பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


சட்டமியற்றுவதற்கான நெறிமுறை


107. சட்டமுன்வடிவுகளை அறிமுகம் செய்தலும் நிறைவேற்றுதலும் பற்றிய வகையங்கள் :

(1) பணச் சட்டமுன்வடிவுகள், பிற நிதிச் சட்டமுன்வடிவுகள் இவற்றைப் பொறுத்த, 109, 117 ஆகிய உறுப்புகளின் வகையங்களுக்கு உட்பட்டு, சட்டமுன்வடிவு எதுவும், நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலும் முதலில் கொண்டு வரப்படலாம்.

(2) 108, 109 ஆகிய உறுப்புகளின் வகையங்களுக்கு உட்பட்டு, திருத்தம் ஏதும் இல்லாமல் அல்லது நாடாளுமன்ற ஈரவைகளும் ஏற்றுக்கொண்ட திருத்தங்களை மட்டும் கொண்டு, ஒரு சட்டமுன்வடிவை ஈரவைகளும் ஏற்றுக்கொண்டிருந்தாலன்றி, அது ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

(3) நாடாளுமன்றத்தின் ஓர்விலுள்ள ஒரு சட்டமுன்வடிவு, அதன் அவைகளின் கூட்டத்தொடர் இறுதிசெய்யப்படுவதன் காரணத்தால் அற்றுப்போவதில்லை.

(4) மக்களவையால் நிறைவேற்றப்படாதநிலையில் மாநிலங்களவையின் ஓர்விலுள்ள ஒரு சட்டமுன்வடிவு, மக்களவை கலைக்கப்படுமாயினும் அற்றுப்போவதில்லை.

(5) மக்களவையின் ஓர்விலுள்ள அல்லது மக்களவையால் நிறைவேற்றப்பட்டிருந்து, மாநிலங்களவையின் ஓர்விலுள்ள ஒரு சட்டமுன்வடிவு, மக்களவை கலைக்கப்படுவதன்மேல், 108ஆம் உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, அற்றுப்போகும்.

108. குறித்தசில நேர்வுகளில் ஈரவைகளின் கூட்டமர்வு :

(1) ஒரு சட்டமுன்வடிவு ஓர் அவையால் நிறைவேற்றப்பட்டிருந்து, மறுஅவைக்கு அனுப்பப்பட்ட பின்பு

(அ) அச்சட்டமுன்வடிவு, அந்த மறுஅவையால் மறுக்கப்படுமாயின், அல்லது
(ஆ) அச்சட்டமுன்வடிவிற்கான திருத்தங்கள் குறித்த அந்த அவைகள் இறுதியாக வேறுபடுமாயின், அல்லது
(இ) அந்த மறுஅவை அச்சட்டமுன்வடிவைப் பெற்ற தேதியிலிருந்து, அச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படாமலேயே ஆறு மாதங்களுக்குமேல் கழிந்திருக்குமாயின்

மக்களவை கலைக்கப்பட்டதன் காரணமாக அச்சட்டமுன்வடிவு அற்றுப்போனாலன்றி, குடியரசுத்தலைவர், அச்சட்டமுன்வடிவைப் பற்றிக் கலந்தாராய்ந்து வாக்களிக்கும் பொருட்டு அந்த அவைகளை ஒரு கூட்டமர்வாகக் கூடுமாறு தாம் அழைக்கக் கருதியுள்ளதை, அந்த அவைகள் அமர்விலிருப்பின், செய்தியுரை வாயிலாகவோ அமர்வில் இல்லாதிருப்பின் பொது அறிவிக்கை வாயிலாகவோ அந்த அவைகளுக்கு அறிவிக்கலாம்:

வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், பணச் சட்டமுன்வடிவுக்குப் பொருந்துறுவதில்லை.

(2). (1) ஆம் கூறில் சுட்டப்பட்ட ஆறு மாதக் காலஅளவைக் கணக்கிடுகையில், அந்தக் கூறின் (இ) உட்கூறில் சுட்டப்பட்ட அந்த அவையின் கூட்டத்தொடர் இறுதிசெய்யப்பட்ட காலஅளவையும் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்குமேல் ஒத்திவைக்கப்பட்டிருந்த காலஅளவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் ஆகாது.

(3) குடியரசுத்தலைவர், ஈரவைகளையும் கூட்டமர்வாகக் கூடுமாறு தாம் அழைக்கக் கருதியுள்ளதை (1) ஆம் கூறின்படி அறிவித்திருக்குமிடத்து, ஈரவைகளில் எதுவும், அச்சட்டமுன்வடிவின் மீதான நடவடிக்கையை மேற்கொண்டு தொடர்தல் ஆகாது; மேலும், குடியரசுத்தலைவர், தம் அறிவிக்கைத் தேதிக்குப் பின்பு, எச்சமயத்திலும் அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்ட காரணத்திற்காகக் கூட்டமர்வாகக் கூடுமாறு அந்த அவைகளுக்கு அழைப்பாணை விடுக்கலாம்; அவர் அவ்வாறு செய்வாராயின், அந்த அவைகள் அதற்கிணங்க கூடுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/65&oldid=1469111" இலிருந்து மீள்விக்கப்பட்டது