பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192


(3). (2)ஆம் கூறிலுள்ள எதுவும்

(அ) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து மூன்று ஆண்டுகள் கழிவுற்ற பின்பு, சட்டம் எதிலும் தழுவமைவு அல்லது மாற்றமைவு எதனையும் செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்கு அதிகாரமளிப்பதாகவோ,
(ஆ) மேற்சொன்ன கூறின்படி குடியரசுத்தலைவரால் தழுவமைவு அல்லது மாற்றமைவு செய்யப்பட்ட சட்டம் எதனையும் தகுதிறமுள்ள சட்டமன்றம் அல்லது தகுதிறமுள்ள பிற அதிகார அமைப்பு எதுவும் நீக்கறவு அல்லது திருத்தம் செய்வதைத் தடையூறு செய்வதாகவோ

கொள்ளப்படுதல் ஆகாது.

விளக்கம் I.- இந்த உறுப்பில் “செல்லாற்றலிலுள்ள சட்டம்" என்னும் சொற்றொடர், இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள ஒரு சட்டமன்றத்தினால் அல்லது தகுதிறமுள்ள பிறவகை அதிகாரஅமைப்பினால் இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு அல்லது இயற்றப்பட்டு முன்னரே நீக்கறவு செய்யப்படாத ஒரு சட்டத்தை, அத்தகைய சட்டம் எதுவும் அல்லது அதன் பகுதிகள் எவையும் அப்போது முற்றிலுமோ குறிப்பிட்ட பரப்பிடங்களிலோ செயற்பாட்டில் இல்லாதிருப்பினும், உள்ளடக்கும்.

விளக்கம் II.-இந்திய ஆட்சிநிலவரையில் ஒரு சட்டமன்றத்தினால் அல்லது தகுதிறமுள்ள பிற அதிகாரஅமைப்பினால் நிறைவேற்றப்பட்டு அல்லது இயற்றப்பட்டு இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு அந்த ஆட்சிநிலவரையைக் கடந்து செல்திறமும், அத்துடன் இந்திய ஆட்சிநிலவரையில் செல்திறமும் உடைய சட்டம் எதுவும், மேற்சொன்ன அத்தகைய தழுவமைவுகள், மாற்றமைவுகள் எவற்றிற்கும் உட்பட்டு, ஆட்சிநிலவரையைக் கடந்த செல்திறனைத் தொடர்ந்து உடையது ஆகும்.

விளக்கம் III.- இந்த உறுப்பிலுள்ள எதுவும் செல்லாற்றலிலுள்ள தற்காலிகச் சட்டம் எதனையும், அது கழிவுறுவதற்கென நிருணயிக்கப்பட்ட தேதிக்கு பின்பு அல்லது இந்த அரசமைப்பு செல்லாற்றலுக்கு வராதிருக்குமாயின், அது கழிவுற்றிருக்கவேண்டிய தேதிக்குப் பின்பு தொடர்ந்திருக்கச் செய்வதாகப் பொருள்கொள்ளுப்படுதல் ஆகாது.

விளக்கம் IV.- 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் 88ஆம் பிரிவின்படி ஒரு மாகாண ஆளுநரால் சாற்றம் செய்யப்பட்டு, இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு செல்லாற்றலிலிருந்த ஓர் அவசரச்சட்டம், அந்த மாகாணத்திற்கு நேரிணையான மாநிலத்தின் ஆளுநரால் முன்னதாகத் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய தொடக்கநிலைக்குப் பின்பு 382 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின்படி செயலுறுகிற அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்திலிருந்து ஆறு வாரங்கள் கழிவுற்றதும் செயற்படுவது அற்றுப்போகும்; மேலும், இந்த உறுப்பிலுள்ள எதுவும் செல்லாற்றலிலுள்ள அத்தகைய அவசரச்சட்டம் எதனையும் மேற்சொன்ன காலஅளவிற்கு பின்பும் தொடர்ந்திருக்கச் செய்வதாகப் பொருள்கொள்ளப்படுதல் ஆகாது.

372அ. சட்டங்களைத் தழுவமைவு செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம் :

(1) 1956ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு இந்தியாவில் அல்லது அதன் பகுதி எதிலும் செல்லாற்றலிலிருந்த சட்டம் ஒன்றன் வகையங்களை அந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு இணங்கி இருக்குமாறு செய்வதற்காகக் குடியரசுத்தலைவர், 1957 நவம்பர் முதல் நாளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ஆணையின்வழி நீக்கறவு அல்லது திருத்தம் என்னும் முறையில் தேவையென அல்லது உகந்ததெனக் கருதும் தழுவமைவுகளையும் மாற்றமைவுகளையும் அச்சட்டத்தில் செய்யலாம்; மேலும், அந்தச் சட்டம் அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் தேதியிலிருந்து, அவ்வாறு செய்யப்பட்ட தழுவமைவுகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு,செல்திறம் உடையதாக இருக்க வகைசெய்யலாம்; அத்தகைய தழுவமைவு அல்லது மாற்றமைவு எதனையும் குறித்து நீதிமன்றம் எதிலும் எதிர்த்து வாதிடுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/218&oldid=1469090" இலிருந்து மீள்விக்கப்பட்டது