பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


(4) ஈரவைகளின் கூட்டமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்கள், எவையேனுமிருப்பின், அவற்றுடன் சேர்த்து அச்சட்டமுன்வடிவு, ஈரவைகளின் மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரால் அக்கூட்டமர்வில் நிறைவேற்றப்படுமாயின், அது, இந்த அரசமைப்பைப் பொறுத்தவரை, ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும்:

வரம்புரையாக: கூட்டமர்வு ஒன்றில்—

(அ) அச்சட்டமுன்வடிவு ஓர் அவையினால் நிறைவேற்றப்பட்டிருந்து, மறுஅவையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படாமலும் அது முதலில் கொண்டுவரப்பட்ட அவைக்குத் திருப்பியனுப்பப் படாமலும் இருக்குமாயின், அச்சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலத்தாழ்வு காரணமாகத் தேவைப்படும் திருத்தங்கள் (எவையேனுமிருப்பின் அவை) அல்லாத பிற திருத்தம் எதுவும், அச்சட்டமுன்வடிவுக்குக் கொணரப்படுதல் ஆகாது;
(ஆ) அச்சட்டமுன்வடிவு அவ்வாறு நிறைவேற்றப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டிருக்குமாயின், மேற்சொன்ன அத்திருத்தங்களும் ஈரவைகளும் ஏற்றுக்கொள்ளாத பொருட்பாடுகள் பொறுத்த பிற திருத்தங்களும் மட்டுமே அச்சட்டமுன்வடிவுக்குக் கொணரப்படுதல் வேண்டும்:

மேலும், இந்தக் கூறின்படி அனுமதிக்கத்தக்க திருத்தங்கள் எவை என்பதைப் பொறுத்து, தலைமைவகிப்பவரின் முடிபே அறுதியானது ஆகும்.

(5)கூட்டமர்வாகக் கூடுமாறு தாம் அழைக்கக் கருதியுள்ளதைக் குறித்துக் குடியரசுத்தலைவர் அறிவிக்கை விடுத்த பின்னர், மக்களவையைக் கலைக்க நேர்ந்தாலும்; இந்த உறுப்பின்படி கூட்டமர்வாகக் கூடி அதில் அச்சட்டமுன்வடிவை நிறைவேற்றலாம்.

109. பணச் சட்டமுன்வடிவுகள் பொறுத்த தனியுறு நெறிமுறை :

(1) பணச் சட்டமுன்வடிவு எதனையும் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்துதல் ஆகாது.

(2) பணச் சட்டமுன்வடிவு எதுவும், மக்களவையினால் நிறைவேற்றப்பட்ட பின்பு மாநிலங்களவைக்கு அதன் பரிந்துரைகளுக்காக அனுப்பப்படுதல் வேண்டும்; மாநிலங்களவை, அச்சட்டமுன்வடிவைப் பெற்ற தேதியிலிருந்து, பதினான்கு நாள் காலஅளவிற்குள் அச்சட்டமுன்வடிவை மக்களவைக்குத் தன் பரிந்துரைகளுடன் திருப்பியனுப்புதல் வேண்டும்; அதன்மேல், மக்களவை, மாநிலங்களவையினால் செய்யப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்கமறுக்கலாம்.

(3) மாநிலங்களவையின் பரிந்துரைகளில் எதனையும் மக்களவை ஏற்றுக்கொள்ளுமாயின், மாநிலங்களவையினால் பரிந்துரை செய்யப்பட்டு மக்களவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் அந்தப் பணச் சட்டமுன்வடிவு ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும்.

(4) மாநிலங்களவையின் பரிந்துரைகளில் எதனையும் மக்களவை ஏற்றுக்கொள்ளாவிடின், அந்தப் பணச் சட்டமுன்வடிவு, மாநிலங்களவை பரிந்துரை செய்த திருத்தங்களில் எதுவுமின்றி, மக்களவையால் நிறைவேற்றப்பட்ட வடிவத்திலேயே ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும்.

(5) மக்களவையால் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அதன் பரிந்துரைகளுக்காக அனுப்பப்பட்ட ஒரு பணச் சட்டமுன்வடிவு, மேற்சொன்ன பதினான்கு நாள் காலஅளவிற்குள் மக்களவைக்குத் திருப்பி அனுப்பப்படாவிடின், அந்தக் காலஅளவு கழிவுற்றதும், அச்சட்டமுன்வடிவு, மக்களவையால் நிறைவேற்றப்பட்ட வடிவத்திலேயே ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/66&oldid=1469109" இலிருந்து மீள்விக்கப்பட்டது