பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174


(2) இந்த உறுப்பில்

(அ) “இந்தியக் குறுநிலம்" என்பது, அத்தகைய குறுநிலம் என இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு மாட்சிமை தங்கிய மன்னரால் அல்லது இந்தியத் தன்னாட்சிய அரசாங்கத்தால் ஏற்பளிக்கப்பட்ட ஆட்சிநிலவரை எதுவும் என்று பொருள்படும்;
(ஆ) “அரசர்” என்பது, அத்தகைய தொடக்கநிலைக்கு முன்பு இந்தியக் குறுநிலம் ஒன்றன் அரசர் என மாட்சிமை தங்கிய மன்னரால் அல்லது இந்தியத் தன்னாட்சிய அரசாங்கத்தால் ஏற்பளிக்கப்பட்ட மன்னரை, குடித்தலைவரை அல்லது பிறர் ஒருவரை உள்ளடக்கும்.

363அ. இந்தியக் குறுநில அரசர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஏற்பளிப்பு அற்றுப்போதல் மற்றும் மன்னர் மானியங்கள் ஒழிக்கப்படுதல் :

இந்த அரசமைப்பில் அல்லது நிகழுறு காலத்தில் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதிலும் எது எவ்வாறிருப்பினும்,

(அ) 1971ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபத்தாறாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்பு, எச்சமயத்திலேனும், இந்தியக் குறுநிலம் ஒன்றன் அரசர் எனக் குடியரசுத்தலைவரால் ஏற்பளிக்கப்பட்ட மன்னர், குடித்தலைவர் அல்லது பிறர் ஒருவர் அல்லது அத்தகைய தொடக்கநிலைக்கு முன்பு எச்சமயத்திலேனும் அத்தகைய அரசரின் வழி வந்தவர் எனக் குடியரசுத் தலைவரால் ஏற்பளிக்கப்பட்ட எவரும், அத்தகைய தொடக்கநிலையிலிருந்தும் அது முதற்கொண்டும் அத்தகைய அரசராக அல்லது அத்தகைய அரசரின் வழி வந்தவர் என ஏற்பளிக்கப்பட்டது அற்றுப்போகும்.
(ஆ) 1971 ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபத்தாறாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலையிலிருந்தும், அது முதற்கொண்டும் மன்னர் மானியம் ஒழிக்கப்படுகிறது; அத்துடன், மன்னர் மானியம் பொறுத்த உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள், அனைத்தும் இறுதியுறுகின்றன; மேலும், அதற்கிணங்க (அ) கூறில் சுட்டப்பட்ட அரசர் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த அரசருக்குப் பின்னர் பதவிக்கு அடுத்து வந்தவர் அல்லது பிறர் எவருக்கும் மன்னர் மானியமாகத் தொகை எதுவும் வழங்கப்படுதல் ஆகாது.

364. பெருந்துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் ஆகியவை குறித்த தனியுறு வகையங்கள் :

(1) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், குடியரசுத்தலைவர், பொது அறிவிக்கை வாயிலாக, அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் தேதியிலிருந்து

(அ) நாடாளுமன்றத்தால் அல்லது ஒரு மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் எதுவும், பெருந்துறைமுகம் அல்லது வானூர்திநிலையம் எதற்கும் பொருந்துறுவதாகாது என்றோ, அந்த அறிவிக்கையில் குறிந்துரைக்கப்படும் விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு அதற்குப் பொருந்துறுவதாகும் என்றோ பணிக்கலாம்; அல்லது
(ஆ) நிலவுறும் சட்டம் எதுவும், மேற்சொன்ன தேதிக்கு முன்பு செய்யப்பட்டவை அல்லது செய்யாது விடப்பட்டவை பொறுத்துத் தவிர, பெருந்துறைமுகம் அல்லது வானூர்திநிலையம் எதிலும் செல்திறம் அற்றுப்போகும் என்றோ, அது அத்தகைய துறைமுகம் அல்லது வானூர்திநிலையத்திற்குப் பொருந்துறுவதில், அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைகளுக்கு உட்பட்டுச் செல்திறம்பெறும் என்றோ பணிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/200&oldid=1469033" இலிருந்து மீள்விக்கப்பட்டது