பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140


(3).

(அ)(1) ஆம் கூறில் சுட்டப்பெற்ற எவராலும் செய்துகொள்ளப்பட்ட அல்லது எழுதிக்கொடுக்கப்பட்ட இணக்கஒப்பந்தம், உடன்பாடு அல்லது அதுபோன்ற முறையாவணம் ஒன்றின் வகையம் எதிலிருந்தும் அல்லது அதன் மேற்குறிப்பு எதிலிருந்தும் எழுகிற அல்லது முடியரசின் இந்தியக் குடியியல் பணியம் ஒன்றில் அவர் அமர்த்தப்பெற்றது தொடர்பாகவோ இந்தியத் தன்னாட்சிய அரசாங்கத்தின்கீழ் அல்லது அதன் மாகாண அரசாங்கம் ஒன்றன்கீழ் பணியத்தில் அவர் தொடர்ந்து இருந்துவருவது தொடர்பாகவோ அத்தகையவருக்கு விடுக்கப்பட்ட மடல் எதிலிருந்தும் எழுகிற பூசல் ஒன்றையும்,
(ஆ)முதற்கண் இயற்றப்பட்டவாறான 314ஆம் உறுப்பின்படியான உரிமை, பொறுப்படைவு அல்லது கடமைப்பாடு எதனையும் குறித்த பூசல் ஒன்றையும் பொறுத்து, உச்ச நீதிமன்றமும், பிற நீதிமன்றம் எதுவும் அதிகாரவரம்பு உடையன ஆகா.

(4) முதற்கண் இயற்றப்பட்டவாறான 314ஆம் உறுப்பில் அல்லது இந்த அரசமைப்பின் பிற வகையம் எதிலும் எது எவ்வாறிருப்பினும், இந்த உறுப்பின் வகையங்கள் செல்திறம் உடையன ஆகும்.

313. மாறும் இடைக்காலத்திற்கான வகையங்கள் :

இந்த அரசமைப்பின்படி இதன்பொருட்டுப் பிற வகையம் எதுவும் செய்யப்படும் வரையில், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு செல்லாற்றலில் இருந்து, இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்குப் பின்பும் ஓர் அனைத்திந்திய பணியமாகவோ ஒன்றியம் அல்லது மாநிலம் ஒன்றின் கீழுள்ள பணியமாகவோ பணியடையாகவோ தொடர்ந்து நீடிக்கின்ற அரசுப் பணியம் அல்லது பணியடை ஒன்றிற்குப் பொருந்துறும் சட்டங்கள் அனைத்தும், அவை இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு முரணாக இல்லாத அளவிற்குத் தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவரும்.

[1][314. ★★]

அத்தியாயம் - II
அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்


315. ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் :

(1) இந்த உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, ஒன்றியத்திற்கென அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் இருந்துவரும்.

(2) இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள் அந்த மாநிலங்களின் தொகுப்புக்கென ஒரே அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருந்துவர உடன்படலாம்; மேலும், அதற்கென, அந்த மாநிலங்கள் ஒவ்வொன்றின் சட்டமன்ற அவையினாலும் அல்லது ஈரவைகள் இருக்குமிடத்து, ஒவ்வோர் அவையினாலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின், அந்த மாநிலங்களின் தேவைகளை நிறைவுறுத்தும் பொருட்டு (இந்த அத்தியாயத்தில் கூட்டு ஆணையம் என்று சுட்டப்படும்) மாநில அரசுப் பணியாளர் கூட்டுத் தேர்வாணையம் ஒன்றை அமைப்பதற்கு நாடாளுமன்றம், சட்டத்தினால் வகைசெய்யலாம்.

(3) மேற்கூறப்பட்ட சட்டம் எதுவும், அச்சட்டத்தின் நோக்கங்களைச் செல்திறப்படுத்துவதற்கு அவசியமான அல்லது உகந்ததான சார்வுறு மற்றும் விளைவுறு வகையங்களைக் கொண்டிருக்கலாம்.


  1. 1972ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபத்தெட்டாம் திருத்தம்) சட்டத்தின் 3ஆம் பிரிவினால் (29-8-1972 முதல் செல்திறம் பெறுமாறு) நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/166&oldid=1468676" இலிருந்து மீள்விக்கப்பட்டது