பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175



(2) இந்த உறுப்பில்

(அ) "பெருந்துறைமுகம்" என்பது நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் எதனாலுமோ அதன் வழியாலோ அல்லது நிலவுறும் சட்டம் எதனாலுமோ அதன் வழியாலோ, பெருந்துறைமுகம் என விளம்பப்பட்டுள்ள ஒரு துறைமுகம் என்று பொருள்படும்; மேலும், அப்போதைக்கு அத்தகைய துறைமுகத்தின் எல்லைகளுக்குள் அடங்கியுள்ள பரப்பிடங்கள் அனைத்தையும் அது உள்ளடக்கும்;

(ஆ) "வானூர்திநிலையம்" என்பது, வானூர்தியங்கள், வானூர்திகள், வான்வழிச் செலுத்தம் ஆகியவை தொடர்பான சட்டங்களின் பொருட்டு பொருள்வரையறை செய்யப்பட்ட வானூர்திநிலையம் என்று பொருள்படும்.

365. ஒன்றியத்தின் பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்கவோ அவற்றைச் செல்திறப்படுத்தவோ தவறுமிடத்து ஏற்படும் விளைவு:

இந்த அரசமைப்பின் வகையங்களில் எதன்படியும் ஒன்றியத்து ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துகையில் இடப்படும் பணிப்புரைகள் எவற்றுக்கும் இணங்கி நடக்கவோ அவற்றைச் செல்திறப்படுத்தவோ மாநிலம் எதுவும் தவறியிருக்குமிடத்து, அந்த மாநிலத்தின் அரசாங்கத்தை இந்த அரசமைப்பின் வகையங்களின்படி நடத்த இயலாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது எனக் குடியரசுத்தலைவர் முடிவு செய்தால், அது சட்டமுறையானது ஆகும்.

366. பொருள்வரையறைகள்:

இந்த அரசமைப்பில் தறுவாயின்தேவை வேறானாலன்றி, பின்வரும் சொற்றொடர்கள் அவற்றுக்கு முறையே ஈங்கிதனால் குறித்தளிக்கப்படும் பொருள்களை உடையன ஆகும்; அவையாவன:

(1) "வேளாண் வருமானம்" என்பது, இந்திய வருமானவரி தொடர்பான சட்டங்களின் பொருட்டு பொருள்வரையறை செய்யப்பட்ட வேளாண் வருமானம் என்று பொருள்படும்;

(2) “ஓர் ஆங்கிலோ இந்தியர்" என்பது, தம்முடைய தந்தையோ பிற ஆண்வழி மூதாதையர் எவருமோ ஐரோப்பியக் குடிவழியினராய் இருப்பவராகவும் அல்லது இருந்தவராகவும், ஆனால், இந்திய ஆட்சிநிலவரைக்குள் நிலைவாழ்வகம் உடையவராகவும் இருப்பதுடன் தற்காலிக நோக்கங்களுக்காக மட்டுமின்றி அத்தகைய ஆட்சிநிலவரையிலேயே வழக்கமாகக் குடியிருக்கும் பெற்றோருக்கு அந்த ஆட்சிநிலவரைக்குள் பிறக்கின்றவராகவும் அல்லது பிறந்தவராகவும் உள்ள ஒருவர் என்று பொருள்படும்;

(3) "உறுப்பு" என்பது, இந்த அரசமைப்பின் ஓர் உறுப்பு என்று பொருள்படும்;

(4) "கடன் பெறுதல்” என்பது, ஆண்டுத் தொகைகள் வழங்குவதன் வாயிலாகப் பணம் திரட்டுவதை உள்ளடக்கும், மேலும், “பெறுகடன்" என்பதும் அவ்வாறே பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்:

(5) “கூறு” என்பது, அந்தச் சொல் இடம் பெறுகிற உறுப்பின் ஒரு கூறு என்று பொருள்படும்; (6) "கூட்டுரும வரி" என்பது, நிறுமங்களால் செலுத்தப்பட வேண்டிய வரியாகவும், பின்வரும் வரைக்கட்டுகளுக்கு இயைபுடைய வரியாகவும் உள்ள அளவிற்கு வருமானத்தின் மீதான வரி எதுவும் என்று பொருள்படும்:

(அ) அது வேளாண் வருமானம் மீது சார்ந்தத்தக்கதாக இல்லாமை;

(ஆ) நிறுமங்கள் செலுத்தும் வரியின் வகைக்காக, அந்நிறுமங்களால் தனிநபர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய பங்கு ஆதாயங்களிலிருந்து கழித்துக் கொள்வதற்கு அந்த வரிக்குப் பொருந்துறும் சட்டங்களில் எதுவும் அதிகாரமளிக்காமை;

(இ) இந்திய வருமான வரியைப் பொறுத்தவரை, அத்தகைய பங்கு ஆதாயங்களைப் பெறும் தனிநபர்களுடைய மொத்த வருமானத்தைக் கணக்கிடுவதில் அல்லது அத்தகைய தனி நபர்கள் செலுத்த வேண்டிய அல்லது அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய இந்திய வருமான வரியைக் கணக்கிடுவதில், அவ்வாறு செலுத்தப்பட்ட வரியைக் கணக்கில் எடுத்துக் கொள்வதற்கான வகையம் எதுவும் இல்லாமை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/201&oldid=1469004" இலிருந்து மீள்விக்கப்பட்டது