பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


பகுதி XXII
குறுந்தலைப்பு, தொடக்கம், அதிகார உறுதிபெற்ற இந்திமொழி வாசகம் மற்றும் நீக்கறவுகள்

393. குறுந்தலைப்பு :

இந்த அரசமைப்பு, இந்திய அரசமைப்பு என்று வழங்கப்பெறும்.

394. தொடக்கம் :

இந்த உறுப்பும், 5, 6, 7, 8, 9,60, 324, 366, 367, 379,380,388,391,392, 393 ஆகிய உறுப்புகளும் உடனடியாகச் செல்லாற்றல் பெறும்; இந்த அரசமைப்பின் தொடக்கம் என இந்த அரசமைப்பில் சுட்டப்படும் நாளான 1950 ஜனவரி இருபத்தாறாம் நாளன்று இந்த அரசமைப்பின் எஞ்சிய வகையங்கள் செல்லாற்றல் பெறும்.

394அ. அதிகார உறுதிபெற்ற இந்திமொழி வாசகம் :

(1) குடியரசுத்தலைவர்,

(அ) அரசமைப்புப் பேரவைஉறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள, இந்த அரசமைப்பின் இந்தி மொழிபெயர்ப்பினை, இந்தி மொழியிலுள்ள மைய அரசுச் சட்டங்களின் அதிகாரஉறுதிபெற்ற வாசகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி, நடையமைவு, சொற்றொடர் அமைவு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு செய்வதற்குத் தேவையாகும் மாற்றமைவுகளையும், அதனை வெளியிடுவதற்கு முன்பு செய்யப்படும் இந்த அரசமைப்பின் அனைத்துத் திருத்தங்களையும் அதில் ஒருங்கிணைத்து அந்த மொழிபெயர்ப்பினையும்,

(ஆ) ஆங்கிலமொழியில் இந்த அரசமைப்பிற்குச் செய்யப்பட்ட திருத்தம் ஒவ்வொன்றின் இந்தி மொழிபெயர்ப்பினையும்

தம்முடைய அதிகாரத்தின்படி வெளியிடுமாறு செய்வார்.

(2). (1) ஆம் கூறின்படி வெளியிடப்படும் இந்த அரசமைப்பின் மற்றும் அதன் திருத்தம் ஒவ்வொன்றின் மொழிபெயர்ப்பும், அதன் மூலப்படிவத்தில் கண்ட அதே பொருளை உடையதாகப் பொருள்கொள்ளப்படும்; மேலும் அத்தகைய மொழிபெயர்ப்பின் பகுதி எதனையும் அவ்வாறு பொருள்கொள்ளுவதில் இடர்பாடு எதுவும் எழுமாயின், குடியரசுத்தலைவர், அதனை ஏற்ற வகையில் திருத்தியமைக்குமாறு செய்வார்.

(3) இந்த உறுப்பின்படி வெளியிடப்படும் இந்த அரசமைப்பின் மற்றும் அதன் திருத்தம் ஒவ்வொன்றின் மொழிபெயர்ப்பும், அனைத்து நோக்கங்களுக்காகவும், அதிகாரஉறுதிபெற்ற அதன் இந்தி மொழி வாசகமாக கொள்ளப்படும்.

395. நீக்கறவுகள் :

1947ஆம் ஆண்டு இந்திய விடுதலைச் சட்டமும், 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டமும், இவற்றுள் பிந்திய சட்டத்தைத் திருத்தும் அல்லது துணைவுறு சட்டங்கள் அனைத்துடனும் சேர்த்து, ஆனால் 1949ஆம் ஆண்டு அரசப் பேராயத்தின் அதிகாரவரம்பு ஒழிப்புச் சட்டம் நீங்கலாக, ஈங்கிதனால் நீக்குறவுசெய்யப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/222&oldid=1467251" இலிருந்து மீள்விக்கப்பட்டது