பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

(9) நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது பிற அதிகாரஅமைப்பு ஒன்றன் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதுவும் இருந்தபோதிலும்

(அ).

(i) 1956 நவம்பர் 1 ஆம் நாளுக்கு முன்பு, அந்த நாளுக்கு முன்னர் இருந்த ஐதராபாத் குறுநில அரசாங்கத்தின் அல்லது அதிலிருந்த உள்ளாட்சி அதிகாரஅமைப்பு ஒன்றன் கீழிருந்த பணியடை எதற்கும்,
(ii) 1973ஆம் ஆண்டு அரசமைப்பு (முப்பத்திரண்டாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்க்நிலைக்கு முன்பு ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கத்தின் அல்லது அதிலிருந்த உள்ளாட்சி அல்லது பிற அதிகாரஅமைப்பு ஒன்றன் கீழிருந்த பணியடை எதற்கும் செய்யப்பட்ட எவரொருவரின் அமர்த்தம், பணியிடம் குறித்தல், பதவியுயர்வு அல்லது மாற்றம் எதுவும்,

(ஆ). உட்கூறில் சுட்டப்பட்டுள்ள எவராலும் அல்லது அவர் முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்லது செய்யப்பட்ட செயல் எதுவும்

அத்தகைய அமர்த்தம், பணியிடம் குறித்தல், பதவியுயர்வு அல்லது மாற்றம் பொறுத்து ஐதராபாத் குறுநிலத்தில் அல்லது, நேர்வுக்கேற்ப, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பகுதி எதிலும் உறைவிடம் குறித்த வேண்டுறுத்தம் எதற்கும் வகைசெய்து அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதற்கும் இணங்கியவாறு அத்தகையவரின் அமர்த்தம், பணியிடம் குறித்தல், பதவியுயர்வு அல்லது மாற்றம் செய்யப்படவில்லை என்னும் காரணத்தின்பேரில் மட்டுமே சட்ட முரணானது அல்லது இல்லாநிலையது அல்லது எப்போதேனும் சட்டமுரணானதாகிவிட்டது அல்லது இல்லாநிலையதாகிவிட்டது என்று கொள்ளப்படுதல் ஆகாது.

(10) இந்த அரசமைப்பின் பிற வகையம் எதிலும் அல்லது அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் எது எவ்வாறிருப்பினும், இந்த உறுப்பின் வகையங்களும் இந்த உறுப்பின்படி குடியரசுத்தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றன் வகையங்களும் செல்திறம் உடையன ஆகும்.

371உ. ஆந்திரப் பிரதேசத்தில் மையப் பல்கலைக்கழகத்தை நிறுவுதல் :

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக நாடாளுமன்றம் சட்டத்தின்வழி வகை செய்யலாம்.

371ஊ. சிக்கிம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையங்கள் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்—

(அ) சிக்கிம் மாநிலச் சட்டமன்றப் பேரவையானது முப்பதுக்கும் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்;
(ஆ) 1975ஆம் ஆண்டு அரசமைப்பு (முப்பத்தாறாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து (குறித்திட்ட நாள் என இதன் பின்பு இந்த உறுப்பில் சுட்டப்படுவது)—

(i) 1974 ஏப்ரலில் சிக்கிமில் நடைபெற்ற தேர்தலின் விளைவாக அத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பெற்ற பதவியிலிருக்கும் உறுப்பினர்கள் என (இதன் பின்பு சுட்டப்பெறும்) முப்பத்திரண்டு உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்ட சிக்கிமிற்கான சட்டமன்றப் பேரவையானது, இந்த அரசமைப்பின்படி உரியவாறு அமைக்கப்பட்ட சிக்கிம் மாநிலச் சட்டமன்றப் பேரவையாகக் கொள்ளப்படும்;
(ii) பதவியிலிருக்கும் உறுப்பினர்கள், இந்த அரசமைப்பின்படி உரியவாறு தேர்ந்தெடுக்கப்பெற்ற சிக்கிம் மாநிலச் சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களாகக் கொள்ளப்பெறுவர்;
(iii) மேற்சொன்ன சிக்கிம் மாநிலச் சட்டமன்றப் பேரவையானது, இந்த அரசமைப்பின்படி ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையின் அதிகாரங்களைச் செலுத்திவருவதோடு, பதவிப்பணிகளையும் புரிந்துவரும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/214&oldid=1470274" இலிருந்து மீள்விக்கப்பட்டது