பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


317. ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஒருவரைப் பணியறவு செய்தலும் தற்காலிகமாக நீக்குதலும் :

(1). (3) ஆம் கூறின் வகையங்களுக்கு உட்பட்டு, உச்ச நீதிமன்றம், தனக்குக் குடியரசுத் தலைவர் குறித்தனுப்புவதன்மீது 145ஆம் உறுப்பில் இதற்கென வகுக்கப்பட்ட நெறிமுறைக்கிணங்க விசாரணை நடத்தி, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அல்லது பிற உறுப்பினர் ஒருவர் நெறிதிறம்பி நடந்துள்ளார் என்னும் காரணத்தின் அடிப்படையில் அவரைப் பணியறவு செய்யவேண்டும் என்று அறிக்கை அளிப்பதன்மேல் மட்டுமே, அத்தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, அத்தகைய பிற உறுப்பினர், குடியரசுத் தலைவரின் ஆணையின்வழி பணியறவு செய்யப்பெறுவார்.

(2) ஆணையத்தின் தலைவரை அல்லது பிற உறுப்பினர் ஒருவரைப் பொறுத்து (1)ஆம் கூறின்படி உச்ச நீதிமன்றத்திற்கு குறித்தனுப்பப்பட்டிருந்து, அவ்வாறு குறித்தனுப்பப்பட்டதன்மீது உச்ச நீதிமன்றம் அளிக்கும் அறிக்கையைக் குடியரசுத்தலைவர் பெற்று, அதன்மீது ஆணை பிறப்பிக்கும் வரை, ஒன்றியத்தின் ஆணையத்தையோ ஒரு கூட்டு ஆணையத்தையோ சார்ந்தவராக அவர் இருப்பாராயின், குடியரசுத்தலைவரும் மாநில ஆணையம் ஒன்றைச் சார்ந்தவராக அவர் இருப்பாராயின் ஆளுநரும், அவரைப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கலாம்.

(3). (1) ஆம் கூறில் எது எவ்வாறிருப்பினும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அல்லது பிற உறுப்பினர் ஒருவர்—

(அ) நொடித்துப்போனவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பாராயின்; அல்லது
(ஆ) தம் பதவிக்காலத்தின்போது, தம் பதவிக்கடமைகளுக்குப் புறம்பாக ஊதியம் பெறும் வேலை எதிலும் ஈடுபடுவாராயின்; அல்லது;
குடியரசுத்தலைவரின் கருத்தின்படி, மனம் அல்லது உடல் தளர்ச்சி காரணமாகப் பதவியில் தொடர்ந்திருப்பதற்குத் தகுதியற்றவராக இருப்பாராயின், அத்தலைவரை அல்லது, நேர்வுக்கேற்ப, அத்தகைய பிற உறுப்பினரைக் குடியரசுத்தலைவர் ஆணையின்வழி பணியறவு செய்யலாம்.

(4) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அல்லது பிற உறுப்பினர் எவரும், கூட்டுருமமாகப் பதிவுசெய்யப்பட்ட நிறுமம் ஒன்றின் உறுப்பினர் என்ற வகையிலும், அந்த நிறுமத்தின் பிற உறுப்பினர்களோடு சேர்ந்து பொதுவான வகையிலும் அல்லாமல் பிற வகையில் இந்திய அரசாங்கத்தால் அல்லது மாநிலம் ஒன்றின் அரசாங்கத்தால் அல்லது அதன் சார்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அல்லது உடன்பாடு எதிலும் எவ்வகையிலேனும் தொடர்பு அல்லது நலப்பற்று கொண்டவராக இருந்தாலும் அல்லது ஆகிவிட்டாலும் அல்லது அதன் ஆதாயத்தில் அல்லது அதிலிருந்து விளையும் நன்மை அல்லது பதவியூதியம் எதிலும் எவ்வகையிலேனும் பங்கு பெறுபவராக இருந்தாலும் (1)ஆம் கூறின் நோக்கங்களைப் பொறுத்தவரை, அவர் நெறிதிறம்பிய நடத்தை என்னும் குற்றம் செய்ததாகக் கொள்ளப்பெறுவார்.

318. ஆணையத்தின் உறுப்பினர்கள், பணியாளர் தொகுதியினர் ஆகியோருடைய பணிவரைக்கட்டுகளைக் குறித்து ஒழுங்குறுத்தும்விதிகளை வகுப்பதற்குள்ள அதிகாரம் :

ஒன்றியத்து ஆணையத்தை அல்லது ஒரு கூட்டு ஆணையத்தைப் பொறுத்தவரை குடியரசுத்தலைவரும், மாநிலம் ஒன்றின் ஆணையத்தைப் பொறுத்தவரை அந்த மாநிலத்தின் ஆளுநரும், ஒழுங்குறுத்தும்விதிகளின்வழி—

(அ)அவ்வாணையத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், அவர்களுடைய பணிவரைக்கட்டுகளையும் தீர்மானிக்கலாம்; மேலும்
(ஆ) அவ்வாணையத்துப் பணியாளர் தொகுதியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், அவர்களுடைய பணிவரைக்கட்டுகளையும் பொறுத்து வகைசெய்யலாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/168&oldid=1468962" இலிருந்து மீள்விக்கப்பட்டது