பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195


378. அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் பற்றிய வகையங்கள்:

(1) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு இந்தியத் தன்னாட்சியத்திற்கான அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி வகித்த உறுப்பினர்கள், பிறவாறு அவர்கள் தேர்ந்து ஏற்றிருந்தாலன்றி, அத்தகைய தொடக்கநிலையில் ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக ஆவர்; மேலும், 316 ஆம் உறுப்பின் (1), (2) ஆகிய கூறுகளில் எது எவ்வாறிருப்பினும் அந்த உறுப்பின் (2)ஆம் கூறின் வரம்புரைக்கு உட்பட்டு, அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு அத்தகைய உறுப்பினர்களுக்குப் பொருந்துறுவனவாயிருந்த விதிகளின்படி தீர்மானிக்கப்பட்ட அவர்களுடைய பதவிக்காலம் கழிவுறும் வரையில் அவர்கள் தொடர்ந்து பதவி வகித்து வருவர்.

(2) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, ஒரு மாகாணத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி வகித்த உறுப்பினர்கள் அல்லது மாகாணங்களின் தொகுதி ஒன்றின் தேவைகளை நிறைவுறுத்துவதற்காகப் பணிபுரிகிற அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள், பிறவாறு அவர்கள் தேர்ந்து ஏற்றிருந்தாலன்றி, அந்த மாகாணத்திற்கு நேரிணையான மாநிலத்திற்கான அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாகாணங்களுக்கு நேரிணையான மாநிலங்களின் தேவைகளை நிறைவுறுத்துவதற்காகப் பணிபுரிகிற கூட்டு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக ஆவர்; மேலும், 316ஆம் உறுப்பின் (1), (2) ஆகிய கூறுகளில் எது எவ்வாறிருப்பினும் அந்த உறுப்பின் (2)ஆம் கூறின் வரம்புரைக்கு உட்பட்டு அத்தகைய தொடக்கநிலையை ஒட்டி முன்பு அந்த உறுப்பினர்களுக்குப் பொருந்துறுவனயிருந்த விதிகளின்படி தீர்மானிக்கப்பட்ட அவர்களுடைய பதவிக்காலம் கழிவுறும் வரையில் அவர்கள் தொடர்ந்து பதவி வகித்து வருவர்.

378அ. ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றப் பேரவையின் காலஅளவு பற்றிய தனியுறு வகையம் :

172 ஆம் உறுப்பில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 1956ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 28, 29ஆகிய பிரிவுகளின் வகையங்களின்படி அமைக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்றப் பேரவை, முன்னதாகவே கலைக்கப்பட்டாலன்றி, மேற்சொன்ன 29ஆம் உறுப்பில் சுட்டப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டு காலஅளவிற்குத் தொடர்ந்திருந்துவரும்; ஆனால், அதற்கு மேலும் இருத்தலாகாது; மேலும், மேற்சொன்ன காலஅளவு கழிவுறுங்கால் அந்தச் சட்டமன்றப் பேரவை கலைக்கப்பட்டதாக ஆகிவிடும்.

[1][379-391. ★★]

392. இடர்ப்பாடுகளை அகற்றுவதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம் :

(1) இடர்ப்பாடுகள் எவற்றையும், குறிப்பாக, 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் வகையங்களிலிருந்து இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு மாறும் இடைக்காலம் தொடர்பானவற்றை அகற்றுவதற்காக, குடியரசுத்தலைவர், ஆணையின்வழி, அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் காலஅளவின்போது மாற்றமைவு, சேர்க்கை அல்லது விடுகை என்னும் முறையில் தாம் தேவையென அல்லது உகந்ததெனக் கருதும் தழுவமைவுகளுக்கு உட்பட்டு இந்த அரசமைப்பு செல்திறம் உடையது ஆகும் என்று பணிக்கலாம்:

வரம்புரையாக: அத்தகைய ஆணை எதுவும் V ஆம் பகுதியின் II ஆம் அத்தியாயத்தின்படி உரியவாறு அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திற்குப் பின்பு பிறப்பிக்கப்படுதல் ஆகாது.

(2). (1) ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் நாடாளுமன்றத்தின்முன் வைக்கப்படுதல் வேண்டும்.

(3) இந்த உறுப்பினாலும், 324 ஆம் உறுப்பினாலும், 367ஆம் உறுப்பின் (3)ஆம் கூறினாலும், 391ஆம் உறுப்பினாலும் குடியரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு இந்திய தன்னாட்சியத்தின் தலைமை ஆளுநரால் செலுத்தத்தகுவன ஆகும்.


  1. 1956ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 29 ஆம் பிரிவினாலும் இணைப்புப்பட்டியலினாலும் நீக்கறவு செய்யப்பட்டன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/221&oldid=1467250" இலிருந்து மீள்விக்கப்பட்டது