பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231


வரம்புரையாக: இந்தப் பத்தியின் (அ) கூறின்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கும்போது, ஆளுநர், புதியதொரு பொதுத் தேர்தல் வாயிலாக அந்த மன்றத்தை மறுஅமைப்பு செய்யும் வரையில், தொடர்புள்ள வரையிடத்தின் நிருவாகம் பொறுத்து, இந்தப் பத்தியின் (ஆ) கூறில் சுட்டப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம்:

மேலும் வரம்புரையாக: மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு தம் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு, மாவட்ட மன்றத்திற்கு அல்லது, நேர்வுக்கேற்ப, வட்டார மன்றத்திற்கு ஒரு வாய்ப்பளிக்காமல், இந்தப் பத்தியின் (ஆ) கூறின்படி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படுதல் ஆகாது.

(2) ஒரு தன்னாட்சி மாவட்டத்தின் அல்லது வட்டாரத்தின் நிருவாகத்தை இந்த இணைப்புப்பட்டியலின் வகையங்களுக்கு இணங்க நடத்த இயலாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று ஆளுநர், எச்சமயத்திலேனும், தெளிவுறக்காண்பாராயின், அவர், பொது அறிவிக்கை வாயிலாக, அந்த மாவட்ட மன்றத்திடம் அல்லது, நேர்வுக்கேற்ப, வட்டார மன்றத்திடம் உற்றமைந்துள்ள செயற்பணிகள் அல்லது அதனால் செலுத்தப்படத்தக்க அதிகாரங்கள் அனைத்தையுமோ அவற்றில் எதனையுமோ ஆறு மாதத்திற்கு மேற்படாத ஒரு காலஅளவுக்குத் தாமே மேற்கொள்ளவோ இதற்கென அவர் குறித்துரைக்கும் நபரால் அல்லது அதிகாரஅமைப்பால் அத்தகைய செயற்பணிகள் அல்லது அதிகாரங்கள் செலுத்தத்தக்கவை என விளம்பவோ செய்யலாம்:

வரம்புரையாக: ஆளுநர், தாம் பிறப்பித்த முதல் ஆணையின் செயற்பாட்டை மேலும் ஓர் ஆணையின் அல்லது ஆணைகளின் வழி, ஒவ்வொரு நிகழ்விலும் ஆறு மாதங்களுக்கு மேற்படாத ஒரு காலஅளவுக்கு நீட்டிக்கலாம்.

(3) இந்தப் பத்தியின் (2) ஆம் உள்பத்தியின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும், அதற்கான காரணங்களுடன், மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்: மேலும், அந்த ஆணை இடப்பட்ட பின்பு மாநிலச் சட்டமன்றம் முதலில் அமருகிற தேதியிலிருந்து முப்பது நாட்கள் கழிவுறுவதன்மேல், அந்தக் காலஅளவு கழிவுறுவதற்கு முன்பே அதற்கு மாநிலச் சட்டமன்றத்தால் ஒப்பேற்பளிக்கப்பட்டிருந்தாலன்றி, அந்த ஆணையின் செயற்பாடு அற்றுப்போய்விடும்.

17. தன்னாட்சி மாவட்டங்களில் தேர்தல் தொகுதிகளை உருவாக்குகையில் அந்த மாவட்டங்களிலிருந்து வரையிடங்களை நீக்கிவிடுதல் :

அசாம் அல்லது மேகாலயா அல்லது திரிபுரா அல்லது மிசோரம் சட்டமன்றப் பேரவைக்குத் தேர்தல் நடத்துவது பொறுத்து, ஆளுநர், ஆணையின்வழி, நேர்வுக்கேற்ப, அசாம் அல்லது மேகாலயா அல்லது திரிபுரா அல்லது மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்குள் அமைந்த வரையிடம் எதுவும், அத்தகைய மாவட்டம் ஒன்றுக்குப் பேரவையில் ஒதுக்கப்பட்ட ஒரு பதவியிடத்தை அல்லது பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தொகுதி எதன் பகுதியாகவும் அமைதல் ஆகாது என்றும், ஆனால் அந்த மாவட்டத்திற்கென ஒதுக்கப்படாதது என அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் பேரவைப் பதவியிடத்தை அல்லது பதவியிடங்களை நிரப்புவதற்கான ஒரு தேர்தல் தொகுதியின் பகுதியாக அமைதல் வேண்டும் என்றும் விளம்பலாம்.

[1][வரம்புரையாக: இந்தப் பத்தியிலுள்ள எதுவும், போடாலாந்து ஆட்சிநிலவரையிடப் பகுதிகள் மாவட்டத்திற்குப் பொருந்தாது.]


  1. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பின் ஆறாம் இணைப்புப்பட்டியலுக்கான திருத்தம்) சட்டத்தினால் (44/2003) புகுத்தப்பட்டது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/257&oldid=1466513" இலிருந்து மீள்விக்கப்பட்டது