பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187


(4). (3)ஆம் கூறின்படி பிறப்பிக்கப்படும் ஒர் ஆணை-

(அ) அந்த நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தின் அதிகாரவரம்பினுள் அடங்கிய
பொருட்பாடுகளில், அந்த ஆணையில் குடியரசுத்தலைவரால் குறித்துரைக்கப்படும் பொருட்பாடு எதன் தொடர்பாகவும் உள்ள குறைகளைத் தீர்ப்பதற்கான உரையீடுகளைப் பெறுவதற்கும், அவற்றின்மீது அத்தீர்ப்பாயம் தான் பொருத்தமெனக் கருதும் ஆணைகளைப் பிறப்பிப்பதற்கும் அதிகாரமளிக்கலாம்;
(ஆ) நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தின் அதிகாரங்கள், அதிகார அடைவுகள், நெறிமுறை ஆகியவை பொறுத்துக் குடியரசுத்தலைவர் தேவையெனக் கருதும் (தன்னை அவமதித்ததற்காகத் தண்டனை விதிப்பதற்கு அந்த நிருவாகப்பணித் தீர்ப்பாயத்திற்கு உள்ள அதிகாரங்கள் பொறுத்த வகையங்கள் உள்ளடங்கலான வகையங்களைக் கொண்டிருக்கலாம்;
(இ) அந்த நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தின் அதிகாரவரம்பினுள் அடங்கிய பொருட்பாடுகள் தொடர்பானவையாகவும், அந்த ஆணையின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு (உச்ச நீதிமன்றம் அல்லாத பிற) நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் அல்லது பிற அதிகாரஅமைப்பு எதன் முன்பும் முடிவுறாநிலையிலுமுள்ள நடவடிக்கைகளில் அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் நடவடிக்கைகளின் வகைகளை அத்தீர்ப்பாயத்திற்கு மாற்றுவதற்கு வகைசெய்யலாம்;
(ஈ) குடியரசுத்தலைவர் தேவையெனக் கருதும் (கட்டணங்கள், காலவரம்பு, சான்று ஆகியவைபற்றியோ அல்லது விதிவிலக்குகள் அல்லது மாற்றமைவுகள் எவற்றுக்கும் உட்பட்டு, அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதனையும் பொருந்துறச் செய்வதற்கோ உள்ள வகையங்கள் உள்ளடங்கலாக) துணையுறு, சார்வுறு மற்றும் விளைவுறு வகையங்களைக் கொண்டிருக்கலாம்.

(5) நிருவாகப்பணித் தீர்ப்பாயம் வழக்கு எதனையும் இறுதியாகத் தீர்வு செய்து பிறப்பிக்கும் ஆணையானது, மாநில அரசாங்கம் அதனை உறுதிசெய்வதன்மீது அல்லது அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதம் கழிவுறுவதன்மீது இதில் எது முந்தியதோ அது முதற்கொண்டு, செல்திறம் பெறும்:

வரம்புரையாக: மாநில அரசாங்கம் பிறப்பிக்கும் எழுத்துவடிவிலான தனியுறு ஆணையின்வழி, அதில் குறித்துரைக்கப்படும் காரணங்களுக்காக, நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தின் ஆணை எதனையும், அது செல்திறம் பெறுவதற்கு முன்னரே மாற்றமைவோ அழித்தறவோ செய்யலாம்; அத்தகைய ஒரு நேர்வில், நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தின் ஆணையானது, அத்தகைய மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே செல்திறம் பெறும் அல்லது செல்திறம் இல்லாது போகும்.

(6). (5)ஆம் கூறுக்கான வரம்புரையின்படி மாநில அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்படும் தனியுறு ஆணை ஒவ்வொன்றும், அது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடுமான விரைவில், அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையின் ஈரவைகளின் முன்பும் வைக்கப்படுதல் வேண்டும்.

(7) அந்த மாநிலத்திற்கான உயர் நீதிமன்றம், அந்த நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தைக் கண்காணிப்பதற்கான அதிகாரங்கள் உடையது ஆகாது; மேலும், (உச்ச நீதிமன்றம் அல்லாத பிற நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் எதுவும், அந்த நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தின் அல்லது அதன் தொடர்பான அதிகாரவரம்புக்கு, அதிகாரத்திற்கு அல்லது அதிகாரஅடைவுக்கு உட்பட்ட பொருட்பாடு எதனையும் பொறுத்து அதிகாரவரம்பு, அதிகாரம் அல்லது அதிகார அடைவு எதனையும் செலுத்துதல் ஆகாது.

(8) குடியரசுத்தலைவர், அந்த நிருவாகப்பணித் தீர்ப்பாயம் தொடர்ந்து இருந்துவரத் தேவையில்லை எதை தெளிவுறக்காண்பாராயின், ஆணையின்வழி, அந்நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தை ஒழித்துவிடலாம்; மேலும், அவ்வாறு ஒழிப்பதை ஒட்டிமுன்பு அந்தத் தீர்ப்பாயத்தின்முன்பு முடிவுறாநிலையிலுள்ள வழக்குகளை மாற்றுவதற்கும் தீர்வு செய்வதற்கும் அத்தகைய ஆணையில் தாம் தக்கதெனக் கருதும் வகையங்களைச் செய்யலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/213&oldid=1469086" இலிருந்து மீள்விக்கப்பட்டது