பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


110. "பணச் சட்டமுன்வடிவுகள்” என்பதன் பொருள்வரையறை :

(1) இந்த அத்தியாயத்தைப் பொறுத்தவரை, ஒரு சட்டமுன்வடிவு, பின்வரும் பொருட்பாடுகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் பற்றிய வகையங்களை மட்டுமே கொண்டிருப்பதாயின், அது ஒரு பணச் சட்டமுன்வடிவு எனக் கொள்ளப்படும்:-

(அ) வரி எதனையும் விதித்தல், நீக்குதல், குறைத்தல், மாற்றுதல் அல்லது ஒழுங்குறுத்துதல்;
(ஆ) இந்திய அரசாங்கத்தால் பணம் கடன் வாங்கப்படுவதை அல்லது பொறுப்புறுதி எதுவும் அளிக்கப்படுவதை ஒழுங்குறுத்துதல் அல்லது இந்திய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள அல்லது பொறுப்பேற்கவுள்ள நிதிபற்றிய கடமைப்பாடுகள் எவற்றையும் பொறுத்த சட்டத்தைத் திருத்தம் செய்தல்;
(இ) இந்தியத் திரள்நிதியத்தை அல்லது எதிரதாக்காப்பு
நிதியத்தைக் கையடைவுகொள்ளல், அத்தகைய நிதியம் எதிலும் பணம் செலுத்துதல் அல்லது அதிலிருந்து பணம் எடுத்தல்;
(ஈ) இந்தியத் திரள்நிதியத்தினின்றும் பணம் ஒதுக்கீடு செய்தல்;
(உ)செலவினம் எதனையும் இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினம் என விளம்புதல் அல்லது அத்தகைய செலவினத் தொகை எதனையும் கூடுதலாக்குதல்;
(ஊ) இந்தியத் திரள்நிதியத்தின் அல்லது இந்திய அரசுப் பொதுக்கணக்கின் பொருட்டு பணம் பெறுதல் அல்லது அத்தகைய பணத்தைக் கையடைவுகொள்ளல் அல்லது வழங்குதல் அல்லது ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்தல்; அல்லது
(எ) (அ) முதல் (ஊ) வரையுள்ள உட்கூறுகளில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளில் எதனையும் சார்ந்த ஒரு பொருட்பாடு.

(2) ஒரு சட்டமுன்வடிவு அபராதங்களை அல்லது பிற பணத்தண்டங்களை விதிப்பதற்கு அல்லது உரிமங்களுக்கான கட்டணங்களையோ செய்யப்பட்ட பணிகளுக்கான கட்டணங்களையோ கோருவதற்கும் செலுத்துவதற்கும் அது வகைசெய்கிறது என்ற காரணத்தால் மட்டுமோ, உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது குழுமம் ஒன்று, உள்ளாட்சி நோக்கங்களுக்காக வரி எதனையும் விதிப்பதற்கு, நீக்குவதற்கு, குறைப்பதற்கு, மாற்றுவதற்கு அல்லது ஒழுங்குறுத்துவதற்கு அது வகைசெய்கிறது என்ற காரணத்தாலோ அதை ஒரு பணச் சட்டமுன்வடிவு எனக் கொள்ளுதல் ஆகாது.

(3) ஒரு சட்டமுன்வடிவு, பணச் சட்டமுன்வடிவா இல்லையா என்னும் பிரச்சினை ஒன்று எழுமாயின், அதன்மேல் மக்களவைத் தலைவர் அளிக்கும் முடிபே அறுதியானது ஆகும்.

(4) ஒவ்வொரு பணச் சட்டமுன்வடிவும் 109ஆம் உறுப்பின்படி மாநிலங்களவைக்கு அனுப்பப்படும்போதும், 111ஆம் உறுப்பின்படி ஏற்பிசைவுக்காகக் குடியரசுத்தலைவரிடம் முன்னிடப்படும்போதும், அது ஒரு பணச்சட்டமுன்வடிவு என மக்களவைத் தலைவர் கையொப்பமிட்ட ஓர் உறுதிச்சான்று மேற்குறிப்பாக அதன்மீது எழுதப்படுதல் வேண்டும்.

111. சட்டமுன்வடிவுகளுக்கு ஏற்பிசைவு :

ஒரு சட்டமுன்வடிவு நாடாளுமன்ற அவைகளால் நிறைவேற்றப்பட்டதன்மேல், அது குடியரசுத்தலைவரிடம் முன்னிடப்படுதல் வேண்டும்; குடியரசுத்தலைவர், தாம் அச்சட்டமுன்வடிவுக்கு ஏற்பிசைவு அளிப்பதாகவோ அதற்கு ஏற்பிசைவு அளிக்க மறுப்பதாகவோ விளம்புவார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/67&oldid=1469108" இலிருந்து மீள்விக்கப்பட்டது