பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


90. மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியை விட்டகலுதலும் பதவி விலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும் :

மாநிலங்களவைத் துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் ஓர் உறுப்பினர்—

(அ) மாநிலங்களவையின் உறுப்பினராக இருப்பது அற்றுப் போய்விடின் அவர் தம் பதவியை விட்டகலுதல் வேண்டும்;
(ஆ) மாநிலங்களவைத் தலைவருக்குத் தம் கையொப்பமிட்டு எழுத்து வழித் தெரிவித்து, தம் பதவியை விட்டு விலகிக்கொள்ளலாம்; மற்றும்
(இ)மாநிலங்களவையின் அப்போதைய அனைத்து உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் அந்த அவையில் நிறைவேற்றும் தீர்மானம் ஒன்றினால் அவருடைய பதவியிலிருந்து அகற்றப்படலாம் :

வரம்புரையாக: (இ) கூறினைப் பொறுத்த தீர்மானம் எதுவும் அத்தீர்மானத்தை முன் மொழியவிருக்கும் கருத்தினைத் தெரிவித்துப் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் முன்னறிவிப்புக் கொடுத்திருந்தாலன்றி, முன்மொழியப்படுதல் ஆகாது.

91. மாநிலங்களவைத் தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ தலைவராகச் செயலுறவோ துணைத் தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் :

(1) மாநிலங்களவைத் தலைவரின் பதவி காலியாக இருக்குங்கால் அல்லது குடியரசுத் துணைத் தலைவர் குடியரசுத்தலைவராகச் செயலுறும் காலத்தில் அல்லது குடியரசுத்தலைவரின் பதவிப்பணிகளை ஆற்றிவரும் காலத்தில், மாநிலங்களவைத் தலைவரின் பதவிக்குற்ற கடமைகளை, அவைத் துணைத் தலைவரும், அவைத் துணைத் தலைவர் பதவியும் காலியாக இருப்பின், குடியரசுத்தலைவர் அதன்பொருட்டு அமர்த்தும் மாநிலங்களவையின் உறுப்பினர் எவரும் புரிந்துவருதல் வேண்டும்.

(2) மாநிலங்களவையின் அமர்வு எதிலும் அவைத்தலைவர் இல்லாதபோது துணைத்தலைவரும், அவரும் இல்லாதிருப்பின், அவையின் நெறிமுறை விதிகளின்படி தீர்மானிக்கப்பெறும் உறுப்பினர் எவரும், அத்தகையவரும் இல்லாதிருப்பின், அவையினால் தீர்மானிக்கப்பெறும் பிற உறுப்பினர் எவரும் அவைத் தலைவராகச் செயலுறுதல்வேண்டும்.

92. மாநிலங்களவைத் தலைவரை அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது அவர் தலைமை வகித்தல் ஆகாது :

(1) மாநிலங்களவையின் அமர்வு எதிலும், குடியரசுத் துணைத் தலைவரை, அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும்போது அவைத் தலைவரும் அல்லது துணைத் தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது துணைத் தலைவரும், அவர் அந்த அவையில் இருந்தபோதிலும், தலைமை வகித்தல் ஆகாது; மேலும், அத்தகைய ஒவ்வோர் அமர்வுக்கும், 91ஆம் உறுப்பின் (2)ஆம் கூறின் வகையங்கள், அவைத்தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, துணைத்தலைவர் இல்லாதிருக்கிற ஓர் அமர்வுக்குப் பொருந்துறுவனபோன்றே பொருந்துறுவன ஆகும்.

(2) மாநிலங்களவையில் குடியரசுத் துணைத் தலைவரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது, அவைத் தலைவர் அந்த அவையில் உரையாற்றுவதற்கும், பிற வகையில் அதன் நடவடிக்கைகளில் பங்குகொள்வதற்கும் உரிமை உடையவர் ஆவார்; மேலும், 100 ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், அவர் அத்தகைய தீர்மானத்தின் மீதும் அது தொடர்பான நடவடிக்கைகளில் எழும் பிற எந்தப் பொருட்பாட்டின் மீதும் எவ்வகையிலும் வாக்களிப்பதற்கு உரிமைகொண்டவர் ஆகார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/59&oldid=1469119" இலிருந்து மீள்விக்கப்பட்டது