பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

(ஔ)சிக்கிம் மாநிலத்தின் நிருவாகம் தொடர்பாக (ஒ) கூறில் சுட்டப்பட்ட சட்டம் எதுவும் பொருந்துறுவதற்கு வழிவகுப்பதற்காகவும் அத்தகைய சட்டம் ஒன்றன் வகையங்களை இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு இணங்கியிருக்குமாறு செய்வதற்காகவும் குடியரசுத்தலைவர், குறித்திட்ட நாளிலிருந்து ஈராண்டுகளுக்குள் ஆணையின்வழி, நீக்கறவு அல்லது திருத்தம் என்னும் முறையில், தேவையென அல்லது உகந்ததெனக் கருதும் தழுவமைவுகளை அல்லது மாற்றமைவுகளைச் செய்யலாம்; மற்றும், அதன்மேல், அத்தகைய சட்டம் ஒவ்வொன்றும், அவ்வாறு செய்யப்பட்ட தழுவமைவுகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, செல்திறம் உடையது ஆகும்; மேலும், அத்தகைய தழுவமைவு அல்லது மாற்றமைவு எதனையும் நீதிமன்றம் எதிலும் எதிர்த்து வாதிடுதல் ஆகாது;
(க) இந்திய அரசாங்கம் அல்லது அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களில் எதுவும் ஒரு தரப்பினராக இருந்து, குறித்திட்ட நாளுக்கு முன்பு செய்துக்கொள்ளப்பட்ட அல்லது எழுதிக்கொடுக்கப்பட்ட சிக்கிம் தொடர்பான உடன்படிக்கை, உடன்பாடு, ஒப்புறுதி அல்லது அவைபோன்ற பிற முறையாவணம் எதனின்றும் எழும் பூசல் அல்லது பிற பொருட்பாடு எதனையும் பொறுத்து உச்ச நீதிமன்றமோ பிற நீதிமன்றம் எதுவுமோ அதிகாரம் உடையது ஆகாது; ஆனால், இந்தக் கூறிலுள்ள எதுவும், 143ஆம் உறுப்பின் வகையங்களைத் திறக்குறைவு செய்வதாகப் பொருள்கொள்ளப்படுதல் ஆகாது;
(ங) குடியரசுத்தலைவர், பொது அறிவிக்கை வாயிலாக, அந்த அறிவிக்கைத் தேதியில் இந்தியாவிலுள்ள மாநிலம் ஒன்றில் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதனையும், தாம் தக்கதெனக் கருதும் வரையறைகளுடன் அல்லது மாற்றமைவுகளுடன் சிக்கிம் மாநிலத்திற்கு அளாவச் செய்யலாம்;
(ச)இந்த உறுப்பின் மேலேகண்ட வகையங்களில் எதனையும் செல்திறப்படுத்துவதில் இடர்ப்பாடு எதுவும் எழுமாயின், குடியரசுத்தலைவர், ஆணையின்வழி, அந்த இடர்ப்பாட்டினை அகற்றுவதற்குத் தேவையெனத் தமக்குத் தோன்றுகிற (பிற உறுப்பு எதனின் தழுவமைவு அல்லது மாற்றமைவு உள்ளடங்கலாக) எதனையும் செய்யலாம்:
வரம்புரையாக: அத்தகைய ஆணை எதுவும், குறித்திட்ட நாளிலிருந்து ஈராண்டுகள் கழிவுற்ற பின்பு பிறப்பிக்கப்படுதல் ஆகாது;
(ஞ) குறித்திட்ட நாளிலிருந்து, 1975ஆம் ஆண்டு அரசமைப்பு (முப்பத்தாறாம் திருத்தம்) சட்டம் குடியரசுத்தலைவரின் ஏற்பிசைவினைப் பெறுகிற தேதியை ஒட்டி முன்பு முடிவடைகிற இடைக்கால அளவின்போது, சிக்கிம் மாநிலத்தில் அல்லது அதில் அடங்கியுள்ள ஆட்சிநிலவரைகளில் அல்லது அது தொடர்பாகச் செய்யப்பட்ட செயல்கள் அனைத்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், 1975ஆம் ஆண்டு அரசமைப்பு (முப்பத்தாறாம் திருத்தம்) சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட இந்த அரசமைப்பின் வகையங்களுடன் அவை இணங்கியிருக்குமளவுக்கு அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட அந்த அரசமைப்பின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாக அனைத்து நோக்கங்களுக்காகவும் கொள்ளப்படுதல் வேண்டும்.

371எ. மிசோரம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்

(அ)

(i) மிசோ மக்களின் சமய அல்லது சமுதாய ஒழுகலாறுகள்,
(ii) மிசோ மக்கள் வழக்காற்றுச் சட்டம் மற்றும் நெறிமுறை,
(iii) மிசோ மக்கள் வழக்காற்றுச் சட்டத்தின்படியான முடிவுகள் உள்ளடங்கிய உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி நிருவாகம்,
(iv) நிலத்தின்மீதான சொத்துரிமை மற்றும் நிலத்தின் உரிமை மாற்றம்

ஆகியவை பொறுத்த நாடாளுமன்றச் சட்டம் எதுவும், மிசோரம் மாநிலத்திற்குப் பொருந்துறுதல் வேண்டும் என்று மிசோரம் மாநிலச் சட்டமன்றப் பேரவை ஒரு தீர்மானத்தின் வாயிலாக முடிவு செய்திருந்தாலன்றி, அவ்வாறு பொருந்துறுதல் ஆகாது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/216&oldid=1469104" இலிருந்து மீள்விக்கப்பட்டது