பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


93. மக்களவைத் தலைவரும் துணைத் தலைவரும் :

மக்களவை, அந்த அவையின் உறுப்பினர்கள் இருவரை முறையே அதன் தலைவராகவும் துணைத் தலைவராகவும், கூடியவிரைவில், தெரிந்தெடுத்தல் வேண்டும்; மேலும், அவைத் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவி காலியாகுந்தொறும், மற்றோர் உறுப்பினரை, அதன் தலைவராக அல்லது, நேர்வுக்கேற்ப, துணைத் தலைவராக அந்த அவை தெரிந்தெடுத்தல் வேண்டும்.

94. மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் பதவியை விட்டகலுதலும் பதவி விலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும் :

மக்களவைத் தலைவராகவோ துணைத் தலைவராகவோ பதவி வகிக்கும் ஓர் உறுப்பினர்—

(அ) மக்களவையின் உறுப்பினராக இருப்பது அற்றுப்போய்விடின், அவர் தம் பதவியை விட்டகலுதல் வேண்டும்;
(ஆ) அந்த உறுப்பினர் அவைத் தலைவராக இருப்பின், துணைத் தலைவருக்கும், அந்த உறுப்பினர் துணைத் தலைவராக இருப்பின், அவைத் தலைவருக்கும், எச்சமயத்திலும், தம் கையொப்பமிட்டு எழுத்துவழித் தெரிவித்து, தம் பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம்; மற்றும்
(இ) மக்களவையின் அப்போதைய அனைத்து உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் அந்த அவையில் நிறைவேற்றும் தீர்மானம் ஒன்றினால் அவருடைய பதவியிலிருந்து அகற்றப்படலாம்:

வரம்புரையாக: (இ) கூறினைப் பொறுத்த தீர்மானம் எதுவும், அத்தீர்மானத்தை முன்மொழியவிருக்கும் கருத்தினைத் தெரிவித்துப் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் முன்னறிவிப்புக் கொடுத்திருந்தாலன்றி, முன்மொழியப்படுதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக: மக்களவை கலைக்கப்படுந்தோறும், அவ்வாறு கலைக்கப்பட்டதன் பிள்பு, அடுத்து மக்களவையின் முதல் கூட்டம் தொடங்குவதை ஒட்டிமுன்பு வரையில், அவைத் தலைவர் தம் பதவியை விட்டகல வேண்டியதில்லை.

95. மக்களவைத் தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ தலைவராகச் செயலுறவோ துணைத் தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் :

(1) மக்களவைத் தலைவரின் பதவி காலியாக இருக்குங்கால், அப்பதவிக்குற்ற கடமைகளை, அலவத் துணைத் தலைவரும், அவைத் துணைத் தலைவர் பதவியும் காலியாக இருப்பின், குடியரசுத்தலைவர் அதன்பொருட்டு அமர்த்தும் மக்களவையின் உறுப்பினர் எவரும் புரிந்து வருதல்வேண்டும்.

(2) மக்களவையின் அமர்வு எதிலும், அவைத் தலைவர் இல்லாதபோது துணைத் தலைவரும், அவரும் இல்லாதிருப்பின், அவையின் நெறிமுறை விதிகளின்படி தீர்மானிக்கப்பெறும் உறுப்பினர் எவரும், அத்தகையவரும் இல்லாதிருப்பின், அந்த அவையினால் தீர்மானிக்கப்பெறும் பிற உறுப்பினர் எவரும் அவையின் தலைவராகச் செயலுறுதல் வேண்டும்.

96. மக்களவைத் தலைவரை அல்லது துணைத் தலைவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது அவர் தலைமை வகித்தல் ஆகாது :

(1) மக்களவையில் அமர்வு எதிலும், அவைத் தலைவரை அவருடைய பதவியிலிருந்து அசுற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது, அவைத்தலைவரும் அல்லது துணைத் தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது துணைத் தலைவரும், அவர் அந்த அவையில் இருந்தபோதிலும், தலைமை வகித்தல் ஆகாது; மேலும், அத்தகைய ஒவ்வோர் அமர்வுக்கும், 95 ஆம் உறுப்பின் (2)ஆம் கூறின் வகையங்கள், அவைத் தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, துணைத் தலைவர் இல்லாதிருக்கிற ஓர் அமர்வுக்குப் பொருந்துறுவனபோன்றே பொருந்துறுவன ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/60&oldid=1469118" இலிருந்து மீள்விக்கப்பட்டது