பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191


வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும் 1986ஆம் ஆண்டு அரசமைப்பு (ஐம்பத்து மூன்றாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, ஒன்றியத்து ஆட்சிநிலவரையாகிய மிசோரத்தில் செல்லாற்றலிலிருந்த மைய அரசுச் சட்டம் எதற்கும் பொறுந்துறுதல் ஆகாது;

(ஆ) மிசோரம் மாநிலச் சட்டமன்றப் பேரவையானது நாற்பதுக்குக் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

371ஏ. அருணாசலப் பிரதேச மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்—

(அ) அருணாசலப்பிரதேச ஆளுநர், அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பொறுத்துத் தனிப் பொறுப்பு உடையவர் ஆவார்; மேலும், அது தொடர்பாகத் தம் பதவிப்பணிகளை ஆற்றுகையில், ஆளுநர், தாம் எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து, அமைச்சரவையைக் கலந்தாய்வு செய்தபின்பு தாமே முடிவுசெய்வார்:

வரம்புரையாக: ஒரு பொருட்பாடு, இந்தக் கூறின்படி ஆளுநர் தாமே முடிவுசெய்கிறபடி செயற்பட வேண்டுறுத்தப்பட்ட ஒரு பொருட்பாடா இல்லையா என்பதைப் பொறுத்துப் பிரச்சனை எதுவும் எழுமாயின், ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செய்யும் முடிவே அறுதியானது ஆகும்; ஆளுநர் தாம் முடிவுசெய்கிறபடி செயற்பட்டிருக்கவேண்டும் அல்லது கூடாது என்பதைக் காரணமாகக் காட்டி, அவரால் செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மையையும் எதிர்த்து வாதிடுதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக: குடியரசுத்தலைவர், ஆளுநரிடமிருந்து ஓர் அறிக்கையைப் பெற்றதன்மேல் அல்லது பிறவாறு அருணாசலப் பிரதேச மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு பொறுத்து ஆளுநர் தனிப்பொறுப்பு உடையவராயிருப்பது இனித் தேவையில்லை என்று தெளிவுறக்கான்பாராயின், அவர், ஆணையின்வழி, அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் தேதியிலிருந்து செல்திறம் பெறுமாறு ஆளுநர் அத்தகைய பொறுப்பு உடையவராயிருப்பது அற்றுப் போகும் என்று பணிக்கலாம்.

(ஆ) அருணாசப் பிரதேச மாநிலச் சட்டமன்றப் பேரவையானது முப்பதுக்குக் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

371ஐ. கோவா மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், கோவா மாநிலச் சட்டமன்றப் பேரவையானது முப்பதுக்குக் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

372. நிலவுறும் சட்டங்கள் தொடர்ந்து செல்லாற்றலில் இருத்தல் மற்றும் அவற்றின் தழுவமைவு :

(1) 395ஆம் உறுப்பில் சுட்டப்பட்டுள்ள சட்டங்கள் இந்த அரசமைப்பினால் நீக்கறவு செய்யப்பட்டிருப்பினும், இந்த அரசமைப்பின் பிற வகையங்களுக்கு உட்பட்டு, இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு இந்திய ஆட்சிநிலவரையில் செல்லாற்றலிலிருந்த சட்டங்கள் அனைத்தும், தகுதிறமுள்ள ஒரு சட்டமன்றத்தினால் அல்லது தகுதிறமுள்ள பிற அதிகாரஅமைப்பினால் மாற்றமோ நீக்கறவோ திருத்தமோ செய்யப்படும் வரையில் தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவரும்.

(2) இந்திய ஆட்சிநிலவரையில் செல்லாற்றலிலுள்ள சட்டம் ஒன்றன் வகையங்களை, இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு இணங்கியிருக்குமாறு செய்வதற்காக, குடியரசுத் தலைவர், ஆணையின்வழி, நீக்கறவு அல்லது திருத்தம் என்னும் முறையில் தேவையென அல்லது உகந்ததெனக் கருதும் தழுவமைவுகளையும் மாற்றமைவுகளையும் அச்சட்டத்தில் செய்யலாம்; மேலும், அந்தச் சட்டம் அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் தேதியிலிருந்து, அவ்வாறு செய்யப்பட்ட தழுவமைவுகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டுச் செல்திறம் உடையதாகும் என்று வகைசெய்யலாம்; அத்தகைய தழுவமைவு அல்லது மாற்றமைவு எதனையும் குறித்து நீதிமன்றம் எதிலும் எதிர்த்து வாதிடுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/217&oldid=1469091" இலிருந்து மீள்விக்கப்பட்டது