பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை

23. மனிதரை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல் ஆகியவற்றிற்குத் தடை :

(1) மனிதரை வணிகப் பொருளாக்குதலும், "பேகார்" வழக்கமும், அது போன்ற வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் பிற வழக்கங்களும் தடைசெய்யப்படுகின்றன; மேலும், இந்த வகையத்தின் மீறுகை எதுவும், சட்டப்படி தண்டனையுறு குற்றச்செயல் ஆகும்.

(2) இந்த உறுப்பிலுள்ள எதுவும், பொது நோக்கங்களுக்காக அரசு கட்டாயப் பணியைச் சுமத்துவதற்குத் தடையூறு ஆவதில்லை. மேலும், அரசு அத்தகைய பணியைச் சுமத்துகையில் சமயம், இனம், சாதி, வகுப்பு இவற்றை மட்டுமே அல்லது இவற்றில் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக்கொண்டு எவ்வாறான வேற்றுமையும் காட்டுதல் ஆகாது.

24. தொழிற்சாலைகள் முதலியவற்றில் சிறார்களை வேலையமர்த்தம் செய்தலுக்குத் தடை :

பதினான்கு வயதுக்குக் குறைந்த சிறார் எவரையும், தொழிற்சாலை அல்லது சுரங்கம் எதிலும் வேலையில் அமர்த்துதல் ஆகாது; மேலும் பிற இடர்மிகு வேலையமர்த்தம் எதிலும் ஈடுபடுத்துதலும் ஆகாது.

சமயச் சுதந்திரத்திற்கான உரிமை

25. மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரமும், சுதந்திரமாகச் சமயநெறி ஓம்புதலும் ஒழுகுதலும் ஓதிப் பரப்புதலும் :

(1) பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு ஆகியவற்றிற்கும் இந்தப் பகுதியின் பிற வகையங்களுக்கும் உட்பட்டு, அனைவரும், மனச்சான்றுவழி ஒழுகுவதற்கான சுதந்திரத்திற்கும் சுதந்திரமாகச் சமயநெறி ஓம்புதல், ஒழுகுதல், ஒதிப்பரப்புதல் ஆகியவற்றிற்கான உரிமைக்கும் சரிசமமாக உரிமைகொண்டவர் ஆவர்.

(2) இந்த உறுப்பிலுள்ள எதுவும்-

(அ) சமயநெறி ஒழுகலாற்றுடன் இணைந்திருக்கும் பொருளியல், நிதியியல், அரசியல் எதனையும் நடவடிக்கை அல்லது சமயச் சார்பற்ற பிற நடவடிக்கை ஒழுங்குறுத்துவதான அல்லது கட்டுப்படுத்துவதான,
(ஆ) சமுதாய நலப்பாடு மற்றும் சீர்த்திருத்தத்திற்கு அல்லது பொதுமத்தன்மை வாய்ந்த இந்து சமய -நிறுவனங்களை இந்துக்களின் அனைத்து வகுப்பினருக்கும் பிரிவினருக்கும் திறந்துவிடுதலுக்கு வகைசெய்வதான

நிலவுறும் சட்டம் ஒன்றன் செயற்பாட்டைப் பாதிப்பதுமில்லை; அத்தகைய சட்டத்தை அரசு இயற்றுவதற்குத் தடையூறு ஆவதுமில்லை.

விளக்கம் I.-கிர்பான்கள் தரிப்பதும் தாங்கிச் செல்வதும் சீக்கிய சமயத்தை ஓம்புவதில் உள்ளடங்கியனவாகக் கொள்ளப்படும்.

விளக்கம் II.—(2)ஆம் கூறின் (ஆ) உட்கூறில் இந்துக்கள் என்ற சுட்டுகை, சீக்கிய, சமண அல்லது பௌத்த சமயத்தை ஓம்புகிறவர்களைச் சுட்டுவதையும் உள்ளடக்குவதாகப் பொருள்கொள்ளப்படும்; மேலும், இந்து சமய நிறுவனங்கள் என்ற சுட்டுகையும் அவ்வாறாகவே பொருள்கொள்ளப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/35&oldid=1466814" இலிருந்து மீள்விக்கப்பட்டது