பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


(4) இந்த உறுப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள உரிமை, இந்த அரசமைப்பினால் பிறவாறு வகைசெய்யப்பட்டுள்ளபடி அல்லாமல், இடைநிறுத்தி வைக்கப்படுதல் ஆகாது.

[1][32அ. ★★]

33. இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைப் படையினர் முதலானோருக்குப் பொருந்துறச் செய்கையில் அவற்றை மாற்றமைவு செய்ய நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் :

இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளில் எதனையும்—

(அ) ஆயுதப் படையினருக்கு, அல்லது
(ஆ) பொது ஒழுங்கமைதியைப் பேணும் பொறுப்புடைய படையினருக்கு, அல்லது
(இ)வேவுச்செய்தியைத் திரட்டுவதற்காக அல்லது திரட்டுவதைத் தடுப்பதற்காக அரசினால் நிறுவப்பட்ட துறையகம் அல்லது பிற அமைப்பு ஒன்றில் வேலையமர்த்தம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, அல்லது
(ஈ) (அ) முதல் (இ) வரையிலான கூறுகளில் சுட்டப்பட்டுள்ள ஆயுதப்படை, துறையகம் அல்லது அமைப்பு ஒன்றிற்காக ஏற்படுத்தப்பட்ட தொலைச்செய்தித் தொடர்பு நிறுவனத்தில் வேலையமர்த்தம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அல்லது அதனுடன் தொடர்புடையவர்களுக்கு

பொருந்துறச் செய்வதில், அவர்களுடைய கடமைகள் முறையாக ஆற்றப்படுவதையும், அவர்களிடையே ஒழுங்குக்கட்டுப்பாடு பேணிவரப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் எந்த அளவுக்கு அருக்கம் செய்யவேண்டும் அல்லது நீக்கறவு செய்யவேண்டும் என்பதை நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கலாம்.

34. வரையிடம் ஒன்றின் படைத்துறையாட்சி செல்லாற்றலில் இருக்குங்கால், இந்தப் பகுதி வழங்கும் உரிமைகள்மீதான வரைத்தடை.

இந்தப் பகுதியின் மேலே கண்ட வகையங்களில் எது எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றம் சட்டத்தினால், ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் பணியிலுள்ள எவருக்கும் அல்லது பிறர் எவருக்கும், இந்திய ஆட்சிநிலவரைக்குள் படைத்துறையாட்சி செல்லாற்றலில் இருந்துவந்த வரையிடம் எதிலும் ஒழுங்கமைதியைப் பேணுதல் அல்லது அதை மீண்டும் நிலைநாட்டுதல் தொடர்பாக அவரால் செய்யப்பட்ட எந்தச் செயலையும் பொறுத்துக் காப்பளிக்கலாம் அல்லது அத்தகைய வரையிடத்தில் படைத்துறையாட்சியின்கீழ் அளிக்கப்பட்ட தீர்ப்புத்தண்டனை, விதிக்கப்பட்ட தண்டம், ஆணையிடப்பட்ட பறிமுதல் அல்லது செய்யப்பட்ட பிற செயல் எதனையும் செல்லுந்தன்மை உடையதாக்கலாம்.

35. இந்தப் பகுதியின் வகையங்களுக்குச் செல்திறம் அளிப்பதற்காகச் சட்டமியற்றுதல் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்—

(அ)

(i) 16 ஆம் உறுப்பின் (3) ஆம் கூறு, 32 ஆம் உறுப்பின் (3) ஆம் கூறு, 33ஆம் உறுப்பு, 34 ஆம் உறுப்பு ஆகியவற்றின்படி நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தினால் வகைசெய்யப்படும் பொருட்பாடுகளில் எதனைப் பொறுத்தும்,
(ii) இந்தப் பகுதியின்படி குற்றச்செயல்கள் என விளம்பப்பட் டிருக்கிற செயல்களுக்குத் தண்டனையை வகுத்துரைப்பதற்காகவும் சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது, மாநிலச் சட்டமன்றத்திற்கு இல்லை;


  1. 1977ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து மூன்றாம் திருத்தச்) சட்டத்தின் 3 ஆம் பிரிவினால் (13-4-1978 முதல் செல்திறம் பெறுமாறு) நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/40&oldid=1469172" இலிருந்து மீள்விக்கப்பட்டது