பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


(4) நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றின் உறுப்பினர் அந்த அவையின் அனுமதியின்றி அதன் அனைத்துக் கூட்டங்களுக்கும் அறுபது நாள் காலஅளவிற்கு வாராதிருப்பாராயின், அவருடைய பதவியிடம் காலியாகிவிட்டதென அந்த அவை விளம்பலாம்:

வரம்புரையாக: அந்த அறுபது நாள் காலஅளவைக் கணக்கிடுகையில், அந்த அவையின் கூட்டத்தொடர் இறுதிசெய்யப்பட்டிருந்த காலஅளவு அல்லது தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்குமேல் அந்த அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த காலஅளவு எதனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் ஆகாது.

102. உறுப்பினர்பதவித் தகுதிக்கேடுகள் :

(1) ஒருவர் -

(அ) எந்த ஊதியப் பதவியை வகிப்பவர் உறுப்பினராயிருப்பதற்குத் தகுதிக்கேடு உறுவதில்லை என்று நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்புகிறதோ அந்தப்பதவி அல்லாத பிற ஊதியப் பதவி எதனையும் இந்திய அரசாங்கத்தின்கீழோ மாநிலம் ஒன்றன் அரசாங்கத்தின் கீழோ வகிப்பாராயின்,
(ஆ) பித்துப்பிடித்தவராக இருந்து, அத்தகையவரெனத் தகுதிறமுள்ள நீதிமன்றம் ஒன்றினால் விளம்பப்பெற்றிருப்பாராயின்,
(இ) விடுவிப்புப் பெறாத நொடிப்புநிலையராக இருப்பாராயின்,
(ஈ) இந்தியாவின் குடிமகனாக இல்லாதிருப்பாராயின் அல்லது ஓர் அயல்நாட்டின் குடிமையினைத் தம்விருப்பாகப் பெற்றிருப்பாராயின் அல்லது எவ்வகையிலேனும் ஓர் அயல்நாட்டிடம் பற்றுறவோ சார்புறவோ தமக்கு உள்ளதென ஒப்பியவராய் இருப்பாராயின்,
(உ) நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தாலோ அதன் வழியாலோ உறுப்பினராக இருப்பதற்குத் தகுதிக்கேடுற்றவராக இருப்பாராயின் அவர், நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலும் உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப் பெறுவதற்கும், உறுப்பினராக இருந்துவருவதற்கும் தகுதிக்கேடுற்றவர் ஆவார்.

விளக்கம். இந்தக் கூறினைப் பொறுத்தவரை, ஒருவர் ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் அமைச்சராயிருக்கும் காரணத்தினால் மட்டுமே அவர் இந்திய அரசாங்கத்தின்கீழோ ஊதியப்பதவி ஒன்றை வகிப்பவராகக் அத்தகைய மாநில அரசாங்கத்தின்கீழோ கொள்ளப்பெறுதல் ஆகாது.

(2) ஒருவர் பத்தாம் இணைப்புப்பட்டியலின்படி தகுதிக்கேடுற்றவராயிருப்பின், அவர், நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலும் உறுப்பினராக இருந்துவருவதற்குத் தகுதிக்கேடுற்றவர் ஆவார்.

103. உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள் பற்றிய பிரச்சினைகளின்மீது முடிபு :

(1) நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றன் உறுப்பினர் ஒருவர், 102ஆம் உறுப்பின் (1)ஆம் கூறில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிக்கேடுகளில் எதற்கேனும் உள்ளாகிவிட்டாரா என்பது பற்றிய பிரச்சினை எதுவும் எழுமாயின், அப்பிரச்சினை குடியரசுத்தலைவரின் முடிபுக்குக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும்; அவருடைய முடிபே அறுதியானது ஆகும்.

(2) அத்தகைய பிரச்சினை எதன்மீதும் முடிபு ஒன்றை வழங்குவதற்கு முன்பு, குடியரசுத்தலைவர், தேர்தல் ஆணையத்தின் கருத்துரையைப் பெற்று, அந்தக் கருத்துரையின்படியே செயலுறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/63&oldid=1469113" இலிருந்து மீள்விக்கப்பட்டது