பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193


(2). (1) ஆம் கூறிலுள்ள எதுவும், மேற்சொன்ன கூறின்படி குடியரசுத்தலைவரால் தழுவமைவு அல்லது மாற்றமைவு செய்யப்பட்ட சட்டம் எதனையும் தகுதிறமுள்ள சட்டமன்றமோ பிற அதிகார அமைப்போ நீக்கறவு அல்லது திருத்தம் செய்வதைத் தடுப்பதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

373. தடுப்புக் காவலில் உள்ளவர்களைப் பொறுத்து, குறித்தசில நேர்வுகளில் ஆணை பிறப்பிப்பதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம் :

22 ஆம் உறுப்பின் (7)ஆம் கூறின்படி நாடாளுமன்றத்தால் வகைசெய்யப்படுதல், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து ஓராண்டு கழிவுறுதல், இவற்றில் எது முந்தியதோ அதுவரையில், மேற்சொன்ன உறுப்பின் (4), (7) ஆகிய கூறுகளில் நாடாளுமன்றம் என்ற சுட்டுகைக்கு மாற்றாக குடியரசுத்தலைவர் என்ற சுட்டுகை அமைந்திருந்தாற்போன்றும், அந்தக் கூறுகளில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் என்ற சுட்டுகைக்கு மாற்றாக குடியரசுத்தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை என்ற சுட்டுகை அமைந்திருந்தாற்போன்றும் அந்த உறுப்பு செல்திறம் உடையது ஆகும்.

374. கூட்டாட்சிய நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கூட்டாட்சிய நீதிமன்றத்தில் அல்லது மன்றத்தமர் மாட்சிமைதங்கிய மன்னர் முன்பு முடிவுறாநிலையிலுள்ள நடவடிக்கைகள் பற்றிய வகையங்கள் :

(1) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு பதவிவகித்த கூட்டாட்சிய நீதிமன்ற நீதிபதிகள், பிறவாறு அவர்கள் தேர்ந்து ஏற்றிருந்தாலன்றி, அத்தகைய தொடக்கநிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆவர்; அதன்மேல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பொறுத்து 125ஆம் உறுப்பின்படி வகைசெய்யப்பட்டுள்ள வரையூதியங்களுக்கும் படித்தொகைகளுக்கும் வாராமை விடுப்பு ஓய்வூதியம் பொறுத்த உரிமைகளுக்கும் அவர்கள் உரிமைகொண்டவர்கள் ஆவர்.

(2) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில் கூட்டாட்சிய நீதிமன்றத்தில் முடிவுறாநிலையிலுள்ள உரிமையியல் அல்லது குற்றவியல் சார்ந்த வழக்குகள், மேன்முறையீடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படும்; உச்ச நீதிமன்றம், கேட்பு நல்கி அவற்றை முடிவு செய்யும் அதிகாரவரம்பு உடையது ஆகும்; மேலும், இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு கூட்டாட்சிய நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புரைகள் அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணைகள், அவை உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தாற்போன்று அல்லது பிறப்பிக்கப்பட்டிருந்தாற்போன்று அதே செல்லாற்றலும் செல்திறமும் உடையன ஆகும்.

(3) இந்த அரசமைப்பிலுள்ள எதுவும், இந்திய ஆட்சிநிலவரைக்குள் உள்ள நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலுமிருந்தும் அல்லது எதனைப் பொறுத்தும் எழுகின்ற மேன்முறையீடுகளையும் மனுக்களையும் தீர்வுசெய்வதற்காக மன்றத்தமர் மாட்சிமைதங்கிய மன்னர் எந்த அளவு அதிகாரம் பெற்றிருக்கிறாரோ அந்த அளவுக்கு அதிகாரம் செலுத்தப்படுவதைச் செல்லுந்தன்மையற்றதாக்கும் வகையில் செயற்படுதல் ஆகாது; மேலும், இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்குப் பின்பு அத்தகைய மேன்முறையீடு அல்லது மனு எதன்மீதும் பிறப்பிக்கப்பட்ட மன்றத்தமர் மாட்சிமை தங்கிய மன்னர் பிறப்பித்த ஆணை எதுவும், இந்த அரசமைப்பினால் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைச் செலுத்துகையில், அத்தகைய நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையாக அல்லது தீர்ப்பாணையாக இருப்பது போன்று, அனைத்து நோக்கங்களுக்காகவும் செல்திறம் உடையது ஆகும்.

(4) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலும் அது முதற்கொண்டும், முதலாம் இணைப்புப்பட்டியலின் ஆ பகுதியில் குறித்துரைக்கப்பட்ட ஒரு மாநிலத்திலுள்ள நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலிருந்தும் அல்லது அதனைப் பொறுத்து எழுகின்ற மேன்முறையீடுகளையும் மனுக்களையும் ஏற்றுக்கொள்வதற்கும் தீர்வுசெய்வதற்கும் அந்த மாநிலத்தின் அரசப்பேராயமாகச் செயற்பணியாற்றும் அதிகார அமைப்பிற்குள்ள அதிகாரம் அற்றுப்போகும்; மேலும், அத்தகைய தொடக்கநிலையில் மேற்சொன்ன அதிகாரஅமைப்பின் முன்பு முடிவுறாநிலையிலுள்ள மேன்முறையீடுகள், பிற நடவடிக்கைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அதனால் தீர்வு செய்யப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/219&oldid=1469088" இலிருந்து மீள்விக்கப்பட்டது