பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


(3) இந்தியாவின் குடிமகன் அல்லாத எவரும், அரசின்கீழ் ஊதியத்திற்குரிய அல்லது நம்பிக்கைக்குரிய பதவி ஒன்றை வகிக்குங்கால், குடியரசுத்தலைவரின் இசைவின்றி, அயல்நாட்டு அரசு எதனிடமிருந்தும் விருதுப்பட்டம் எதனையும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகாது.

(4) அரசின்கீழ் ஊதியத்திற்குரிய அல்லது நம்பிக்கைக்குரிய பதவி ஒன்றை வகிக்கின்ற எவரும், குடியரசுத்தலைவரின் இசைவின்றி, அயல்நாட்டு அரசு எதனிடமிருந்தும் பரிசு, பதவியூதியம் எதனையும் அல்லது அவ்வரசு எதன்கீழும் எவ்வகைப் பதவியையும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகாது.

சுதந்திரத்திற்கான உரிமை

19. பேச்சுச் சுதந்திரம் முதலியன பற்றிய குறித்தசில உரிமைகளுக்குப் பாதுகாப்பு:

(1) குடிமக்கள் அனைவரும்—

(அ)பேச்சு, சிந்தனை வெளிப்படுத்துகை ஆகியவற்றிற்கான சுதந்திரத்திற்கும்,
(ஆ)அமைதியாக, ஆயுதங்களின்றிக் கூடுவதற்கும்,
(இ)சங்கங்கள் அல்லது கூட்டமைவுகள் அமைப்பதற்கும்,
(ஈ)இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் தடையின்றிச் சென்று வருவதற்கும்,
(உ)இந்திய ஆட்சிநிலவரையின் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும் நிலையாகக் குடியமர்வதற்கும்,
(ஊ)(விட்டுவிடப்பட்டது)
(எ)விழைதொழில் எதனையும் புரிந்து வருவதற்கும் அல்லது வாழ்தொழில், வணிகத்தொழில் அல்லது ஆகுதொழில் எதனையும் நடத்தி வருவதற்கும்

உரிமை உடையோர் ஆவர்.

(2) (1)ஆம் கூறின் (அ) உட்கூறிலுள்ள எதுவும், அந்த உட்கூறினால் வழங்கப்படும் உரிமையினைத் துய்த்தல் பொறுத்து, இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் பாதுகாப்பு, அயல்நாட்டு அரசுகளுடன் நட்புறவு, பொது ஒழுங்கமைதி, நயப்பண்பு, ஒழுக்கநெறி இவற்றின் நலங்கருதியோ, நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது ஒரு குற்றச்செயலுக்கான தூண்டுதல் தொடர்பாகவோ தகுமான வரைத்தடைகளை விதிக்கின்ற அளவிற்கு, நிலவுறும் சட்டம் ஒன்றன் செயற்பாட்டினைப் பாதிப்பதுமில்லை; அத்தகைய சட்டம் எதனையும் அரசு இயற்றுவதற்குத் தடையூறு ஆவதுமில்லை.

(3) மேற்சொன்ன கூறின் (ஆ) உட்கூறிலுள்ள எதுவும், அந்த உட்கூறினால் வழங்கப்படும் உரிமையினைத் துய்த்தல் பொறுத்து, இந்திய நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது ஒழுங்கமைதி இவற்றின் நலங்கருதி, தகுமான வரைத்தடைகளை விதிக்கின்ற அளவிற்கு, நிலவுறும் சட்டம் ஒன்றன் செயற்பாட்டினைப் பாதிப்பதுமில்லை; அவ்வாறு விதிக்கின்ற சட்டம் எதனையும் அரசு இயற்றுவதற்குத் தடையூறு ஆவதுமில்லை.

(4) மேற்சொன்ன கூறின் (இ) உட்கூறிலுள்ள எதுவும், அந்த உட்கூறினால் வழங்கப்படும் உரிமையினைத் துய்த்தல் பொறுத்து, இந்திய நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது ஒழுங்கமைதி இவற்றின் நலங்கருதி, தகுமான வரைத்தடைகளை விதிக்கின்ற அளவிற்கு, நிலவுறும் சட்டம் ஒன்றன் செயற்பாட்டினைப் பாதிப்பதுமில்லை; அவ்வாறு விதிக்கின்ற சட்டம் எதனையும் அரசு இயற்றுவதற்குத் தடையூறு ஆவதுமில்லை.

(5) மேற்சொன்ன கூறின் (ஈ), (உ) ஆகிய உட்கூறுகளிலுள்ள எதுவும், அந்த உட்கூறுகளினால் வழங்கப்படும் உரிமைகளில் எதனையும் துய்த்தல் பொறுத்து, பொதுமக்களின் நலங்கருதியோ பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நலங்களைப் பாதுகாப்பதற்காகவோ தகுமான வரைத்தடைகளை விதிக்கின்ற அளவிற்கு, நிலவுறும் சட்டம் ஒன்றன் செயற்பாட்டினைப் பாதிப்பதுமில்லை; அவ்வாறு விதிக்கின்ற சட்டம் எதனையும் அரசு இயற்றுவதற்குத் தடையூறு ஆவதுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/32&oldid=1465437" இலிருந்து மீள்விக்கப்பட்டது