பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171


360. நிதி நிலை நெருக்கடி பற்றிய வகையங்கள் :

(1) இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிநிலவரைப் பகுதி எதனின் நிதி பொறுத்த நிலைத்திறத்திற்கு அல்லது நிதிமதிப்பு நிலைக்கு ஆபத்து விளைவிக்கும் நிலை எழுந்துள்ளது எனக் குடியரசுத்தலைவர் தெளிவுறக்காண்பாராயின், அவர், ஒரு சாற்றாணையின் வழி, அத்தகைய நிலை எழுந்துள்ளதென விளம்பலாம்.

(2) (1) ஆம் கூறின்படி பிறப்பிக்கப்படும் சாற்றாணை எதுவும்

(அ) பிந்திய சாற்றாணை ஒன்றினால் முறித்தறவோ மாறுதலோ செய்யப்படலாம்;
(ஆ) நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்கப்படுதல் வேண்டும்:
(இ) இரண்டு மாதக் காலஅளவு கழிவுறுவதற்கு முன்பே, நாடாளுமன்ற ஈரவைகளும் தீர்மானங்கள் வாயிலாக ஒப்பேற்பு அளித்திருந்தாலன்றி, அக்காலஅளவு கழிவுற்றதும் செயற்பாடு அற்றுப் போகும்:

வரம்புரையாக: அத்தகைய சாற்றாணை எதுவும், மக்களவை கலைக்கப்பட்டிருக்கும் காலத்தின்போது பிறப்பிக்கப்படுகிறது அல்லது (இ) உட்கூறில் சுட்டப்பட்டுள்ள இரண்டு மாதக் காலஅளவின்போது மக்களவையின் கலைப்பு நிகழ்கிறது என்றாலும், அந்தச் சாற்றாணைக்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மாநிலங்களவையால் நிவைவேற்றப்பட்டிருந்து, ஆனால் அக்காலஅளவு கழிவுறுவதன் முன்பு, அச்சாற்றாணை பொறுத்து தீர்மானம் எதுவும் மக்களவையால் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், மக்களவை, அதன் மறு அமைப்புக்குப் பின்பு முதன்முதலாக அமரும் தேதியிலிருந்து முப்பது நாள் கழிவுறுவதற்கு முன்பு, அச்சாற்றாணைக்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மக்களவையால் நிறைவேற்றப்பட்டிருந்தாலன்றி, அச்சாற்றாணை மேற்சொன்ன அந்த முப்பது நாள் காலஅளவு கழிவுற்றதும் செயற்பாடு அற்றுப்போகும்.

(3). (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்டுள்ள சாற்றாணை எதுவும் செயற்பாட்டிலிருக்கும் காலஅளவின்போது, ஒன்றியத்து ஆட்சி அதிகாரமானது, அதன் பணிப்புரைகளில் குறித்துரைக்கப்படும் நிதிநெறி விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு மாநிலம் எதற்கும் பணிப்புரைகள் இடுவதையும் அதற்குத் தேவை எனவும், ஏற்றவை எனவும் குடியரசுத்தலைவர் கருதும் பிற பணிப்புரைகளை இடுவதையும் அளாவி நிற்கும்.

(4) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்

(அ) அத்தகைய பணிப்புரை எதுவும்

(i) ஒரு மாநிலத்து அலுவற்பாடுகள் தொடர்பாக பணிபுரிகிறவர்கள் அனைவரின் அல்லது அவர்களில் ஒரு வகையினரின் வரையூதியங்களையும் படித்தொகைகளையும் குறைப்பதை வேண்டுறுத்தும் வகையம் ஒன்றை உள்ளடக்கலாம்;
(ii) பணச்சட்ட முன்வடிவுகள் அனைத்தும் அல்லது 207ஆம் உறுப்பின் வகையங்கள் பொருந்துறுகிற பிற சட்டமுன்வடிவுகள் அந்த மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பின்பு குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக ஒதுக்கி வைக்கப்பட வேண்டுமென வேண்டுறுத்துகிற வகையம் ஒன்றை உள்ளடக்கலாம்.

(ஆ) இந்த உறுப்பின்படி பிறப்பிக்கப்படும் சாற்றாணை எதுவும் செயற்பாட்டிலிருக்கும் காலஅளவின்போது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் நீதிபதிகள் உள்ளடங்கலாக, ஒன்றியத்து அலுவற்பாடுகள் தொடர்பாகப் பணிபுரிபவர்கள் அனைவரின் அல்லது அவர்களின் ஒரு வகையினரின் வரையூதியங்களையும் படித்தொகைகளையும் குறைப்பதற்கான பணிப்புரைகள் இடுவதற்குக் குடியரசுத்தலைவர் தகுதிறம் உடையவர் ஆவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/197&oldid=1469035" இலிருந்து மீள்விக்கப்பட்டது