பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143


வரம்புரையாக: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஒருவரின் பணிவரைக்கட்டுகள் அவர் அமர்த்தப்பெற்ற பின்பு அவருக்குப் பாதகமான வகையில் மாற்றப்படுதல் ஆகாது.

319. ஆணையத்தின் உறுப்பினர்கள் அத்தகைய உறுப்பினர்களாக இருப்பது அற்றுப்போன பின்பு, பிற பதவிகள் வகிப்பது குறித்த தடை :

பதவி வகிப்பது அற்றுப்போன பின்பு—

(அ) ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், இந்திய அரசாங்கத்தின் கீழோ மாநிலம் ஒன்றின் அரசாங்கத்தின் கீழோ மேற்கொண்டு வேலையில் அமர்த்தப் பெறுவதற்குத் தகுமையற்றவர் ஆவார்;
(ஆ) மாநிலம் ஒன்றின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், ஒன்றியத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவோ அதன் பிற உறுப்பினர் ஒருவராகவோ பிறிதொரு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவோ அமர்த்தப் பெறுவதற்குத் தகுமையுடையவர் ஆவார்; ஆனால் அவர், இந்திய அரசாங்கத்தின் கீழோ மாநிலம் ஒன்றின் அரசாங்கத்தின் கீழோ பிற வேலை எதிலும் அமர்த்தப்பெறுவதற்குத் தகுமையுடையவர் ஆகார்.
(இ)ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரல்லாத பிற உறுப்பினர் ஒருவர், ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவோ மாநிலம் ஒன்றின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவோ அமர்த்தப்பெறுவதற்குத் தகுமையுடையவர் ஆவார்; ஆனால், அவர், இந்திய அரசாங்கத்தின் கீழோ மாநில அரசாங்கம் ஒன்றின் கீழோ பிற வேலை எதிலும் அமர்த்தப் பெறுவதற்குத் தகுமையுடையவர் ஆகார். (ஈ) மாநிலம் ஒன்றின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரல்லாத பிற உறுப்பினர் ஒருவர், ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவோ பிற உறுப்பினர் ஒருவராகவோ அந்த மாநிலத்தின் அல்லது பிறிதொரு மாநிலத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவோ அமர்த்தப்பெறுவதற்குத் தகுமையுடையவர் ஆவார்; ஆனால், அவர், இந்திய அரசாங்கத்தின் கீழோ மாநில அரசாங்கம் ஒன்றின் கீழோ பிறவேலை எதிலும் அமர்த்தப்பெறுவதற்குத் தகுமையுடையவர் ஆகார்.

320. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செயற்பணிகள் :

(1) ஒன்றியத்துப் பணியங்களிலும் மாநிலத்துப் பணியங்களிலும் அமர்த்தப் பெறுவதற்கான தேர்வுகளை நடத்துவது, முறையே, ஒன்றியம், மாநிலம் ஆகியவற்றின் அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் கடமை ஆகும்.

(2) சிறப்புத் தகுதிப்பாடுகள் கொண்டுள்ள வேட்புநர்கள் தேவைப்படும் பணியங்கள் எவற்றிற்கேனும் கூட்டாக ஆளெடுக்கும் திட்டங்களை உருவாக்குவதிலும் செயற்படுத்துவதிலும் உதவிபுரியுமாறு இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள் கேட்டுக்கொள்ளுமாயின், அவ்வாறே அவற்றிற்கு உதவிபுரிதலும் ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை ஆகும்.

(3)

(அ) குடியியல் பணியங்கள் குடியியல் பணியடைகள் ஆகியவற்றிற்கு ஆளெடுக்கும் முறைகள் தொடர்பான அனைத்துப் பொருட்பாடுகள் பற்றியும்,
(ஆ) குடியியல் பணியங்கள், பணியடைகள் ஆகியவற்றில் அமர்த்துவதிலும் ஒரு பணியத்திலிருந்து மற்றொன்றுக்குப் பதவி உயர்வுகள், மாற்றங்கள் செய்வதிலும் பின்பற்றப்பட வேண்டிய நெறிகள் பற்றியும், அத்தகைய அமர்த்துகைகள், பதவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/169&oldid=1468964" இலிருந்து மீள்விக்கப்பட்டது