பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

(4) ஒன்றியத்திற்கான அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒரு மாநிலத்தின் ஆளுநரால் அந்த மாநிலத்தின் தேவைகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் நிறைவுறுத்தும் பொருட்டுப் பணியாற்றக் கேட்டுகொள்ளப்படுமாயின், குடியரசுத்தலைவரின் ஒப்பேற்புடன் அவ்வாறு பணியாற்ற உடன்படலாம்.

(5) இந்த அரசமைப்பில் ஒன்றியத்திற்கான அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது மாநிலம் ஒன்றின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் பற்றிய சுட்டுகைகள், தறுவாயின் தேவை வேறானாலன்றி, பிரச்சினையிலுள்ள குறிப்பிட்ட பொருட்பாடு பொறுத்து, ஒன்றியத்தின் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாநிலத்தின் தேவைகளை நிறைவுறுத்தும் பொருட்டுப் பணிபுரியும் ஆணையத்தைக் குறிப்பிடும் சுட்டுகைகளாகப் பொருள்கொள்ளப்படும்.

316. உறுப்பினர்களை அமர்த்துதலும் அவர்களின் பதவிக்காலமும் :

(1) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும் பிற உறுப்பினர்களும், ஒன்றியத்து ஆணையத்தை அல்லது ஒரு கூட்டு ஆணையத்தைப் பொறுத்த வரை குடியரசுத் தலைவராலும், மாநிலம் ஒன்றின் ஆணையத்தைப் பொறுத்த வரை அந்த மாநிலத்தின் ஆளுநராலும் அமர்த்தப்பெறுவர்:

வரம்புரையாக: அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொன்றின் உறுப்பினர்களில் கூடுமானவரையில் ஒரு பாதியினர், அவர்கள் முறையே அமர்த்தப்பெற்ற தேதிகளில் இந்திய அரசாங்கத்தின்கீழ் அல்லது மாநிலம் ஒன்றின் அரசாங்கத்தின்கீழ் குறைந்தது பத்தாண்டுகள் பதவி வகித்தவர்களாக இருத்தல் வேண்டும்; மேற்சொன்ன பத்தாண்டுக் காலஅளவைக் கணக்கிடுவதில், இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு, ஒருவர், முடியரசின்கீழ் இந்தியாவில் அல்லது இந்தியக் குறுநிலம் ஒன்றின் அரசாங்கத்தின்கீழ் பதவி வகித்த கால அளவையும் சேர்த்துத் கொள்ளுதல் வேண்டும்.

(1அ) ஆணையத்தின் தலைவர் பதவி காலியாகுமாயின் அல்லது இருத்தலின்மை காரணமாக அல்லது பிற காரணம் எதனாலும் அத்தலைவர் தம் பதவிக் கடமைகளைப் புரிய இயலாதிருப்பாராயின், காலியான அப்பதவிக்கு (1)ஆம் கூறின்படி அமர்த்தப்பெற்றவர், அப்பதவிக் கடமைகளை மேற்கொள்ளும் வரையில் அல்லது, நேர்வுக்கேற்ப, தலைவர் தம் பதவிக் கடமைகளை மீண்டும் மேற்கொள்ளும் வரையில், ஒன்றியத்து ஆணையத்தை அல்லது கூட்டு ஆணையம் ஒன்றைப் பொறுத்தவரை குடியரசுத்தலைவராலும் மாநில ஆணையம் ஒன்றைப் பொறுத்தவரை அந்த மாநிலத்தின் ஆளுநராலும் அதன்பொருட்டு அமர்த்தப்பெறும் அந்த ஆணையத்தின் பிற உறுப்பினர்களில் ஒருவர் அந்தக் கடமைகளைப் புரிந்து வருவார்.

(2) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஒருவர், தாம் பதவியை மேற்கொள்ளும் தேதியிலிருந்து ஆறு ஆண்டுக் காலத்திற்கு அல்லது ஒன்றியத்து ஆணையத்தைப் பொறுத்தவரை அறுபத்தைந்து வயதை எய்தும் வரையில், மாநில ஆணையம் ஒன்றை அல்லது கூட்டு ஆணையம் ஒன்றைப் பொறுத்தவரை அறுபத்திரண்டு வயதை எய்தும் வரையில், இவற்றில் எது முந்தியதோ அதுவரை, அப்பதவியை வகிப்பார்:

வரம்புரையாக:

(அ) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஒருவர், ஒன்றியத்து ஆணையத்தை அல்லது கூட்டு ஆணையத்தைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆணையம் ஒன்றைப் பொறுத்தவரை அந்த மாநிலத்தின் ஆளுநருக்கும், தம் கையொப்பமிட்டு எழுத்துவழித் தெரிவித்துத் தம் பதவியை விட்டு விலகிக்கொள்ளலாம்;
(ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஒருவர், 317 ஆம் உறுப்பின் (1)ஆம் கூறில் அல்லது (3)ஆம் கூறில் வகை செய்யப்பட்டுள்ள முறையில் அவருடைய பதவியிலிருந்து அகற்றப்படலாம்.

(3) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பதவி வகிக்கும் ஒருவர், தம் பதவிக்காலம் கழிவுறுவதன்மேல், அந்தப் பதவிக்கு மீண்டும் அமர்த்தப்பெறுவதற்குத் தகுமையற்றவர் ஆவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/167&oldid=1468961" இலிருந்து மீள்விக்கப்பட்டது