பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172


பகுதி XIX
பல்வகை


361. குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், இராஜப்பிரமுகர்கள் ஆகியோருக்குக் காப்பளிப்பு :

(1) குடியரசுத்தலைவர் அல்லது ஒரு மாநிலத்தின் ஆளுநர் அல்லது இராஜப்பிரமுகர் தமது பதவியின் அதிகாரங்களைச் செலுத்துவதற்காகவும் கடமைகளைப் புரிவதற்காகவும், அல்லது அந்த அதிகாரங்களைச் செலுத்துவதிலும் கடமைகளைப் புரிவதிலும் அவர் செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயல் எதனையும் குறித்து நீதிமன்றம் எதற்கும் காரணங்கூறும் பொறுப்புடையவர் ஆகார்:

வரம்புரையாக: 61 ஆம் உறுப்பின்படியான ஒரு குற்றச்சார்த்தினை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தின் ஈரவைகளில் எதனாலும் அமர்த்தப்பட்ட அல்லது குறித்திடப்பட்ட நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது குழுமம் எதனாலும் குடியரசுத்தலைவரின் நடத்தை ஆய்வு செய்யப்படுவதற்காக கொண்டுவரப்படலாம்:

மேலும் வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், இந்திய அரசாங்கத்திற்கு அல்லது ஒரு மாநில அரசாங்கத்திற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு எவருக்கும் உள்ள உரிமையை வரையறை செய்வதாகப் பொருள்கொள்ளப்படுதல் ஆகாது.

(2) குடியரசுத்தலைவரின் அல்லது ஒரு மாநில ஆளுநரின் பதவிக் காலத்தின்போது, அவருக்கு எதிராக நீதிமன்றம் எதிலும் எவ்வகையான குற்றவியல் நடவடிக்கையும் தொடரப்படுதலோ தொடர்ந்து நடத்தப்படுதலோ ஆகாது.

(3) குடியரசுத்தலைவரின் அல்லது ஒரு மாநில ஆளுநரின் பதவிக் காலத்தின்போது அவரைக் கைதுசெய்வதற்கோ சிறையிடுவதற்கோ நீதிமுறைக் கட்டளை எதுவும், நீதிமன்றம் எதிலிருந்தும் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.

(4) குடியரசுத்தலைவராக அல்லது ஒரு மாநில ஆளுநராக ஒருவர் பதவி ஏற்பதற்கு முன்போ பின்போ தமது சொந்தமுறையில் செய்த அல்லது செய்ததாகக் கருதப்படுகிற செயல் எதற்காகவும், குடியரசுத்தலைவருக்கு அல்லது அந்த ஆளுநருக்கு எதிராகத் தீருதவி கோரும் உரிமையியல் நடவடிக்கை எதுவும், அவரது பதவிக்காலத்தின்போது அந்நடவடிக்கையின் தன்மை, அதற்கான வழக்குமூலம், அந்நடவடிக்கையினைத் தொடரவிருக்கும் தரப்பினரின் பெயர், விவரம், உறைவிடம், அவர் கோரும் தீருதவி ஆகியவற்றைக் குறிப்பிட்டு எழுத்துமூலமாக அறிவிப்பு ஒன்று குடியரசுத்தலைவரிடம் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த ஆளுநரிடம் ஒப்புவிக்கப்பட்டதற்கு அல்லது அவரது அலுவலகத்தில் சேர்ப்பிக்கப்பட்டதற்கு அடுத்துப் பின்பு இரண்டு மாதம் கழிவுற்றதன்மேலன்றி, நீதிமன்றம் எதிலும் தொடரப்படுதல் ஆகாது.

361அ. நாடாளுமன்றம், மாநிலச் சட்ட மன்றங்கள் ஆகியவற்றின் நடவடிக் உக்கைகளை வெளியிடுவதற்குக் காப்பளிப்பு :

(1) நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றன் அல்லது மாநிலம் ஒன்றன் சட்டமன்றப் பேரவை அல்லது, நேர்வுக்கேற்ப, சட்டமன்ற ஈரவைகளில் ஒன்றன் நடவடிக்கைகள் எவற்றையும் பற்றி உறுபொருளின் உண்மையான அறிக்கையைச் செய்தித்தாளில் வெளியிட்டது பொறுத்து, அது தீய நோக்குடன் வெளியிடப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டாலன்றி, நீதிமன்றம் எதிலும் எவரொருவரும் உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கை எதற்கும் உள்ளாகமாட்டார்:

வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றன் அல்லது மாநிலம் ஒன்றன் சட்டமன்றப்பேரவை அல்லது, நேர்வுக்கேற்ப, சட்டமன்ற ஈரவைகளின் ஒன்றன் இரகசிய அமர்வின் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை எதனையும் வெளியிடுவதற்குப் பொருந்துறுவதில்லை.

(2). (1) ஆம் கூறு, ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அல்லது பொருட்பாடுகள் தொடர்பாகப் பொருந்துறுவது போன்றே, ஒர் ஒலிபரப்பு நிலைய நிகழ்ச்சியின் அல்லது பணியின் பகுதியாகக் கம்பியில்லாத் தந்தி மூலம் ஒலிபரப்பப்படும் அறிக்கைகள் அல்லது பொருட்பாடுகள் தொடர்பாகவும் பொருந்துறுவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/198&oldid=1469034" இலிருந்து மீள்விக்கப்பட்டது