பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


மாநிலங்களவைத் தலைவரோ, மக்களவைத் தலைவரோ, அல்லது அத்தகையவராகச் செயலுறுகின்றவரோ முதற்கண் வாக்களித்தல் ஆகாது; ஆனால், வாக்குகள் சமன்மையாக அமையும் நேர்வில், அவருக்கு அறுதிசெய் வாக்கு ஒன்று உண்டு; அதனை அவர் அளித்தலும் வேண்டும்.

(2) நாடாளுமன்ற ஈரவைகள் ஒவ்வொன்றிலும் உறுப்பினர் பதவியில் காலியிடம் எதுவும் இருந்தபோதிலும், அந்த அவை செயலுறுவதற்கு அதிகாரம் உடையது ஆகும்; மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது அவையில் அமர்ந்திருக்கவோ வாக்களிக்கவோ பிறவாறாகப் பங்குகொள்ளவோ உரிமை கொண்டிராத எவரும் அவ்வாறு செய்தார் எனத் தெரியவந்தபோதிலும் அந்நடவடிக்கைகள் செல்லுந்தன்மையுடையன ஆகும்.

(3) நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்கிறவரையில், நாடாளுமன்ற ஈரவைகளில் எதனின் கூட்டமும் அமைவுறுவதற்கான குறைவெண், அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்காக இருத்தல் வேண்டும்.

(4) ஓர் அவையின் கூட்டம் நடைபெறும்போது எச்சமயத்திலேனும் குறைவெண் இல்லாதிருப்பின், அந்த அவையை ஒத்திவைப்பதோ குறைவெண் அமைகிற வரையில் அந்தக் கூட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதோ மாநிலங்களவைத் தலைவரின் அல்லது மக்களவைத் தலைவரின் அல்லது அத்தகையவராகச் செயலுகின்றவரின் கடமை ஆகும்.

உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள்


101. பதவியிடங்களை விட்டகலுதல் :

(1) எவர் ஒருவரும் நாடாளுமன்ற ஈரவைகளிலும் உறுப்பினராக இருத்தல் ஆகாது; ஒருவர் ஈரவைகளுக்கும் உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பெற்றிருப்பாராயின், அவர், அவ்விரு அவைகளில் ஏதாவது ஒன்றில் தம் பதவியிடத்தை விட்டகலுவதற்கு நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்தல் வேண்டும்.

(2) எவர் ஒருவரும், நாடாளுமன்றம், ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் ஓர் அவை ஆகிய இரண்டிலும் உறுப்பினராக இருத்தல் ஆகாது; நாடாளுமன்றம், ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் ஓர் அவை ஆகிய இரண்டிற்கும் ஒருவர் தெரிந்தெடுக்கப்பெற்றிருப்பாராயின், அப்போது, குடியரசுத்தலைவரால் வகுக்கப்படும் விதிகளில் குறித்துரைக்கப்படும் காலஅளவு கழிவுறுவதற்கு முன்னரே, அவர் மாநிலச் சட்டமன்றத்திலுள்ள தம் பதவியிடத்தை விட்டு விலகியிருந்தாலன்றி, நாடாளுமன்றத்திலுள்ள அவருடைய பதவியிடம் அக்காலஅளவு கழிவுற்றதும் காலியாகிவிடும்.

(3) நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றின் உறுப்பினர் ஒருவர்

(அ)102ஆம் உறுப்பின் (1) ஆம் கூறில் அல்லது (2) ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட தகுதிக்கேடுகளில் எதற்கேனும் உள்ளாகிவிடுவாராயின், அல்லது
(ஆ) மாநிலங்களவைத் தலைவருக்கோ, நேர்வுக்கேற்ப, மக்களவைத் தலைவருக்கோ தம் கையொப்பமிட்டு எழுத்துவழிப் பதவி விலகுவதாகத் தெரிவித்து அவ்வாறு அவர் பதவி விலகுதல் மாநிலங்களவைத் தலைவராலோ, நேர்வுக்கேற்ப, மக்களவைத் தலைவராலோ ஏற்றுக்கொள்ளப்படுமாயின்,

அதன்மேல் அவருடைய பதவியிடம் காலியானதாகிவிடும்:

வரம்புரையாக: (ஆ) உட்கூறில் சுட்டப்பட்ட பதவிவிலகலைப் பொறுத்தவரை, மாநிலங்களவைத் தலைவரோ, நேர்வுக்கேற்ப, மக்களவைத் தலைவரோ தாம் பெற்ற தகவலிருந்தும் பிறவற்றைக் கொண்டும் தாம் தக்கதெனக் கருதும் விசாரணைக்குப் பின்பு, அந்தப் பதவிவிலகல் அவரால் தம்விருப்பாகச் செய்யப்பட்டதன்று அல்லது உண்மையானதன்று எனத் தெளிவுறக்காண்பாராயின், அந்தப் பதவிவிலகலை அவர் ஏற்றுக்கொள்ளுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/62&oldid=1469114" இலிருந்து மீள்விக்கப்பட்டது