பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

42. மாநிலங்களிடையிலான வணிகமும் வாணிபமும்.
43. கூட்டுறவுச் சங்கங்கள் நீங்கலாக, வங்கித்தொழில், காப்பீட்டு மற்றும் நிதியியல் கூட்டுருமங்கள் உள்ளடங்கலாக, வணிகக் கூட்டுருமங்களைக் கூட்டுருமமாகப் பதிவுசெய்தல், ஒழுங்குறுத்துதல் மற்றும் முடிவுறுத்துதல்.
44. பல்கலைக் கழகங்கள் நீங்கலாக, ஒரு மாநிலத்திற்கு என்று மட்டுமே இல்லாத குறிக்கோள்களைக்கொண்ட கூட்டுருமங்கள் -அவை வணிகம் செய்வனவாயினும் அல்லனவாயினும்; அவற்றைக் கூட்டுருமமாகப் பதிவுசெய்தல், ஒழுங்குறுத்துதல் மற்றும் முடிவுறுத்துதல்.
45. வங்கித்தொழில்.
46. மாற்றுச்சீட்டுகள், காசோலைகள், கடனுறுதிச் சீட்டுகள் மற்றும் இவையன்ன பிற முறையாவணங்கள்.
47. காப்பீடு.
48. பங்குமாற்றகங்கள் மற்றும் எதிர்கோள் வாணிபம்.
49. புதுப்புனைவு உரிமைகள், புதுக்கண்டுபிடிப்புகள் மற்றும் வடிவமைப்புகள்; பதிப்புரிமை; வணிகக் குறிகள் மற்றும் வணிகப்பண்டகக் குறிகள்.
50. எடை, அளவு இவற்றின் தரநிலைகளை நிருமித்தல்.
51. இந்தியாவிற்கு வெளியே ஏற்றுமதி செய்யப்படவிருக்கும் அல்லது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொன்றிற்குக் கொண்டு செல்லப்படவிருக்கும் சரக்குகளுக்கான நயத் தரநிலைகளை நிருமித்தல்.
52. விசைத்தொழில்கள், அதாவது, ஒன்றியத்தின் கட்டாள்கையிலிருப்பது பொதுநலனுக்கு உகந்ததென நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்புபவை.
53. எண்ணெய் வயல்களையும் கனிம எண்ணெய் வளஆதாரங்களையும் ஒழுங்குறுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்; கல்எண்ணெய்யும், கல்எண்ணெய்யின் ஆகுபொருள்களும்; தீப்பற்றும் அபாயம் கொண்டவை என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்பும் பிற நீர்மங்களும் பொருள்களும்.
54. சுரங்கங்களை ஒழுங்குறுத்துவதும் கனிமத்தை மேம்படுத்துவதும் ஒன்றியத்தின் கட்டாள்கையில் இருப்பது பொதுநலனுக்கு உகந்ததென நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்புகின்ற அளவுக்கு, அவற்றை ஒழுங்குறுத்துதலும் மேம்படுத்துதலும்.
55. சுரங்கங்களிலும் எண்ணெய் வயல்களிலும் தொழிலாளர் நிலையையும் பாதுகாப்பையும் ஒழுங்குறுத்துதல்.
56. மாநிலங்களிடையேயான ஆறுகளையும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் ஒழுங்குறுத்துவதும் மேம்படுத்துவதும் ஒன்றியத்தின் கட்டாள்கையில் இருப்பது பொதுநலனுக்கு உகந்ததென நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்புகின்ற அளவுக்கு, அவற்றை ஒழுங்குறுத்துதலும் மேம்படுத்துதலும்.
57. ஆட்சிநிலவரை சார்ந்த கடலுக்கு அப்பால் மீன்பிடித்தலும் மீனளங்களும்.
58. ஒன்றியத்து முகமைகளால் உப்பு விளைவிக்கப்படுதல், வழங்கப்படுதல் மற்றும் பகிர்ந்தளிக்கப்படுதல்; பிற முகமைகளால் உப்பு விளைவிக்கப்படுதல், வழங்கப்படுதல், பகிர்ந்தளிக்கப்படுதல் ஆகியவற்றை ஒழுங்குறுத்துதலும் கட்டாள்கை செய்தலும்.
59. அபினைப் பயிர்செய்தல், உற்பத்திசெய்தல் மற்றும் ஏற்றுமதிக்காக விற்பனைசெய்தல்.
60. திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டுவதற்கு ஒப்பிசைவு அளித்தல்.
61. ஒன்றியத்தின்கீழ் பணிபுரிவோர் தொடர்பான தொழில்துறைப் பூசல்கள்.
62. இந்த அரசமைப்பின் தொடக்கநிலையின்போது, தேசிய நூலகம், இந்திய அருங்காட்சியகம், பேரரசுப் போர் அருங்காட்சியகம், விக்டோரியா நினைவகம், இந்தியப்போர் நினைவகம் என வழங்கப்பட்ட நிறுவனங்கள்; மற்றும் இவைபோன்று, இந்திய அரசாங்கத்தினால் முழுவதுமாகவோ பகுதியாகவோ நிதி உதவியளிக்கப்பட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்பும் பிற நிறுவனம் எதுவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/266&oldid=1466536" இலிருந்து மீள்விக்கப்பட்டது