பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


(2) குடிமகன் எவரையும், சமயம், இனம், சாதி, பாலினம், குடிவழி, பிறப்பிடம், உறைவிடம் இவற்றை மட்டுமே அல்லது இவற்றுள் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக்கொண்டு, அரசின் கீழுள்ள வேலையமர்த்தம் அல்லது பதவி எதனையும் பொறுத்துத் தகுமை அற்றவராகவோ வேற்றுமை காட்டுதலுக்கு உற்றவராகவோ ஆக்குதல் ஆகாது.

(3) இந்த உறுப்பிலுள்ள எதுவும், ஒரு மாநில அல்லது ஒன்றியத்திலுள்ள ஆட்சிநிலவரை அரசாங்கத்தின் அல்லது அதிலுள்ள உள்ளாட்சி அல்லது பிறவகை அதிகாரஅமைப்பு எதன்கீழும், ஒரு வகையினை அல்லது வகைகளைச் சார்ந்த வேலையமர்த்தம் அல்லது பதவியமர்த்தம் பொறுத்து, அத்தகைய வேலையமர்த்தத்திற்கு அல்லது பதவியமர்த்தத்திற்கு முன்னரே அந்த மாநிலத்திற்குள்ளோ ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்குள்ளோ உறைவிடம் இருக்கவேண்டிய தேவைப்பாட்டினை வகுத்துரைக்கும் சட்டம் எதனையும் நாடாளுமன்றம் இயற்றுவதற்குத் தடையூறு ஆவதில்லை.

(4) இந்த உறுப்பிலுள்ள எதுவும், அரசின் கீழுள்ள பணியங்களில் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என அரசு கருதும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் எதனையும் சேர்ந்த குடிமக்களின் நலச்சார்பாகப் பதவியமர்த்தங்களை அல்லது பணியடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.

[1][(4அ) இந்த உறுப்பிலுள்ள எதுவும், அரசின் கீழுள்ள பணியங்களில் போதிய அளவு சார்பாற்றம் செய்யப்படாது, அரசின் கருத்தில் பட்டியலில் கண்ட சாதியினரின் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நலச்சார்பாக உள்ள அரசின் கீழுள்ள பணியடைகளின் வகை எதற்கும் அல்லது வகைகள் எவற்றிற்கும், [2][முந்துறு விளைவுடையதாய் பணி முதுநிலையின் அடிப்படையில் பணிஉயர்வு குறித்த பொருட்பாடுகளில்] ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.]

[3][(4ஆ) இந்த உறுப்பிலுள்ள எதுவும், (4)ஆம் கூறின் அல்லது (4அ) கூறின்படி செய்யப்பட்ட ஒதுக்கீட்டிற்கான ஏற்பாடு எதற்கும் இணங்க, அந்த ஆண்டில் நிரப்பப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த ஆண்டிற்கான நிரப்பப்படாத காலியிடங்கள் எவற்றையும் பின்வரும் ஆண்டு எதிலும் அல்லது ஆண்டுகள் எவற்றிலும் நிரப்புவதற்கான தனிப்பட்ட வகையைச் சார்ந்த காலியிடங்களாக அரசு கருதுவதற்கு தடையூறு ஆவதில்லை மற்றும் அத்தகைய காலியிடங்கள், அந்த ஆண்டிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கையில், ஐம்பது விழுக்காடு ஒதுக்கீடு என்ற உச்சவரம்பை நிர்ணயிப்பதற்காக அவை நிரப்பப்படவேண்டிய ஆண்டிலுள்ள காலியிடங்களுடன் சேர்ந்த காலியிடங்களாகக் கருதப்படுதல் ஆகாது].

(5) இந்த உறுப்பிலுள்ள எதுவும், சமயம் அல்லது சமயக்கிளை சார்ந்த நிறுவனம் ஒன்றன் அலுவற்பாடுகள் தொடர்பாக ஒரு பதவி வகிப்பவரோ அல்லது ஆட்சிக்குழும உறுப்பினர் எவருமோ, ஒரு குறிப்பிட்ட சமயத்தை ஓம்புகிறவராகவோ ஒரு குறிப்பிட்ட சமயக்கிளையைச் சேர்ந்தவராகவோ இருத்தல்வேண்டும் என வகைசெய்கிற சட்டம் எதுவும் செயற்படுவதைப் பாதிப்பதில்லை.

17. தீண்டாமை ஒழிப்பு :

"தீண்டாமை" ஒழிக்கப்படுகிறது; எவ்வகையிலும் தீண்டாமையைக் கடைபிடிப்பது கடிந்து தடை செய்யப்படுகிறது. "தீண்டாமை" காரணமாக எழும் தகவுக்கேடு எதனையும் செயலுறுத்துவது சட்டப்படி தண்டனையுறு குற்றச்செயல் ஆகும்.

18.விருதுப்பட்டங்கள் ஒழிப்பு:

(1) படைத் துறையின் அல்லது கல்வித் துறையின் சிறப்புச்சீர்மை அல்லாத பிற விருதுப்பட்டம் எதனையும் அரசு வழங்குதல் ஆகாது.

(2) இந்தியாவின் குடிமகன் எவரும், அயல்நாட்டு அரசு எதனிடமிருந்தும் விருதுப்பட்டம் எதனையும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகாது.


  1. 1995ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து ஏழாம் திருத்தம்)ச் சட்டடத்தினால் மாற்றாக அமைக்கப்பட்டது.
  2. 2001ஆம் ஆண்டு அரசமைப்புச் (எண்பத்தைந்தாம் திருத்தம்) சட்டத்தினால் மாற்றாக அமைக்கப்பட்டது.
  3. 2000ஆம் ஆண்டு அரசமைப்புச் (எண்பத்து ஒன்றாம் திருத்தம்) சட்டத்தினால் புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/31&oldid=1465434" இலிருந்து மீள்விக்கப்பட்டது