பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


(7) உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த எவரும், இந்திய ஆட்சி நிலவரைக்குள் உள்ள நீதிமன்றம் எதிலும் அல்லது அதிகாரஅமைப்பு எதன் முன்பும் வழக்குரைஞராக வாதிடுதலோ செயலுறுதலோ ஆகாது.

125. நீதிபதிகளின் வரையூதியங்கள் முதலியன :

(1) உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கும் வரையூதியங்கள் வழங்கப்படும்; அவ்வாறு அதன்பொருட்டு வகைசெய்யப்படும் வரையிலும், இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியங்கள் வழங்கப்பட்டு வரும்.

(2) நீதிபதி ஒவ்வொருவரும், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தாலோ அதன் வழியாலோ தீர்மானிக்கப்படும் மதிப்புரிமைகள், படித்தொகைகள், வாராமை விடுப்பும் ஓய்வூதியமும் பொறுத்த உரிமைகள் ஆகியவற்றிற்கு உரிமைகொண்டவர் ஆவார்; அவ்வாறு தீர்மானிக்கப்படும் வரையிலும், இரண்டாம் இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள மதிப்புரிமைகள், படித்தொகைகள் உரிமைகள் ஆகியவற்றிற்கு அவர் உரிமைகொண்டவராய் இருப்பார்:

வரம்புரையாக : நீதிபதி ஒருவரின் மதிப்புரிமைகளோ படித்தொகைகளோ, வாராமை விடுப்பு அல்லது ஓய்வூதியம் பொறுத்த அவருடைய உரிமைகளோ அவர் அமர்த்தப்பெற்ற பின்பு அவருக்குப் பாதகமான வகையில் மாறுதல் செய்யப்படுதல் ஆகாது.

126. செயலமர் தலைமை நீதிபதியை அமர்த்துதல் :

இந்தியத் தலைமை நீதிபதிப் பதவி காலியாக இருக்கும்போதும், தலைமை நீதிபதி தம் இருத்தலின்மை அல்லது பிறவாறான காரணத்தால் தமது பதவிக்குரிய கடமைகளைப் புரிய இயலாதிருக்கும்போதும் குடியரசுத்தலைவர் அதன் பொருட்டு அமர்த்தும் அந்நீதிமன்றத்துப் பிற நீதிபதிகளில் ஒருவர் அப்பதவிக்குரிய கடமைகளைப் புரிந்துவருவார்.

127. குறித்தபணி நீதிபதிகளை அமர்த்துதல் :

(1) உச்ச நீதிமன்றத்தின் அமர்வு ஒன்றை நடத்தவோ தொடர்ந்து நடத்திவரவோ தேவைப்படும் நீதிபதிகளின் குறைவெண் எச்சமயத்திலேனும் இல்லாமற்போகுமேயானால், இந்தியத் தலைமை நீதிபதி, குடியரசுத்தலைவரின் முன்னிசைவுடன், தொடர்புடைய உயர் உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்தாய்வு செய்த பின்னர், நீதிபதியாக அமர்த்தப்பெறுவதற்கு உரிய தகுதிப்பாடுள்ள அந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைத் தாம் பெயர் குறித்து அவரைத் தேவைப்படும் காலஅளவுக்கு, குறித்தபணி நீதிபதியாக உச்ச நீதிமன்ற அமர்வுகளில் பணியாற்றுமாறு எழுத்துவழிக் கேட்டுக்கொள்ளலாம்.

(2) அவ்வாறு பெயர் குறிக்கப்பட்ட நீதிபதி, தமது பணி தேவைப்படும் போதும் தேவைப்படும் காலஅளவிற்கும் உச்ச நீதிமன்ற அமர்வுகளில் பணியாற்றுதல் அவருடைய பதவிக்குரிய பிற கடமைகளில் முந்துறு கடமை ஆகும்; அவ்வாறு பணியாற்றுகையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்குற்ற அதிகாரவரம்பு, அதிகாரங்கள், மதிப்புரிமைகள் அனைத்தையும் அவர் உடையவராகி உச்ச நீதிமன்ற நீதிபதியின் கடமைகளை ஆற்றிவருவார்.

128. ஓய்வுபெற்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றங்களின் அமர்வுகளில் பணியாற்றுதல் :

இந்த அத்தியாயத்தில் எது எவ்வாறிருப்பினும், இந்தியத் தலைமை நீதிபதி, எச்சமயத்திலும், குடியரசுத்தலைவரின் முன்னிசைவுடன் உச்ச நீதிமன்றத்தில் அல்லது கூட்டாட்சிய நீதிமன்றத்தில் நீதிபதி பதவி வகித்த ஒருவரையோ, ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி வகித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்பெறுவதற்கு உரிய தகுதிப்பாடுள்ள ஒருவரையோ உச்ச நீதிமன்ற நீதிபதியாக அமர்ந்து செயலுறும்படிக் கேட்டுக்கொள்ளலாம்: அவ்வாறு கேட்டுக்கொள்ளப்பெற்ற ஒவ்வொருவரும் அதன்படி அமர்ந்து செயலுறுங்கால், குடியரசுத்தலைவர் ஆணையினால் தீர்மானிக்கும் படித்தொகைகளுக்கு உரிமை கொண்டிருப்பதோடு, அந்நீதிமன்ற நீதிபதிக்குற்ற அதிகாரவரம்பு, அதிகாரங்கள், மதிப்புரிமைகள் அனைத்தையும் உடையவர் ஆவார்: ஆனால், மற்றப்படி அவர் அந்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாகக் கொள்ளப்பெறுவதில்லை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/75&oldid=1467655" இலிருந்து மீள்விக்கப்பட்டது