாநிலம்" என்னும் சொல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை உள்ளடக்குவதில்லை.

309. ஒன்றியத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திற்குப் பணிபுரிவதற்காக ஆளெடுத்தலும் பணிவரைக்கட்டுகளும் :

இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு உரிய சட்டமன்றத்தின் சட்டங்கள், ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் அலுவற்பாடுகள் தொடர்பான அரசுப் பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் ஆளெடுப்பதையும் அவற்றிற்கு அமர்த்தப்பெறுபவர்களின் பணி வரைக்கட்டுகளையும் ஒழுங்குறுத்தலாம்: வரம்புரையாக: ஒன்றியத்து அலுவற்பாடுகள் தொடர்பான பணியங்கள், பணியடைகள் ஆகியவை பொறுத்து, குடியரசுத்தலைவர் அல்லது அவர் குறிப்பிடும் ஒருவர், மாநிலம் ஒன்றின் அலுவற்பாடுகள் தொடர்பான பணியங்கள், பணியடைகள் ஆகியவை பொறுத்து அந்த மாநிலத்தின் ஆளுநர் அல்லது அவர் குறிப்பிடும் ஒருவர், இந்த உறுப்பின்படி உரிய சட்டமன்றத்தின் சட்டத்தாலோ அதன் வழியாலோ அகற்கென வகைசெய்யப்படும் வரையில், அந்தப் பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் ஆளெடுப்பதையும் அவற்றிற்கு அமர்த்தப்பெறுபவர்களின் பணிவரைக்கட்டுகளையும் ஒழுங்குறுத்தும்விதிகளைச் செய்வதற்கு அதிகாரம் உடையவர் ஆவார்; மேலும், அவ்வாறு செய்யப்படும் விதிகள் எவையும், அத்தகைய சட்டம் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டுச் செல்திறம் உடையன ஆகும்.

310. ஒன்றியத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திற்குப் பணிபுரிபவர்களின் பதவியுரிமைக் காலம் :

(1) இந்த அரசமைப்பினால் தெரிநிலையாக வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, பாதுகாப்புப் படைப் பணியம் ஒன்றிலோ ஒன்றியத்தின் குடியியல் பணியம் ஒன்றிலோ, அனைத்திந்தியப் பணியம் ஒன்றிலோ உறுப்பினராக இருக்கிற அல்லது பாதுகாப்புப்படை தொடர்பான பணியடை எதனையும் அல்லது ஒன்றியத்தின் கீழுள்ள குடியியல் பணியடை எதனையும் வகித்து வருகிற ஒவ்வொருவரும், குடியரசுத்தலைவர் விழையுமளவும் பதவி வகிப்பார்; மேலும், மாநிலம் ஒன்றின் குடியியல் பணியம் ஒன்றில் உறுப்பினராய் இருக்கிற அல்லது ஒரு மாநிலத்தின் கீழுள்ள குடியியல் பணியடை ஒன்றை வகித்து வருகிற ஒவ்வொருவரும், அந்த மாநிலத்தின் ஆளுநர் விழையுமளவும் பதவி வகிப்பார்.

(2) ஒன்றியத்தின் கீழுள்ள அல்லது ஒரு மாநிலத்தின் கீழுள்ள குடியியல் பணியடை ஒன்றை வகித்துவரும் ஒருவர், குடியரசுத்தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாநிலத்தின் ஆளுநர் விழையுமளவும் பதவி வகிப்பவராக இருந்தபோதிலும், சிறப்புத் தகுதிப்பாடுகள் கொண்ட ஒருவரின் பணியினைப் பெறுவது தேவையெனக் குடியரசுத்தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, ஆளுநர் கருதி, பாதுகாப்புப் படைப் பணியம் ஒன்றிலோ அனைத்திந்தியப் பணியம் ஒன்றிலோ ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் குடியியல் பணியம் ஒன்றிலோ உறுப்பினராக இல்லாத ஒருவரை, ஓர் ஒப்பந்தத்தின்படி அத்தகைய பணியடையை வகிப்பதற்காக இந்த அரசமைப்பின்கீழ் அமர்த்துமிடத்து ஒத்துக்கொண்டுள்ள ஒரு காலஅளவு கழிவுறுவதற்கு முன்பே அப்பணியடை ஒழிக்கப்பட்டுவிடுகிறது அல்லது அவருடைய நெறிதவறிய நடத்தை எதற்கும் தொடர்பில்லாத காரணங்களுக்காக அப்பணியடையை விட்டகலும்படி அவர் வேண்டுறுத்தப்படுகிறார் எனில், அவருக்குச் சரியீடு கொடுப்பதற்கு அந்த ஒப்பந்தம் வகை செய்யலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/163&oldid=1468531" இலிருந்து மீள்விக்கப்பட்டது