பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

(இ) (ஆ) கூறின்படி சிக்கிம் மாநிலச் சட்டமன்றப் பேரவை எனக் கொள்ளப்படும்
பேரவையைப் பொறுத்தவரை, 172ஆம் உறுப்பின் (1)ஆம் கூறிலுள்ள ஐந்து ஆண்டுக் காலஅளவைக் குறிக்கும் சுட்டுகைகள், நான்கு ஆண்டுக் காலஅளவைக் குறிக்கும் சுட்டுகைகளாகப் பொருள்கொள்ளப்படும்; மேலும், குறித்திட்ட நாளிலிருந்து மேற்சொன்ன நான்கு ஆண்டுக் காலஅளவு தொடங்குவதாகக் கொள்ளப்படும்;
(ஈ) நாடாளுமன்றம் சட்டத்தினால் பிற ஏற்பாடுகள் செய்யும் வரையில் மக்களவையில் சிக்கிம் மாநிலத்திற்கு ஒரு பதவியிடம் ஒதுக்கப்படும்; மேலும், சிக்கிம் மாநிலம், சிக்கிமிற்கான நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி என வழங்கும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் தொகுதியாக அமையும்;
(உ) மக்களவைக்கான சிக்கிம் மாநிலத்தின் சார்பாற்றுநர், குறித்திட்ட நாளன்று நிலவுறும் சிக்கிம் மாநிலச் சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பெறுவார்;
(ஊ) நாடாளுமன்றம், சிக்கிம் மக்களின் வெவ்வேறு பிரிவினரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் பொருட்டு, அத்தகைய பிரிவினரைச் சார்ந்த வேட்பாளர்களால் நிரப்பப்படும் சிக்கிம் மாநிலச் சட்டமன்றப் பேரவையிலுள்ள பதவியிடங்களின் எண்ணிக்கையை நிருணயிப்பதற்கும், சிக்கிம் மாநிலச் சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் அத்தகைய பிரிவினரைச் சார்ந்த வேட்பாளர்கள் மட்டுமே நிற்கக் கூடிய, பேரவைத் தேர்தல் தொகுதிகளை வரையறை செய்வதற்கும் வகைசெய்யலாம்;
(எ) சிக்கிமின் ஆளுநர், அமைதிகாப்பதற்கும், சிக்கிம் மக்களின் வெவ்வேறு பிரிவினரின் சமுதாய மற்றும் பொருளியல் முன்னேற்றத்தை உறுதிசெய்வதற்காக ஒரு நேரிய ஏற்பாடு செய்வதற்கும் தனிப்பொறுப்பு உடையவர் ஆவார்; மேலும் சிக்கிமின் ஆளுநர் இந்தக் கூறின்படி தம் தனிப்பொறுப்பை நிறைவேற்றுகையில், குடியரசுத்தலைவர், அப்போதைக்கு இடுவதற்குப் பொருத்தமெனக் கருதும் பணிப்புரைகளுக்கு உட்பட்டு, தம் உளத் தேர்வின்படிச் செயலுறுவர்;
(ஏ) குறித்திட்ட நாளை ஒட்டிமுன்பு சிக்கிம் அரசாங்கத்திடம் அல்லது சிக்கிம் அரசாங்கத்திற்காக பிற அதிகாரஅமைப்பு எதனிடமும் அல்லது எவரொருவரிடமும் உற்றமைந்திருந்த (சிக்கிம் மாநிலத்தில் அடங்கியுள்ள ஆட்சிநிலவரைகளுக்குள்ளாயினும் அல்லது வெளியிலாயினும் இருந்த) சொத்து மற்றும் சொத்திருப்புகள் அனைத்தும் குறித்திட்ட நாளிலிருந்து சிக்கிம் மாநில அரசாங்கத்திடம் உற்றமைந்திருக்கும்;
(ஐ) சிக்கிம் மாநிலத்தில் அடங்கியுள்ள ஆட்சிநிலவரைகளில் குறித்திட்ட நாளை ஒட்டிமுன்பு செயற்பணியாற்றிவந்த உயர் நீதிமன்றம், குறித்திட்ட நாளன்றும் அது முதற்கொண்டும் சிக்கிம் மாநிலத்திற்கான உயர் நீதிமன்றமாகக் கொள்ளப்படும்;
(ஒ) சிக்கிம் மாநிலத்தின் ஆட்சிநிலவரை எங்கணும் உள்ள உரிமையியல், குற்றவியல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரவரம்புடைய நீதிமன்றங்கள் அனைத்தும், அதிகாரஅமைப்புகள் அனைத்தும், நீதித் துறை, ஆட்சித் துறை மற்றும் அலுவலகப் பணித் துறை அலுவலர்கள் அனைவரும், குறித்திட்ட நாளன்றும் அது முதற்கொண்டும், இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, அவரவர் தம் பதவிப்பணிகளைத் தொடர்ந்து புரிந்து வருதல் வேண்டும்;
(ஒ) சிக்கிம் மாநிலத்தில் அடங்கியுள்ள ஆட்சிநிலவரைகளில் அல்லது அவற்றின் பகுதி எதிலும் குறித்திட்ட நாளை ஒட்டிமுன்பு செல்லாற்றலிலிருந்த சட்டங்கள் அனைத்தும், தகுதிறம் கொண்ட சட்டமன்றத்தால் அல்லது தகுதிறம்கொண்ட பிற அதிகாரஅமைப்பால் திருத்தமோ நீக்கறவோ செய்யப்படும் வரையில், தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வரும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/215&oldid=1469105" இலிருந்து மீள்விக்கப்பட்டது