பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


(2) மக்களவையில், அவைத் தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும்போது, அவைத் தலைவர் அந்த அவையில் உரையாற்றுவதற்கும், பிறவகையில் அதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கும் உரிமை உடையவர் ஆவார்; மேலும், 100ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், அவர் அத்தகைய தீர்மானத்தின் மீதும், அது தொடர்பான நடவடிக்கைகளில் எழும் பிற எந்தப் பொருட்பாட்டின்மீதும் முதற்கண் மட்டுமே வாக்களிப்பதற்கு உரிமைகொண்டவர் ஆவாரேயன்றி, வாக்குகள் சமன்மையாக அமையும் நேர்வில், வாக்களிப்பதற்கு உரிமை கொண்டவர் ஆகார்.

97. மாநிலங்களவைத் தலைவர், துணைத் தலைவர், மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும், படித்தொகைகளும் :

மாநிலங்களவைத் தலைவர், துணைத் தலைவர், மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு முறையே நாடாளுமன்றம் சட்டத்தினால் நிருணயிக்கும் வரையூதியங்களும் படித்தொகைகளும் வழங்கப்படும்; அவ்வாறு அதன்பொருட்டு வகைசெய்யப்படும் வரையில், இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியங்களும் படித்தொகைகளும் வழங்கப்பட்டு வரும்.

98. நாடாளுமன்றத்தின் செயலகம் :

(1) நாடாளுமன்றத்தின் அவை ஒவ்வொன்றும் தனித்தனியே செயலகப் பணியாளர் தொகுதி ஒன்றைக் கொண்டிருக்கும்:

வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், நாடாளுமன்றத்தின் ஈரவைகளுக்கும் பொதுவான பதவிகள் உருவாக்கப்படுவதைத் தடையூறு செய்வதாகப் பொருள்கொள்ளப்படுதல் ஆகாது.

(2) நாடாளுமன்ற ஈரவைகளில் எதனின் செயலகப் பணியாளர் தொகுதிக்கும் ஆளெடுப்பதையும், அதற்கு அமர்த்தப்பெறுபவர்களின் பணி வரைக்கட்டுகளையும் நாடாளுமன்றம் சட்டத்தினால் ஒழுங்குறுத்தலாம்.

(3) (2)ஆம் கூறின்படி நாடாளுமன்றம் வகைசெய்கிற வரையில், குடியரசுத்தலைவர், மக்களவைத் தலைவருடன் அல்லது, நேர்வுக்கேற்ப, மாநிலங்களவைத் தலைவருடன் கலந்தாய்வுசெய்த பின்பு, மக்களவையின் அல்லது மாநிலங்களவையின் செயலகப் பணியாளர் தொகுதிக்கு ஆளெடுப்பதையும் அதற்கு அமர்த்தப்பெறுபவர்களின் பணிவரைக்கட்டுகளையும் ஒழுங்குறுத்தும் விதிகளை வகுக்கலாம்; மற்றும் அவ்வாறு வகுக்கப்படும் விதிகள், மேற்சொன்ன கூறின்படி இயற்றப்படும் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டுச் செல்திறம் உடையன ஆகும்.

அலுவல் நடத்துமுற

99. உறுப்பினர்களுக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி :

நாடாளுமன்ற ஈரவைகளின் உறுப்பினர் ஒவ்வொருவரும், தம் பதவியினை ஏற்று அமரும் முன்பு, குடியரசுத்தலைவரின் அல்லது அதன்பொருட்டு அவரால் அமர்த்தப்பெற்ற ஒருவரின் முன்னிலையில் மூன்றாம் இணைப்புப் பட்டியலில் அதற்கென உள்ள சொன்முறையில் ஓர் ஆணைமொழியை அல்லது உறுதிமொழியை ஏற்றுக் கையொப்பமிடுதல் வேண்டும்.

100. நாடாளுமன்ற அவைகளில் வாக்களித்தல், காலியிடங்கள் இருந்தபோதிலும் செயலுறுவதற்கு அவைகளுக்குள்ள அதிகாரம் மற்றும் குறைவெண் :

(1) இந்த அரசமைப்பில் பிறவாறு வகைசெய்யப்பட்டிருப்பது நீங்கலாக, ஈரவைகளில் ஒன்றன் அமர்விலோ அவைகளின் கூட்டமர்விலோ எழும் வினாக்கள் அனைத்தும், மக்களவைத் தலைவரையும், மாநிலங்களவைத் தலைவராகவோ, மக்களவைத் தலைவராகவோ செயலுறுகின்றவரையும் தவிர்த்து, வந்திருந்து வாக்களிக்கும் ஏனைய உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/61&oldid=1469117" இலிருந்து மீள்விக்கப்பட்டது