பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


311. ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின்கீழ் குடியியல் சார்ந்த வேலைக்கு அமர்த்தப்பெற்றுள்ளவர்களை பணிநீக்கமோ பணியறவோ பணியிறக்கமோ செய்தல் :

(1) ஒன்றியத்தின் குடியியல் பணியம் ஒன்றின் அல்லது அனைத்திந்தியப் பணியம் ஒன்றின் அல்லது ஒரு மாநிலக் குடியியல் பணியம் ஒன்றின் உறுப்பினராக இருக்கிற அல்லது ஒன்றியத்தின்கீழோ ஒரு மாநிலத்தின்கீழோ குடியியல் பணியடை ஒன்றை வகித்து வருகிற எவரும், அவரை அமர்த்திய அதிகாரஅமைப்பிற்குக் கீழமைந்துள்ள அதிகாரஅமைப்பினால் பணிநீக்கம் அல்லது பணியறவு செய்யப்படுதல் ஆகாது.

(2) மேற்கூறப்பட்ட எவரும், அவர்மீதான குற்றச்சார்த்துகளை அவருக்குத் தெரிவித்து, அந்தக் குற்றச்சார்த்துகளைப் பொறுத்து அவர் கூறுவதை, கேட்பதற்குத் தகுமான வாய்ப்பு நல்கி விசாரணை செய்த பின்பு தவிர, பணிநீக்கம் அல்லது பணியறவு அல்லது பணியிறக்கம் செய்யப்படுதல் ஆகாது:

வரம்புரையாக: அத்தகைய விசாரணைக்குப் பின்பு, தண்டனை எதுவும் விதிக்கக் கருதப்படுமிடத்து, அத்தகைய விசாரணையின்போது முன்னிடப்பட்ட சான்றின் அடிப்படையில் அத்தகைய தண்டனை விதிக்கப்படலாம்; மேலும், விதிக்கக் கருதியுள்ள தண்டனை குறித்துக் கூறிக்கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பு எதுவும் அளிக்கவேண்டிய தேவையில்லை:

மேலும் வரம்புரையாக: இந்தக் கூறு

(அ) ஒருவரைக் குற்றச்சார்த்து ஒன்றின்மீது தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கிய அவருடைய நடத்தையின் அடிப்படையில் அவர் பணிநீக்கம் அல்லது பணியறவு அல்லது பணியிறக்கம் செய்யப்பட்டிருக்குமிடத்து; அல்லது
(ஆ) ஒருவரைப் பணிநீக்கம் அல்லது பணியறவு அல்லது பணியிறக்கம் செய்வதற்கு அதிகாரம் பெற்றுள்ள அதிகாரி, அத்தகைய விசாரணையை நடத்துவது, அவர் அளவு எழுதிப் பதிவுசெய்யவேண்டிய காரணம் எதனாலும் தகுமான நடைமுறையில் இயலாதது எனத் தெளிவுறக்காணுமிடத்து; அல்லது
(இ) அரசின் பாதுகாப்பு நலன்கருதி அத்தகைய விசாரணையை நடத்துவது உகந்ததன்று எனக் குடியரசுத்தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, ஆளுநர் தெளிவுறக் காணுமிடத்து

பொருந்துறுதல் ஆகாது.

(3) மேற்கூறப்பட்ட எவரையும் பொறுத்து (2) ஆம் கூறில் சுட்டப்பட்ட விசாரணையை நடத்துவது தகுமான அளவு நடைமுறையில் இயலுமா என்ற பிரச்சினை எழுமாயின், அதன்மீது அவரைப் பணிநீக்கம் அல்லது பணியறவு அல்லது பணியிறக்கம் செய்வதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரி செய்யும் முடிபே அறுதியானது ஆகும்.

312. அனைத்திந்தியப் பணியங்கள் :

(1) VI ஆம் பகுதியின் VI ஆம் அத்தியாயத்தில் அல்லது XI ஆம் பகுதியில் எது எவ்வாறிருப்பினும், ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் பொதுவான ஓர் அனைத்திந்திய நீதித்துறைப் பணியம் உள்ளடங்கலாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்திந்தியப் பணியங்களை உருவாக்குவது நாட்டின் நலனுக்குத் தேவையானது அல்லது உகந்தது என்று மாநிலங்களவை, வந்திருந்து வாக்களிக்கும் அதன் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாதவர்களால் ஆதரிக்கப்பட்ட தீர்மானத்தின் வாயிலாக விளம்புமாயின், நாடாளுமன்றம் சட்டத்தினால் அவ்வாறே வகைசெய்யலாம்; மேலும், அது, இந்த அத்தியாயத்தின் பிற வகையங்களுக்கு உட்பட்டு, அத்தகைய பணியம் எதற்கும் ஆளெடுத்தல், அதற்கு அமர்த்தப்பெறுபவர்களின்' பணிவரைக்கட்டுகள் ஆகியவற்றை ஒழுங்குறுத்தலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/164&oldid=1468532" இலிருந்து மீள்விக்கப்பட்டது